Uncategorized சினிமா செய்திகள்

அம்மா இறந்துவிட்டார் என்று பொய் சொன்ன நடிகை – பாப்பிலோன் பட இயக்குநரின் பல ரக அனுபவங்கள்

புதுமுக நடிகர் ஆறுராஜா எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் படம் பாப்பிலோன். இப்படத்தை அவரே தயாரித்தும் இருக்கிறார்.
விரைவில் படம் வெளியாகவிருக்கும் நிலையில் அவரிடம் ஒரு பேட்டி.

1. உங்களைப் பற்றிய சிறு அறிமுகம்..?

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள இலுப்பைக்குடி கிராமத்திலுள்ள ஆறுமுகம் தைலம்மாள் தம்பதியினருக்கு நான்கு குழந்தைகள். அவர்களில் இரண்டாவதாகப் பிறந்தவன் நான்.

என்னையும் விட்டுவைக்காத சினிமா ஆசை, படிப்பைப் பாதியில் நிறுத்தச் செய்தது.சென்னை வந்தேன். சினிமாவில் யாரைச் சந்திக்க வேண்டும் என்று கூடத் தெரியாது. ஏதோ ஒருவழியில் உள்ளே நுழைய வேண்டும் என்பதற்காக ஓவியம் கற்றுக்கொண்டேன். அதனால் கலை இயக்குநர் பத்மஸ்ரீ தோட்டாதரணி சாரிடம் சேரும் வாய்ப்பு கிடைத்தது.ரன் படம் முதல் ரஜினி நடித்த சிவாஜி படம்வரை அவரிடம் பணியாற்றினேன்.

சந்திரமுகி படத்தில் இடம்பெறும் சந்திரமுகியின் உருவத்தை வரைந்தேன். இது எனக்கு நல்ல அறிமுகத்தைக் கொடுத்தது. அதனால் சில பட வாய்ப்புகள் வந்தன. அவை கடைசி நேரத்தில் கைவிட்டுப் போனது.

அதன்பின், என் மீதான நம்பிக்கையில் கிடைத்த பொருளாதாரத்தை வைத்துக் கொண்டு சில நண்பர்களின் உதவியோடு பல இன்னல்களுக்கிடையே இப்படத்தை உருவாக்கியுள்ளேன்.

2. கலை இயக்குநர் ஆகாமல் இயக்குநரானது ஏன்?

நான் எப்போதும் கலை இயக்குநர் ஆக வேண்டும் என்று நினைத்ததில்லை. அதே போல் இயக்குநர் அவதாரம் எடுக்கவும் விரும்பவில்லை. சில தருணங்களில் படம் இயக்க வேண்டும் என்பதற்காக பல நிகழ்வுகளைச் சேகரித்து வந்தேன். அதை வைத்து சில கதைகள் உருவாக்கினேன். இப்போது என்னிடம் நான்கு கதைகள் உள்ளன. கலையும் சரி இயக்கமும் சரி என்னைத் தேடி வந்தவை. கலையை அன்போடு அரவணைத்துக் கொண்டேன். அதே போல் இனிமேல் இயக்கத்தையும் அன்போடு ஏற்றுக் கொள்வேன்.அனைத்தும் நாம் நேசிப்பதில் தான் இருக்கிறது. அது நம்மிடம் ஒட்டிக் கொள்வதும் விடைபெற்றுச் செல்வதும்.

3.இந்தப்படத்தின் கதை உருவானது எப்படி?

பாசத்தில் ஒரு பயணம் என்று ஆரம்பம் ஆனது இக்கதை. பிறகு கதையில் திருப்பங்கள் வேண்டும் என்பதற்காகவும், அது தற்போது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த வேளையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டார் என்று செய்திகள் வந்தன.அதனைக் கருவாக வைத்து பயணிக்கலாம் என்று முடிவு செய்தேன். இச்சம்பவம் எதனால் அதிக இடங்களில் நடக்கிறது? இதற்கு என்ன காரணம்? என்னதான் முடிவு? இப்படி என்னை நானே பல கேள்விகள் கேட்டுக் கொண்ட பிறகு சில மாற்றங்களோடு உருவானது இக்கதை.

