செய்திக் குறிப்புகள்

சேது பிதாமகன் அந்நியன் ஐ படங்களை விட தங்கலான் கஷ்டம் பெரிது – விக்ரம் வெளிப்படை

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படத்தில் விக்ரம்,பார்வதி,மாளவிகா மோகனன்,பசுபதி, அரிகிருஷ்ணன், ஹாலிவுட் நடிகர் டேனியல் கால்டாகிரோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஏ.கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் & நீலம் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கின்றன.

ஆக்ஸ்ட் 15 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் உள்ள வர்த்தக மையத்தில் ஆகஸ்ட் 5 அன்று நடைபெற்றது. இதன் போது படக்குழுவினருடன் நடிகர் சிவக்குமார் உள்ளிட்ட திரையுலகப் பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் இசையமைப்பாளர் ஜீ.‌வி.பிரகாஷ் பேசுகையில்….

இந்தத் திரைப்படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள்.அவர்களுடன் நானும் இணைந்து ஒரு சிறிய அளவில் உழைத்திருக்கிறேன்.‌பழங்குடி இன மக்களின் வாழ்க்கையையும், அவர்களின் இசையையும் நேர்மையாகப் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கிறேன்.என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறேன்.இரசிகர்களாகிய நீங்கள் பாருங்கள். கேளுங்கள்.

தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா- இயக்குநர் பா.இரஞ்சித் -நடிகர் விக்ரம் ஆகியோருக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.ஏனெனில் அவர்கள் கொடுத்த இந்த வாய்ப்பினை நான் சிறப்பாகப் பயன்படுத்தி முயற்சி செய்திருக்கிறேன். விக்ரமுடன் ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து,’தங்கலான்’ படத்தில் இணைந்திருக்கிறேன்.

இயக்குநர் பா.இரஞ்சித்தின் மிகப்பெரிய கனவுப் படைப்பு இது.இதில் என்னையும் இணைத்துக் கொண்டதற்கு அவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஞானவேல் ராஜா- அவருடன் இணைந்து ஏராளமான படங்களில் பணியாற்றி இருக்கிறேன்.இந்தப் படம் அவருக்கு சிறந்த தங்கமாக அமையும். இந்தத் திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ” என்றார்.

நடிகர் பசுபதி பேசுகையில்….

இந்தப் படத்தில் நான் நடிப்பதற்கு பல சிறப்பு காரணங்கள் இருக்கின்றன.முதலாவது காரணம் பா.இரஞ்சித். இந்த கதைக்களம் புதிது. இதுவரை தமிழ் சினிமாவில் வராத களம் இது.புது அணுகுமுறை. இரஞ்சித்தின் படங்களில் ஒரு புது தேடல் இருக்கும்.இது என்னை மிகவும் கவர்ந்தது.‌அவருடைய தேடல் எங்களுக்கானதாகவும் இருக்கிறது.அதனால் இந்தத் திரைப்படம் எங்கள் அனைவருக்கும் சிறப்பானது என்றார்.‌

நடிகர் டேனியல் கால்டாகிரோன் பேசுகையில்….

இந்தப் படத்தின் மூலம் ‘நன்றி- வணக்கம் -சென்னை’ ஆகிய தமிழ் வார்த்தைகளைக் கற்றுக் கொண்டேன்.விக்ரம் எனக்கு சகோதரரைப் போன்றவர்.‌அவர் இந்தியாவின் மிகச்சிறந்த கலைஞர்.என்னுடைய வாழ்க்கையில் அவரும் ஒரு அங்கம்.என்னுடைய சென்னை சகோதரர் விக்ரம்.இங்கு வருகை தந்துள்ள அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் ஓராண்டு பழகி இருக்கிறேன். இந்த அனுபவம் மறக்க முடியாதது.இயக்குநர் பா.இரஞ்சித்தும் என்னைக் கவர்ந்தவர்.அவருடைய கற்பனையை நாங்கள் நனவாக்கி இருக்கிறோம் என்று நம்புகிறோம்.ஆரத்தி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை மாளவிகா இந்திய சினிமாவில் சிறந்த நடிகை. அற்புதமாக நடிக்கக் கூடிய திறன் படைத்தவர்.இந்தப் படத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை பார்வதி பேசுகையில்….

