விமர்சனம்

கேஜிஎஃப் 2 – திரைப்பட விமர்சனம்

கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்கச் சுரங்கத்தை ஆட்டிப் படைக்கும் வில்லன் கருடனைக் கொன்றதோடு நிறைவடைந்தது கேஜிஎஃப் முதல்பாகம்.

கருடன் இறந்ததும் கேஜிஎஃப்பின் தலைவராக அவருடைய தம்பி முயற்சி செய்ய அவரையும் கொன்று நாயகன் யஷ் (படத்தில் ராக்கி) கேஜிஎஃப்ஃபை ஆளும் பொறுப்பை எடுத்துக் கொள்வதோடு படம் தொடங்குகிறது.

ஆளும் பொறுப்போடு எதிர்களிடமிருந்து நாயகி ஸ்ரீநிதிஷெட்டியையும் கவர்ந்து வந்து விடுகிறார். 

அவரைக் கொல்ல எதிரிகள் திட்டமிடுகிறார்கள். ஒன்றிய அரசாங்கமும் அவருக்கு எதிராகக் களமிறங்குகிறது. 

ராக்கி என்னவானார்? கேஜிஎஃப்பின் நிலை என்ன? ஆகியனவற்றுக்கு விடை சொல்கிறது கேஜிஎஃப்2.

படம் தொடங்கியதிலிருந்தே ராக்கியின் ராஜ்ஜியம்தான். ராக்கி பேசுவதைவிட அவரைப் பற்றி அனைவரும் பேசுவது அதிகம். யாஷ் அதற்குப் பொருத்தமாக இருக்கிறார். கம்பீர நடை, கனத்த குரலில் வசனங்கள், மிரட்டும் பார்வை எனப் படம் நெடுக ஒவ்வொரு காட்சியையும் அணுஅணுவாக இரசித்து நடித்திருக்கிறார் யாஷ்.அதுவும் ஒரே ஒரு தங்கக்கட்டிக்காக ஒரு காவல்நிலையத்தில் யாஷ் செய்யும் அதகளமும் அவர் வருமுன்னே ஒரு சிறுவன் அவரைப் பற்றிச் சொல்வதும் சுவை.

நாயகி ஸ்ரீநிதிஷெட்டிக்கு ஒரு பாடல் மற்றும் கூடுதல் காட்சிகள். தொடங்குன்னு சொல்ல அம்மா இருந்தாங்க நிறுத்துன்னு சொல்ல ஆள் இல்லை என ஈஸ்வரிராவ் சொல்ல அந்த இடத்தை எடுத்துக்கொள்கிறார் ஸ்ரீநிதிஷெட்டி.

சஞ்சய்தத் ஆர்ப்பாட்டமாக அறிமுகமாகிறார். யாஷுக்குக் கடும் நெருக்கடி கொடுக்கிறார்.

பிரதமராக நடித்திருக்கும் ரவீனாடண்டன், தமது அதிகாரத்தைத் தாண்டியது யாஷின் ராஜாங்கம் என உணரும் காட்சி பல கதைகளைச் சொல்லிச்செல்கிறது.

பிரகாஷ்ராஜ், மாளவிகா அவினாஷ் உள்ளிட்டோர் வருகிற காட்சிகளில் திரைக்கதையோட்டத்தை வலுவாக்குகின்றன.

புவன்கெளடாவின் ஒளிப்பதிவு படத்துக்குப் பெரும்பலம். பல காட்சிகள் கண்களை விரியவைக்கின்றன.

இசையமைப்பாளர் ரவிபசுரூர் கூடுதல் நேரம் வேலை செய்திருக்கிறார். படம் நெடுக பரபரப்பான பின்னணி இசை. அரங்கை விட்டு வந்தபின்னும் பின் தொடர்கிறது.

தமிழில் வசனங்களை எழுதியிருக்கும் அசோக் கவனிக்க வைக்கிறார். தலைகள் மாறிக் கொண்டிருக்கும் கிரீடம் ஒன்றுதான் என்பது உட்பட பல வசனங்கள் சிறப்பு.

கதாநாயகன் என்பதைத் தாண்டி காவிய நாயகனாக யாஷ்ஷை சித்தரித்திருக்கும் இயக்குநர் பிரசாந்த்நீல், அதற்கேற்ப உடல்பலம் மட்டுமின்றி மனபலம் மற்றும் அறிவுபலம் ஆகியனவற்றைச் சரிவிகிதத்தில் கலந்து யாஷின் கதாபாத்திரத்தை வடிவைமைத்திருக்கிறார். 

சஞ்சய்தத் வந்தவுடன் அவரை எப்படிக் கொல்வது? என நினைக்காமல் துபாய் செல்வது இறுதியில் பாராளுமன்றத்துக்குள் புகுந்து அமைச்சரைக் கொல்வது வரை நோய்நாடி நோய்முதல்நாடும் வகையில் அவருடைய வேடத்தைப் படைத்திருப்பதும் ,இந்திய ஒன்றிய அரசே எதிரியாகிவிட்டதால் அதன் அதிகார எல்லையைக் கடந்து தன் ராஜாங்கத்தை விரித்து மூன்றாம் பாகத்துக்கு வித்திட்டிருப்பதும் இயக்குநரின் சிறந்த திட்டம்.

காவிய நாயகர்கள் பற்றிய புனைகதைகள் கேட்கக் கேட்கச் சுவாரசியமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு ஒரேநேரத்தில் கேட்கவும் பார்க்கவும் வைத்து இரசிகர்களை மயங்க வைத்திருக்கிறார் இயக்குநர்.

 

Related Posts