4.பாப்பிலோன் என்கிற பெயரை வைத்தது ஏன்?

இக்கதையின் முக்கிய கதாபாத்திரத்தின் பெயர் “ பாப்பிலோன்”. அவர் இறப்பின் பின்னணியில் உள்ள மர்மத்தின் மூலம் தான் அவர்கள் யார் என்பது தெரிய வரும். அதனால்தான் இந்தத் தலைப்பையே வைக்கலாம் என்று முடிவு செய்தோம். பிறகு ஆராய்ந்து பார்க்கையில் பிரெஞ்சு மொழியில் “பாப்பிலோன்” என்றால் பட்டாம்பூச்சி என்று அர்த்தம். உலகத்தில் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் உயிரினம் பட்டாம்பூச்சி மட்டும்தான். அப்படி சுற்றித் திரிய வேண்டிய நம் பெண்கள் சில மிருகங்களால் துன்புறுத்தப்படுகிறார்கள். அது மட்டும் அல்ல நம்மால் இரு பிறவியைப் பார்க்க முடியும். அதே போல் நம் அனைவரின் வீட்டிலும் உள்ள பெண்கள் தாய்மைக்கு முன் ஒரு பிறவி தாய்மைக்குப் பின் ஒரு பிறவி. அதனால் அவர்களை சுதந்திரமாக நடமாட விடுவது நமது சமுதாயக் கடமை. அனைவர் வீட்டிலும் தாய்மை இல்லாமல் நாம் இல்லை அது நம் அம்மாவாக அக்காவாக தங்கையாக மகளாக… “ பாப்பிலோன்” (பட்டாம்பூச்சி) இல்லாத வீடும் கிடையாது நாமும் கிடையாது. இப்படி இத்தலைப்புக்கான காரணங்களைச் சொல்லி வலிமை சேர்த்துக் கோண்டே போகலாம்.

5.நீங்களே தயாரிப்பாளர் ஆனது பற்றி?

என்னை நம்பி முதலீடு செய்வதற்கு யாரும் வர மாட்டார்கள். ஏன் என்றால் சினிமா என்பது உத்திரவாதம் இல்லாத முதலீடு என்றால் அது மிகையாகாது. சினிமா முதலீட்டாளர்களில் வென்றவர்களை விட பின் வாங்கிச் சென்றவர்களும் பிச்சையெடுப்பவர்களும் அதிகம். இப்படிச் சொல்லிகொண்டே கோண்டே போகலாம். அதனால் தான் எனது நம்பிக்கையை முதலீடாக வைத்து இப்படத்தைத் தயாரித்துள்ளேன். நான் பண கோடிக்குச் செல்வதும் தெருக் கோடிக்குச் செல்வதும் எனது உறவுகளின் கையில் உள்ளது.

6.கதாநாயகனாக நடிப்பது உங்கள் ஆசையா? வேறு யாரும் கிடைக்காத நிர்ப்பந்தமா?

சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சிறு வயதிலிருந்தே ஆசை. இன்னும் நான் சென்னையில் இருப்பதற்குக் காரணம் இதுதான். இதில் எந்த ஒரு நிர்பந்தமும் கிடையாது. அதே போல் என்னைத் தேடி வருவதை அன்போடு அரவணைத்துக் கொள்வேன். அதேபோல் நான் தேடிச் செல்வதையும் அடையாமல் விடவும்மாட்டேன். இது எனது இலட்சியத்தில் ஒரு பயணம்.

7.கதாநாயகி உட்பட மற்ற நடிகர்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

என்னோடு நடித்த சக கலைஞர்கள் அனைவரும் அவரவர் ஒத்துழைப்பை முழுமையாகக் கொடுத்தார்கள். குறிப்பாகச் சொல்லப் போனால் அண்ணன் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் இப்போது எங்களுடன் இல்லை. இந்தப் படம் தான் கடைசிப் படம். அது மட்டும் தான் குறை. அவர் ஆத்மா சாந்தியடைய மனப்பூர்வமாக படக்குழுவினர் சார்பாக ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.