நான் இன்னும் அந்த கங்கம்மா கதாபாத்திரத்திலிருந்து மீளவில்லை.ஜீ.வி.பிரகாஷ் இந்தப் படத்திற்காக வழங்கிய இசை – ஒவ்வொரு காட்சியிலும் எங்களின் நடிப்பை மேம்படுத்துவதாகவே இருந்தது.இதற்காக அவருடைய அர்ப்பணிப்பு மிகுந்த உழைப்பிற்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் – மிகப்பெரிய வெற்றிப் படங்களை வழங்கிய நிறுவனம்.இவர்களுடன் இந்தப் படத்தைத் தயாரித்த நீலம் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடனும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாது.இயக்குநர் பா.இரஞ்சித்துடன் பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை.அந்தக் கனவு இந்தப் படத்தில் நனவானது.அவருடன் இணைந்து பணியாற்ற ஏற்கனவே வாய்ப்பு கிடைத்தும் என்னால் பல்வேறு காரணங்களால் ஏற்க இயலாதிருந்தது.ஆனால் அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.நான் கங்கம்மாவாகத் தான் இருக்க வேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது.‌ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு நிறைய நெருக்கடி கொடுத்தேன்.கேள்விகளைக் கேட்டு தொல்லை கொடுத்தேன்.ஆனால் அவர் அனைத்துக்கும் விளக்கம் அளித்தார்.‌

அவர் உருவாக்கிய கங்கம்மா என்ற கதாபாத்திரம் மட்டுமல்ல அவர் உருவாக்கிய உலகம், அரசியல் இதற்கெல்லாம் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌ அவருடைய இயக்கத்தில் கங்கம்மாவாக வாழ ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் இதுவரை 30 படங்களில் நடித்திருக்கிறேன். ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் நடித்திருக்கிறேன்.‌உடன் நடிக்கும் சக கலைஞர் மீது அன்பு கொண்டிருக்க வேண்டும்.இதனைத் தான் நான் ஒரு கலைஞருக்கான குறைந்தபட்சத் தகுதியாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன்.ஆனால் உடன் நடிக்கும் சக கலைஞர்கள்- நடிகைகள்- நடிகர்கள் – மீது பேரன்பு கொண்டவர் சீயான் விக்ரம்.நான் கங்கம்மாவாக வாழ வேண்டும் என்றால் அவர் தங்கலானாக வாழ்ந்தால் தான் முடியும்.இதற்காக விக்ரமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.அவர் ஏற்று நடித்த தங்கலான் கதாபாத்திரத்தை இதற்கு முன் யாரும் பார்த்ததில்லை.அவரை திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.

படப்பிடிப்புத் தளத்தில் மாளவிகா, பசுபதி போன்றவர்கள் நடிக்கும் போது நான் தூரத்தில் இருந்து தான் பார்த்து இரசித்திருக்கிறேன்.‌ படத்தில் என்னுடைய வாரிசுகளாக நடித்த நடிகர்களுடன் ஒரு குழுவாகத் தான் இருப்போம்.‌

படத்தில் என்னுடன் இணைந்து பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.‌

சினிமா என்பது பொழுதுபோக்காக இருக்கலாம். வெற்றியைப் பெறலாம்.நம் வாழ்க்கை எப்போதும் அரசியலுடன் தான் இருக்கிறது. நாம் எதைச் செய்தாலும் அது அரசியல்.அந்த வகையில் ‘தங்கலான்’ ஆகஸ்ட் 15 ஆம் தேதி அன்று வெளியாவது தற்செயலானது அல்ல. சுதந்திரம்,விடுதலை பற்றி நிறையப் பேசுகிறோம்.இதனை தொடர்ந்து பேச வேண்டும்.‌பாகுபாடு என்பது இன்றும் ஏன் இருக்கிறது என்று குறித்தும் பேச வேண்டும்.இதைப்பற்றி நாம் தொடர்ந்து வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும் இதில் எவ்வளவு அசௌகரியம் இருந்தாலும்.. ஏனெனில் சினிமா என்பது அரசியல். கலை என்பதும் அரசியல்.இதற்காக இரஞ்சித் ஒரு ஆர்மியையே வைத்திருக்கிறார். அவருடைய படை வீரர்களுக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி என்றார்.

நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில்….

இது எனக்கு மிகவும் உணர்வுபூர்வமான தருணம்.‌தங்கலான் என் இதயத்தின் ஒரு பகுதி.என்னுடைய கலை உலகப் பயணத்தில் இதற்கு முன் இப்படி ஒரு சிறப்பான கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததில்லை.‌இந்த ஒன்றரை ஆண்டு காலப் பயணம் மிகவும் இனிமையான அனுபவமாக இருந்தது.இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய போது மனிதநேயமிக்க கலைஞர்களைச் சந்தித்தேன்.

ஆரத்தி என்ற கதாபாத்திரத்தை வழங்கியதற்காக இயக்குநர் இரஞ்சித்துக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.என் மீது நம்பிக்கை வைத்து இந்த வேடத்தை வழங்கியதற்காக மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.இதற்கு முன் இந்திய சினிமாவில் இதுபோன்ற கதாபாத்திரத்தை யாரும் ஏற்று நடிக்கவில்லை என நினைக்கிறேன்.

விக்ரமுடன் இணைந்து பணியாற்றிய தருணங்கள் மறக்க முடியாது.‌சக நடிகையை சௌகரியமாக…அக்கறையுடன்.. அரவணைத்து பணியாற்ற வைப்பதில் விக்ரமுக்கு நிகர் வேறு யாருமில்லை.‌

தங்கலான்- ஒரு கூட்டு முயற்சி.இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைத்து நட்சத்திர நடிகர்களுக்கும், கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா பேசுகையில்….

ஒரே நேரத்தில் தங்கலான்,கங்குவா,வா வாத்தியார் போன்ற படங்களைத் தயாரிப்பதற்குக் காரணம் எனக்குப் பக்க பலமாக மனைவி நேகா இருப்பது தான்.இவரைத் தொடர்ந்து தனஞ்செயன்,ராஜா, தினேஷ்,சக்தி வேலன் என என்னுடைய குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

கடந்த எட்டு ஒன்பது வருடங்களாக என் வாழ்க்கையில் கடினமான காலகட்டம்.‌இதனைக் கடந்து வருவதற்கு மிகக் கடினமாக இருந்தது. இந்தத் தருணத்தில் எனக்கு உற்ற துணையாக இருந்தது ஜஸ்வந்த் பண்டாரி.அவருக்கு இந்தய்ஜ் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இவருடன் அபினேஷ் இளங்கோவன்,தங்கராஜ்,ஜீ.வி.பிரகாஷ்,ஏ.எல்.விஜய் ஆகியோரும் உதவினர்.

ஜீ.வி.பிரகாசுடன் ஆயிரத்தில் ஒருவன் படத்திலிருந்து தொடர்ந்து பணியாற்றி வருகிறேன்.அவரிடம் ஒரு பணியைக் கொடுத்து விட்டால்.தன் சொந்தப் பணியாக நினைத்து,தயாரிப்பாளரின் எண்ணத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்றுவது அவருடைய ஸ்டைல். இந்தப் படத்தில் அவர் தன்னுடைய முழுமையான பங்களிப்பை அளித்திருக்கிறார்.படத்திற்கு அற்புதமான பாடல்கள் வழங்கி இருக்கிறார்.‌படத்தின் பின்னணி இசையை நான் இதுவரை கேட்கவில்லை.அத்துடன் படத்தில் பணியாற்றிய அனைத்துத் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதல் முறையாக ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏராளமான நட்சத்திர நடிகர்களுடன் இணைந்திருக்கிறது.‌ இதற்கு இயக்குநர் பா.இரஞ்சித் தான் காரணம்.

