சினிமா செய்திகள்

இறங்கி வந்த தலைவி படக்குழு – சிக்கல் தீர்ந்தது

கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது.

இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம்.

இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

திரையரங்குகளில் வெளியாகும் படங்களை நூறுநாட்கள் கழித்துத்தான் இணையத்தில் வெளியிடவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை.அதன்பின், குறைந்தது ஐம்பது நாட்கள் இடைவெளியாவது வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.

இப்போது இந்தப்படத்துக்காக மேலும் இறங்கிவந்து நான்கு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடுங்கள் என்று கேட்கிறார்களாம்.ஆனால் இரண்டு வாரங்களில் வெளியிடும் முடிவில் படக்குழு உறுதியாக இருந்ததாம். அப்படியானால் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்லிவிட்டனர்.

இதனால், திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே தலைவி படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என தலைவி படக்குழு உறுதிமொழிக் கடிதம் கொடுத்திருக்கிறதாம்.

இதனால், அறிவித்தபடி செப்டம்பர் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.

Related Posts