கதாநாயகி = சுவேதா ஜோயல்.
பண்ணையார் = பூ ராம்
மாரி = வினோத்
பண்ணையார் மகள் = அபிநயா
தங்கை = சவுமியா
அம்மா = ரேகா சுரேஷ்
“ பாப்பிலோன்” தந்தை = கிருஷ்ணமூர்த்தி

8.படப்பிடிப்பு அனுபவங்கள்?

சுதந்திரம் என்று எடுக்கப்பட்ட இந்தப் படம் அளவுக்கு அதிகமாகக் கற்றுத்தந்தது.
• பண்ணையார் மகளாக நடிக்க வந்தவரை ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அவர் சரி இல்லை என்று அனுப்பியது.
• தங்கையாக நடித்தவரை ஒருநாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் சரி இல்லை என்று அனுப்பியது.
• எங்கள் பட முதல் கதாநாயகி ஒரு நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனது அம்மா இறந்து விட்டார் என்று பொய்சொல்லி விட்டு வெளியேறியது. பிறகு படப்பிடிப்பு இரத்து செய்து விட்டு வரும் வழியில் என் காதில் விழும் படி அவ்வளவுதான் இனிமேல் இந்தப் படம் படப்பிடிப்பு தொடங்காது இதற்கு பந்தயம் என்று அவர்களுக்குள் பேசியது.
• நான் மேனேஜர் என்று சொல்லி என்னை ஏமாற்றியவர் அவரை நிறுத்திய பிறகு அவர் எனக்கு செய்த இடையூறுகள் அன்று முதல் இன்று வரை அளவில் அடங்காது.

இப்படி இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் பஞ்சமில்லை. அதைக் கண்டு துவளவும் இல்லை. என் தந்தை இறந்த அன்று முடிவு செய்தேன். இனி சந்தோசம் என்று ஒன்று இல்லை என் வாழ்வில். ஏன் அவர் நம்பிக்கையை நான் தவிடு பொடியாக்கியது. அது எனக்கு மட்டும் தெரிந்த உண்மை.

9.படப்பிடிப்பில் நடந்த சுவாரசியமான நிகழ்வுகள்..?

படத்தில் நடித்த முதல் கதாநாயகி முதல் நாள் படப்பிடிப்பு முடிந்தவுடன் அம்மாவிற்கு உடல் நிலை சரி இல்லை என்று சொன்னார். சரி நாங்கள் அனைவரும் ஆறுதல் கூறிவிட்டு தூங்கச் சென்றோம் மறுநாள் காலை 6 மணிக்கு அனைவரும் படப்பிடிப்பிற்குக் கிளம்பினார்கள். நாயகி அழ ஆரம்பித்தார் ஏன் என்று கேட்கும் போது அம்மா இறந்து விட்டார் என்று சொல்லி மயக்கம் அடைந்தார். நாங்கள் அனைவரும் பதறிவிட்டோம். ஒருவர் காலைத் தேய்த்து விட்டார் ஒருவர் கையைத் தேய்த்து விட்டார் ஒருவர் தண்ணீர் தெளித்தார். இப்படி அனைவரும் பணிவிடை செய்தார்கள். சரி என்று சொல்லி விட்டு அவரை காரில் ஏற்றி மதுரை விமான நிலையம் சென்று அனுப்பி வைத்தோம். அதன் பிறகு தான் தெரிந்தது அவள் சொன்னது அனைத்தும் பொய் என்று. நாங்கள் அனைவரும் முட்டாள்களாகச் சிரித்துக் கொண்டோம் இது ஒன்று.

மற்ற ஒன்று, வெறும் 25,000 ரூபாயை வைத்துக்கொண்டு இரண்டாவது முறை படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்றது.அப்போது சென்னை டு வத்தலகுண்டு பஸ் வாடகை மட்டும் 32,000 ரூபாய். என்னை நம்பி 60 நபர்கள் பயணித்துக் கொண்டிருந்தனர். இது எனக்கு மட்டுமே தெரிந்த சுவாரஸ்யம். வெளியில் தெரிந்தால் அவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாயிருக்கும். இன்று வரை என்னிடம் பணியாற்றிய அனைவரும் நான் சொல்வதை நம்புவதில்லை. நான் அவர்களிடம் சொல்வது உண்மை. அது பொய் என்று நினைத்துக் கொண்டுள்ளனர்.