இந்தப் படத்தில் பார்வதி- மாளவிகா என இரண்டு நடிகைகள் நடித்திருக்கிறார்கள் இருவரும் இரு வேறு எதிரும் புதிருமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தை நான் பார்த்தபோது எனக்குக் கண்ணீர் வந்துவிட்டது.இந்தப் படத்துடன் ஸ்டுடியோ கிரீன் இணைந்து இருப்பதால் மகிழ்ச்சி அடைந்தேன்.

ஆகஸ்ட் 15 எங்களுக்கு மறக்க முடியாத நாள்.ஏனெனில் 12 ஆண்டுகளுக்கு முன் ‘அட்டக்கத்தி’ எனும் திரைப்படம் இந்த நாளில் தான் வெளியானது.

பா.இரஞ்சித் தற்போது நீலம் புரொடக்ஷன்ஸ் மூலம் ஏராளமானவர்களுக்கு அடையாளத்தை உருவாக்கித் தருகிறார்.இசைக் கலைஞர்களுக்கும் அவர் தனி அடையாளத்தை ஏற்படுத்தி வருகிறார்.அவரை நினைத்தால் எனக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது. அவருடைய சமுதாயச் சிந்தனையும்,சினிமா மீது இருக்கும் அவருடைய காதலும்..இன்னும் மிக வீரியமான படைப்பினை அவர் வழங்க வேண்டும் என ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன்.

விக்ரம் – அவருடைய பயணமானது மிகவும் கடினமானது.ஆனால் எந்த இடத்திலும் அவர் நான் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறேன் என்று குறிப்பிட்டதில்லை.சினிமா- ஒரு கடினமான விடயம் என்று எப்போதும் வெளிப்படுத்துவதில்லை.இந்தப் படத்தில் ஒரு வசனம் வரும்.’இந்த வேலையைச் செய்வதற்கு வேற ஆள் கிடையாது’ என்று.அது விக்ரமுக்குப் பொருத்தமானது.‌உண்மையைச் சொல்லப்போனால் இந்தப் படத்தில் விக்ரம் ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க இங்கு வேறு யாரும் இல்லை.இந்தப் படத்தில் அவருடைய கடின உழைப்பிற்கு அவர் இன்னும் கூடுதலான உயரத்தைத் தொடுவார். இதைவிட சிறந்த படைப்புகளை அவரிடம் இருந்து எதிர்பார்க்கலாம்.‌அவருடைய நடிப்பில் உலக சினிமாவை ஒரு இரசிகனாக எதிர்பார்க்கிறேன்.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி தங்கலான் ஒரு புதிய சரித்திரத்தை உருவாக்குவார் என நம்புகிறேன்.‌இரசிகர்களுக்கு புதுவித அனுபவம் கிடைக்கும் என்றார்.

இவ்விழாவில் இயக்குநர் பா.இரஞ்சித் பேசுகையில்….

மகிழ்ச்சியான தருணம் இது.’அட்டகத்தி’ படத்தில் ஞானவேல் ராஜாவுடன் தொடங்கிய இந்தப் பயணம்.எனக்கு ஆதரவு கொடுத்து இந்தப் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பளித்து,என் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர் ஞானவேல் ராஜா.‌அவரை மறக்கக் கூடாது என்பதற்காக உருவாக்கியது தான் ‘தங்கலான்’ என நான் நினைக்கிறேன்.

சர்பட்டா பரம்பரை படத்திற்குப் பிறகு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன.‌அந்தத் தருணத்தில் ஞானவேல் ராஜாவுடன் தான் இணைந்து பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.அப்போது என்னிடத்தில் அவருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கின்றன.ஏன் அவருடன் இணைந்து இருக்கிறீர்கள்? என கேள்வி கேட்டனர்.அந்தத் தருணத்தில் என் மனதில் இவருடன் இணைய வேண்டும் என்று தோன்றியது அவ்வளவுதான்.

