புதிய படங்கள் வரிசைகட்ட பழைய படத்தைத் தொடங்கத் தீவிரம் காட்டும் ஆர்யா. ஏன்?
ஆர்யா இப்போது சுந்தர்.சி யின் அரண்மணை 3 மற்றும் ஆனந்த்சங்கர் இயக்கத்தில் விஷாலுடன் இணைந்துள்ள எனிமி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படங்களின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துவிட்டது.
இவற்றிற்கடுத்து இயக்குநர்கள் சாந்தகுமார் மற்றும் சக்திசெளந்தர்ராஜன் ஆகியோர் இயக்கத்தில் நடிப்பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
அவற்றில் ஏதாவதொரு படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், புதியபடங்களில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு ஏற்கெனவே தொடங்கி நின்று போன படத்தை மீண்டும் தொடங்க தீவிர முயற்சி எடுத்து வருகிறாராம் ஆர்யா.
சில ஆண்டுகளுக்கு முன் அமீர் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் சந்தனதேவன் என்றொரு படம் தொடங்கப்பட்டது. பலநாட்கள் படப்பிடிப்பு நடந்திருக்கிறது. அதோடு அப்படம் நின்று போனது.
திட்டமிட்டதைவிட அதிகச் செலவு ஆகிவிட்டது என்பதால் அப்படம் நின்று போனதாகச் சொல்லப்பட்டது.
இப்போது அந்தப் படத்தைத்தான் மீண்டும் தொடங்கும் முயற்சியில் இருக்கிறாராம் ஆர்யா.
போதையேறி புத்திமாறி படத்தைத் தயாரித்து வெளியிட்ட ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்போது உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்தைத் தயாரித்துவருகிறது.
இந்நிறுவனம் இப்போது சந்தனதேவன் படத்தைப் பொறுப்பெடுத்து தயாரிக்க முன்வந்திருக்கிறதாம்.
ஒப்புக்கொண்ட புதியபடங்கள் இருக்கும் நிலையிலும் சில பெரிய தயாரிப்பு நிறுவ்னங்கள் ஆர்யாவை வைத்துப் புதிய படம் தொடங்க ஆர்வம் காட்டும் நேரத்தில் ஏற்கெனவே நின்று போன படத்தைத் தொடங்க ஆர்யா தீவிரம் காட்டுவது எதனால் என்றால்? அவர் தம்பிதான் காரணம் என்கிறார்கள்.
ஆர்யாவின் தம்பி சத்யா சில படங்களில் நடித்தும் பெரிதாகக் கவனம் பெறவில்லை. அவர் சந்தனதேவன் படத்தில் முக்கிய வேடமொன்றில் நடிக்கிறாராம். அப்படம் வெளியானால் திரையுலகில் சத்யாவுக்கு நல்ல இடம் கிடைக்கும் என்பதால் அப்படத்தைத் தொடங்கும் முயற்சியில் ஆர்யா ஈடுபட்டுவருகிறாராம். நல்ல அண்ணன்.
பேச்சுவார்த்தைகள் வேகமாக நடந்து வருகிறது. அதனால் விரைவில் இதுபற்றிய அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.











