இது முற்றிலும் தவறான செய்தி – யோகிபாபு மறுப்பு
யோகிபாபு இப்போது நிறையப் படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்கிறார். அவரை முதன்மையாக வைத்தும் சில படங்கள் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் அவர் குறித்து ஏராளமான புகார்கள் வருகின்றன.
படப்பிடிப்புக்குச் சரியான நேரத்தில் வருவதில்லை, வந்தாலும் இயக்குநர்கள் சொல்கிறபடி நடிப்பதில்லை என்பது உட்பட நிறையப் புகார்கள்.
இப்போது அதைக் காட்டிலும் இன்னும் ஒருபடி மேலே போயிருக்கிறார் என்கிறார்கள்.
அண்மையில், ஒரு படத்தில் முதன்மை வேடத்தில் நடிப்பதற்காகப் பெரும்தொகையைச் சம்பளமாகப் பேசியிருக்கிறார். வந்தவர்களும் அதற்கு ஒப்புக்கொள்ள, பேசியதில் பாதித் தொகையை முன்பணமாகத் தரவேண்டும் என்று கேட்டிருக்கிறார்.
அவர்களும் உற்சாகமாக அந்தப்பணத்தைக் கொடுத்துவிட்டனர். அடுத்தநாள் ஒப்பந்தம் போட்டு படப்பிடிப்புத் தேதிகளைச் சொல்லிவிடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார். படக்குழுவினரும் சந்தோசமாகச் சென்றிருக்கின்றனர்.
அவர்கள் மகிழ்ச்சி அடுத்தநாள் வரை நீடிக்கவில்லை. ஆம், அடுத்த நாளிலிருந்து அவர் போனையே எடுக்கவில்லையாம். பணத்தையும் கொடுத்துவிட்டுப் பதறிக்கொண்டிருக்கிறது அக்குழு.
இதுஒருபுறமிருக்க, படப்பிடிப்புக்கு வரும்போது உதவியாளர் ஓட்டுநர் உட்பட பலருக்கு தினசரி பேட்டா என்று எழுதி தினமும் பல ஆயிரங்களை தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்கிறாராம். வீட்டுக்குப் போகும்போது அவர்கள் கையில் சில நூறு ரூபாய் தாள்கள் மட்டும் தரப்படுகின்றனவாம்.
இதனால் அவரிடம் தொடர்ச்சியாக யாரும் வேலை செய்வதில்லை என்கிறார்கள்.
மிகவும் அடிமட்ட நிலையிலிருந்து மேலே வந்திருக்கிறார் யோகிபாபு. அப்படிப்பட்ட அவர் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருக்கும் தினக்கூலியை நம்பியிருக்கும் தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்கலாமா? என்கிற குமுறல் தொழிலாளர்கள் மத்தியில் கேட்கிறது.
யோகிபாபுவின் காதுகளுக்கு மட்டும் எட்டவில்லை.
—————————————————–
தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் யோகிபாபு
என்கிற தலைப்பிட்டு இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தோம்.
செய்தி வெளியானவுடன் நம்மைத் தொடர்பு கொண்ட யோகிபாபு, இது முற்றிலும் தவறான செய்தி என்று மறுத்தார். அதோடு அவருடைய உதவியாளர்களும், கம்பெனியில் பணம் தரத் தாமதமானால்கூட சாரே எங்களுக்கு உரிய தொகையை அனுப்பிவிடுவார் என்று கூறினார்கள்.
அதோடு, அட்வான்ஸ் வாங்கிய பிறகு யாருக்கும் டேட் தராமலோ போனை எடுக்காமலோ இருந்ததில்லை என்றும் யோகிபாபு கூறினார்.