அவருடன் இணைந்து நின்றதற்காக அவர் செய்த விசயம் சாதாரணமானதல்ல.தங்கலான் என்ற ஒரு படத்தினை இயக்க வேண்டும் என்ற போது அதன் பட்ஜெட் மீது பெரும் தயக்கம் இருந்தது.ஆனால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா படம் நிறைவடையும் வரை எந்த ஒரு சிறிய தடையைக் கூட வரவிடாமல் படத்தை நிறைவு செய்தார்.நான் நினைத்த ஒரு படத்தை..எந்தவித சமரசமும் இல்லாமல் எடுப்பதற்கு பெரிய ஆதரவை அவர் வழங்கினார்.இதற்காக அவருக்கு இந்தத் தருணத்தில் நான் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த நன்றியை ஒரு வெற்றியாக வழங்க வேண்டும் என விரும்புகிறேன்.

ஒரு தயாரிப்பாளராக அவர் என் மீது வைத்த நம்பிக்கையை..ஒரு சகோதரராக அவரின் மீது வைத்த நம்பிக்கையை..ஒரு வெற்றியை வழங்க வேண்டும் என்று நினைக்கிறேன்.இந்தத் திரைப்படம் நீங்கள் நினைப்பது போல் பிரம்மாண்டமான வெற்றியை வழங்கும் என நம்புகிறேன்.அத்தகைய வெற்றியை இந்தப் படைப்பு கொடுக்கும்.

சினிமா நம் வாழ்க்கை மீது பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்துகிறது.அந்த சினிமாவை எப்படிப் பயன்படுத்த வேண்டும்? அந்த சினிமா தற்போது எப்படி இருக்கிறது?..

நான் கலைக் கல்லூரியில் படிக்கும் போது சினிமாவை சரியாகப் புரிந்து கொண்டு தான் சினிமாவில் நுழைந்தேன்.நான் கலைக் கல்லூரி சேர்ந்த பிறகு தான் முதன் முதலாக திரைப்பட விழாவினை நடத்தினார்கள்.அதன் பிறகு சர்வதேச திரைப்பட விழாக்களில் பல உலக சினிமாக்களை பார்த்தேன்.நான் பார்த்த பல உலக சினிமாக்கள் தான் என்னை உருவாக்கியது.அதனால்தான் இப்போது நான் இங்கு வந்து நின்றிருக்கிறேன்.’சில்ட்ரன்ஸ் ஆப் ஹெவன்’,’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’,’சினிமா பாரடைஸ்’ இது போன்ற படங்கள் சமூகத்தின் பிரதிபலிப்பாக இருந்தது.இது என்னைக் கவர்ந்தது. நான் ஓவியக் கலைஞராக இருந்தாலும் ஏன் திரைத்துறைக்குச் செல்லக்கூடாது என நினைத்துதான் இதில் நுழைந்தேன்.

நாம் சினிமாவை இயக்கினால் நம்முடைய பிரச்சினைகளை சொல்லலாம் என நினைத்தேன்.சொல்லப்படாத கதைகளை சினிமாவில் சொல்லலாம் என நினைத்தேன்.இன்றும் சினிமா ஒரு ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகமாக இருக்கிறது.இந்த ஆற்றல் வாய்ந்த சமூக ஊடகத்தின் மூலமாக சொல்லப்படாத அல்லது மறைக்கப்பட்ட வரலாறை மக்களிடம் எளிதாகக் கடத்துவதற்கான ஒரு கருவியாக பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தேன்.‌இதனால்தான் நான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.

