சினிமா செய்திகள்

லியோ அதிகாலைக் காட்சி அனுமதி கிடைத்தது எப்படி?

2023 பொங்கல் திருநாளையொட்டி வெளியான வாரிசு, துணிவு ஆகிய படங்களுக்குப் பிறகு அதிகாலைக் காட்சிகள் எந்தப்படத்துக்கும் இல்லை என தமிழ்நாடு அரசாங்கம் முடிவெடுத்தது.அதனால் அதற்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களாக எந்தப்படத்துக்கும் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி கொடுக்கவில்லை.

இப்போது அக்டோபர் 19 ஆம் தேதியன்று வெளியாகவிருக்கும் விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி மற்றும் காலை ஏழு மணி ஆகிய நேரங்களில் படத்தைத் திரையிடும் அனுமதியை அரசாங்கம் வழங்கியிருக்கிறது.அதுமட்டுமின்றி ஐந்துநாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடவும் அனுமதி வழங்கியிருக்கிறது.

எப்படி இந்த மாற்றம் நிகழ்ந்தது?

லியோ படத்தின் வியாபாரம் பெரிய அளவில் நடந்திருப்பதால் ஆயுதபூசை விடுமுறை நாட்களிலேயே அதில் பெரும்தொகையை மக்களிடமிருந்து வசூலித்துவிட வேண்டுமென்பது படக்குழுவின் திட்டம்.

அதனால்,சிறப்புக்காட்சிகளுக்கான அனுமதி கேட்டு அரசாங்கத்திடம் விண்ணப்பித்த கையோடு அரசாங்கம் மறுத்தால் உடனடியாக நீதிமன்றத்தை நாடவும் முடிவு செய்திருந்ததாம் படக்குழு.

அண்டை மாநிலங்களான கேரளா,கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் அதிகாலைக் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் தர மறுப்பது ஏன்?

லியோ படம் வெளியாகும் நாளில் நான்கு மணி மற்றும் ஏழு மணி ஆகிய நேரங்களில் படத்தைத் திரையிட்டால் பள்ளி, கல்லூரி செல்பவர்கள் வேலைக்குச் செல்பவர்கள் என யாருக்கும் எந்தச் சிக்கலும் இருக்காது, ஒன்பது மணிக்கு முதல்காட்சி தொடங்கினால் இரசிகர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது

ஆகிய வாதங்களை முன்வைத்து வாதாடத் தயாராகியிருந்திருக்கிறார்கள்.

அதேசமயம், இன்னொரு பக்கம் நாயகன் விஜய், ஆட்சி மேலிடத்துடன் தொடர்புகொண்டு,நீதிமன்றத்தில் சொல்லவிருந்த கருத்துகளைச் சொல்லி எப்படியாவது அனுமதி கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது.

இக்காரணங்களால் அரசாங்கம் அதிகாலைக் காட்சிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது என்கிறார்கள்.

Related Posts