10.படப்பிடிப்புக்குப் பின்பான அனுபவங்கள்?

வாழ்க்கையை புரட்டிப் போட்டது. எங்கு செல்வது யாரை நம்புவது என்று தெரியாமல் திகைத்து நின்றேன். கஷ்டத்தில் கிடைக்கும் அனுபவம்தான் உண்மையானது என்று உணர்ந்தேன். பெரிய படத் தயாரிப்பாளர்கள் எங்கு வேண்டுமானாலும் பிறகு தாரேன் என்று சொல்லலாம் ஆனால் புதுமுக தயாரிப்பாளர்கள் குறைத்த முதலீட்டில் தயாராகும் படங்களுக்குக் கடன் சொல்வது கடினம். முழுத் தொகையைக் கொடுத்தாலும் நமக்கான வேலைகள் அவரிடம் பணிவாகத்தான் சொல்லி வாங்க வேண்டியநிலை உள்ளது. இப்படத்தில் கிடைத்த அனுபவம் பல நூல்களை உருவாக்குவதற்குச் சமமானது.

11.படைப்பாளியாக படைப்பை உருவாக்கிவிட்டீர்கள், தயாரிப்பாளராக வியாபார விசயங்களில் ஈடுபட்டீர்களா? அதுபற்றி?

வியாபாரரீதியாக பல நிறுவனங்களை அணுகியுள்ளேன். ஆனால் அனைவரும் சொன்ன பதில் நாங்கள் புது முகங்கள் நடித்த படங்கள் எடுப்பதில்லை. என்று சொன்னவர்களுக்கும் உண்டு, கேலி செய்தவர்களும் உண்டு. தொலைக்காட்சி உரிமம் பேசும் போது அவர்களிடம் வந்த பதில் புதுமுக நடிகர்களின் படங்கள் எடுப்பதே இல்லை என்பதுதான். சில நிறுவனங்கள், படம் வெளியிட்ட பிறகு வந்து பாருங்கள் என்று சொல்லியது. தொலைக்காட்சி இடைத்தரகர்களைப் பார்த்துப் பேசும் போது அவர்கள், இப்பல்லாம் 50,000 ரூபாய்க்கு எடுப்பதே பெரிய விஷயம் என்று சொன்னார்கள். இதனால் சில தருணங்களின் மன உளைச்சலுக்கு உள்ளானேன். சிலர் படம் பார்த்து விட்டு படம் ரொம்ப நல்லாருக்கு இதற்கு விளம்பரம் மிக அவசியம் என்றார்கள். புது முகங்களை வைத்துப் படம் எடுத்தால் அது விற்பனை செய்யும் போது நடுக் கடலில் நீச்சல் கற்றுக்கொள்வது போல் இருக்கும்.

12. கொரோனாவால் எல்லோருக்கும் பாதிப்பு, உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிச் சொல்லுங்கள்?

கொரோனா ஆளான ஆளையே ஆட்டி வைத்தது. நான் ஏற்கனவே ஆடிப் போயிருந்தேன். இதில் இது வேறு வந்து வாட்டி வதைக்க ஆரம்பித்தது. சினிமா எடுப்பதே ஒரு பிரச்சனை என்னிடம் பிரச்சனை தோற்றுப் போய்விடும் என்று நினைத்தேன் மொத்த பலத்தையும் என்னிடம் இப்போது காண்பித்துக் கொண்டுள்ளது. மற்ற தொழில்கள் ஓரளவு இயல்பு நிலைக்குத் திரும்புகிறது ஆனால் திரைத் துறை மட்டும் வழி தெரியாமல் தடுமாறிக் கொண்டுள்ளது, புது தயாரிப்பாளர் உள்ளே நுழைவதற்கு முயற்சி செய்வது போல்.

– ஜான்

Related Posts