சினிமா என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை.நான் தான் சினிமாவை தேர்ந்தெடுத்தேன்.ஏனெனில் இங்கு சொல்லப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன.எழுத்து வடிவிலும் எழுதப்படாத கதைகள் நிறைய இருக்கின்றன.வரலாற்றில் குறிப்பிடப்படாத நிறைய பகுதிகள் இருக்கின்றன.வரலாற்றைப் படிக்கும் போது நான் யார்? என்ற ஒரு மிகப்பெரிய கேள்வி என்னுள் எழுகிறது.வரலாற்றில் நான் ஏன் இப்படி இருந்தேன்? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்தது.என்னுடைய மக்களுக்கும் இப்படி ஒரு பெரிய அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. ஏன் இவ்வளவு பாகுபாடு இருக்கிறது? ஏன் பிரிவினை இன்றும் இருக்கிறது? எனப் பல கேள்விகள் இருக்கின்றன.இதற்கான பதிலை வரலாற்றில் தேடினால்…வரலாறு ஒரு பக்கச் சார்புடையதாக இருக்கிறது.பாதிக்கப்பட்ட மக்களின் கோணங்களில் இருந்து வரலாற்றில் எதுவும் சொல்லப்படவில்லை.அவர்களுடைய மொழி இல்லை.‌அவர்களைப் பற்றிய குறிப்புகள் கூட இல்லை.தேடித்தேடிப் பார்க்கும்போது ஏமாற்றம்தான் மிஞ்சுகிறது.

இதுபோல்தான் சினிமாவிலும்… எது மாதிரியான படங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள் எனப் பார்க்கும் போது, ஒடுக்கப்பட்ட மக்களின் பார்வையில் இருந்து எந்தப் படங்களும் உருவாக்கப்படவில்லை. இது தொடர்பான தேடலுடன் தான் நான் சினிமாவில் வந்தேன்.‌ குறிப்பாக பாபா சாகிப் அம்பேத்கரின் தீண்டப்படாதவர்கள் யார்? என்ற ஒரு புத்தகம் இருக்கிறது.அந்தப் புத்தகத்தை வாசிக்கும் போது தான் மறைக்கப்பட்ட வரலாறை உருவாக்க வேண்டியதன் அவசியம் புரிந்தது.

கல்வெட்டுகளில் செதுக்கப்பட்ட எழுத்துகள் தான் வரலாறா? மறைக்கப்பட்ட வரலாற்றை எப்படி மீட்பது..? ஒரு வரலாற்று ஆய்வாளருக்கு இருக்க வேண்டிய உணர்வை கற்பனையான உத்தி மூலம் மீள் உருவாக்கம் செய்வது தான் இந்தச் சமூகத்திற்கு மிக முக்கியமானது என அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

எனவே அந்த வரலாற்றின் தேவையை உணர்ந்து அதனை திரைப்படங்களின் மூலமாக நான் தேடுகிறேன்.ஒரு மாணவனாக… ஒரு வரலாற்று ஆய்வாளனாக…நான் இருப்பதைப் பெருமிதமாகக் கருதுகிறேன்.இந்த சினிமா வரலாற்றைத் தேடுவதுடன் மட்டுமே நிறைவடைந்து விடுகிறதா..!அது இல்லை. சினிமா என்பது இங்கு ஒரு வலிமையான ஊடகமாக இருக்கிறது.மக்களுக்கு மிகவும் நெருக்கமானதாக இருக்கிறது.மக்கள் அதனுடன் மிகவும் உணர்வுபூர்வமான தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு வரலாற்று ஆய்வுகளோ அல்லது நம்பிக்கைகளோ மட்டும் சினிமா அல்ல. அது வெற்றிகரமானதாக மாற்றம் அடையுமா? என எனக்குக் கணிக்கத் தெரியவில்லை.‌

சினிமாவிற்குள் ஒரு புரட்சியை ஏற்படுத்தி விடலாம் என்று நினைத்துத் தான் சினிமாவிற்குள் வந்தேன்.‌ஆனால் சினிமா வித்தியாசமாக இருந்தது.அதிலும் தமிழ் சினிமா மிக வேறுபாடாக இருந்தது.தமிழ் சினிமாவில் நான் நினைக்கும் கருத்துகளைச் சொல்ல முடியுமா..? என்ற பயமும் எழுந்தது.இந்தப் பயத்தை நீக்கியது எங்கள் இயக்குநர் வெங்கட் பிரபு தான்.

அவருடன் உதவியாளராக நான் பணியாற்றிய போது,’சென்னை 28′ படத்தில் அவர் சென்னையின் அடையாளத்தை கிரிக்கெட் மூலமாக பதிவு செய்திருந்தார்.‌அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.அந்தத் திரைப்படத்தை இளைய சமுதாயத்தினர் கொண்டாடினார்கள். சென்னை 28 படத்தின் வாழ்வியலும்..என்னுடைய வாழ்வியலும் வேறு வேறு அல்ல.இரண்டுக்கும் அதிக நெருக்கம் உண்டு.‌அப்போது ஒரு கொண்டாட்டத்தை..ஒரு மகிழ்ச்சியை..சொல்லப்படாத கதைகள் மூலம் நாம் செல்லும்போது..எளிதாக இரசிகர்களுடன் தொடர்பு கொள்ள முடியும் என்ற ஒரு விசயத்தை வெங்கட் பிரபுவிடம் கற்றுக் கொண்டேன்.

அதன் பிறகு ஏற்கனவே நான் எழுதிய பல கதைகளை ஒதுக்கிவிட்டு,’அட்டகத்தி’ படத்தின் கதையை எழுதத் தொடங்கினேன். என்னுடைய வாழ்வில் இருந்து நிறைய சம்பவங்களை எடுத்து அதனை சினிமாவாக உருவாக்கினேன்.அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நீண்ட ஒரு கடிதத்தை எழுதி வழங்கினோம்.அதில் எங்களுடைய நம்பிக்கையைச் சொல்லி இருந்தேன்.

அட்டகத்தி படத்தை இரசிகர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.அந்த வாழ்வியலை இரசிகர்கள் ஏற்றுக் கொண்டவுடன் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை உருவானது.இந்த நம்பிக்கையின் காரணமாக அடுத்ததாக ‘மெட்ராஸ்’ என்ற படத்தை இயக்கினேன்.அந்தப் படத்தின் உருவாக்கத்தின் போதும் எனக்கு பயம் இருந்தது.இந்தப் படத்தை உருவாக்கும் போது தயாரிப்பாளர்களிடம் இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கான படம்.அவர்களுடைய கோணத்தில் இருந்தால் இந்தப் படம் உருவாகி இருக்கிறது என்பதை தெளிவுபடுத்தி இருந்தேன்.‌ தயாரிப்பாளர்களும், கார்த்தியும் இதனைப் புரிந்து கொண்டு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.இந்தப் படம் மிகப்பெரிய வணிக ரீதியான வெற்றியை அளித்தது.மெட்ராஸ் படம் வெற்றி பெற்றதாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அந்தப் படம் பிடித்ததாலும் எனக்கு ‘கபாலி’ படத்தின் வாய்ப்பினை வழங்கினார்.எனக்கு அவருடன் பணியாற்றும்போது உள்ளுக்குள் ஒரு பயம் இருந்தது.அவருக்கு என்னுடைய அரசியல் மிகவும் பிடிக்கும்.அந்தப் படம் வெற்றி பெற்றதால் தான் மீண்டும் எனக்கு ‘காலா’ படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்கினார்.

அதன் பிறகு ‘சர்பட்டா பரம்பரை’ ‘நட்சத்திரம் நகர்கிறது’.. இவையெல்லாம் என்னுடைய தேடல்கள் தான்.வரலாற்றில் நான் யார்? என்பதனைத் தேடும் படைப்புகளாகத்தான் இவை இருந்தன.

இந்தத் தருணத்தில் தான் விக்ரம் என்னை அழைத்தார்.சேர்ந்து பணியாற்றலாம் என விருப்பம் தெரிவித்தார்.விக்ரமை பல வடிவங்களில் எனக்குப் பிடிக்கும்.அவர் ஏற்று நடித்த பல கதாபாத்திரங்கள் எனக்குப் பிடிக்கும்.ஏனைய வணிக ரீதியான நட்சத்திரங்களைப் போல் நான் விக்ரமைப் பார்த்ததில்லை.ஏனெனில் அவர் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்காக தன்னை வருத்திக் கொள்பவர்.’ஐ’ படத்தில் ஒரு சிறிய பகுதிக்காக தன்னை மாற்றிக்கொண்ட விதம் எனக்குப் பிடித்திருந்தது.அதில் அவருடைய கலை மீதான தீவிர நேசிப்பு எனக்குத் தெரிந்தது.இதுபோன்ற ஒரு மகா கலைஞருடன் இணைந்து பணியாற்றுவதில் விருப்பம் கொண்டேன்.‌

முதலில் அவருடன் இணைந்து பணியாற்றும்போது எனக்குள் பயம் இருந்தது.இயக்குநராக ஒரு கதையை எழுதி விட்டேன்.இந்தக் கதையை இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நினைப்பேன்.ஆனால் விக்ரமுக்கு என சில தேவைகள் உண்டு.இதையெல்லாம் அவரைச் சந்திக்கும் போதே விவரித்தேன்.அவரும் முழுமையாகப் புரிந்து கொண்டு அற்புதமான ஒத்துழைப்பை வழங்கினார்.

அவரிடம் கதையைக் கூட என்னால் ஒழுங்காகச் சொல்ல முடியவில்லை, ஆனால் நான் சொல்ல நினைத்ததை அவர் முழுவதாகப் புரிந்து கொண்டார்.அவர் என் ஆத்மாவிற்குள் நுழைந்து அதனைப் புரிந்து கொண்டார் என நான் நினைக்கிறேன்.நான் நினைத்ததை சொல்வதற்குச் சரியான வார்த்தைகளைப் பயன்படுத்தத் தெரியாது.அதில் நான் பலவீனமானவன் தான்.ஏனெனில் நான் என்னுடைய உலகத்திலிருந்து இயங்குபவன்.

அவர் ஒப்புக்கொண்டவுடன் அந்தத் தருணத்தில் இருந்து தான் எனக்குள் மிகப்பெரிய சவால் உருவானது.கலைக்காக தன்னை முழுதாக அர்ப்பணிக்கும் ஒரு கலைஞன்.‌அவரைக் கையாள்வது மிகவும் கடினமானது என எனக்குத் தெரியும்.அவரை அந்தக் கதாபாத்திரமாக உருமாற வைப்பதில் சவால் இருந்தது.‌அதே தருணத்தில் மக்களிடத்தில் எளிதாகச் சென்று சேரும் வகையில் ஜனரஞ்சகமான படைப்பாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.

இந்தக் கதை எழுதி முடித்த பிறகு..பல இடங்களில் என்னைப் பயணிக்க வைத்தது.பல விசயங்களைத் தெரிந்து கொண்டேன். எழுத்தாளர்கள் தமிழ் பிரபா மற்றும் அழகிய பெரியவன் ஆகியோரிடத்தில் பெரும் விவாதமே எழுந்தது.இந்தக் கதைக்குள் பல சிக்கலான விசயங்கள் இருக்கின்றன.

இந்தப் படத்தில் புதிய உலகத்திற்குள் நாம் நுழைகிறோம்.ஃபேண்டஸி மேஜிக் வேர்ல்ட் எனக்கு மிகவும் பிடிக்கும்.புதிய ஜானரில் நான் இயக்கும் திரைப்படம் இது.இந்தப் புதிய உலகத்திற்குள் நான் நுழையும் போது எனக்கு ஆதரவாக இருந்தவர்கள் நடிகர்களும் தொழில் நுட்பக் கலைஞர்களும் தான்.இது எனக்கு புது நம்பிக்கையை அளித்தது.‌

விக்ரம் அந்த உலகத்திற்குள் என்னை எளிதாகப் பணியாற்ற வைத்தார்.படப்பிடிப்பின் முதல் நாள் முதல் காட்சியின் போது நான் நினைத்த மாதிரி தங்கலானாக விக்ரம் வந்து நின்றார்.அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.அதிலும் அவர் காடையன் கதாபாத்திரத்தில் தோன்றும் போது என்னை ஆச்சரியப்படுத்தினார். இதற்காக நடைபெற்ற ஒத்திகையின் போதும் அவர் கலந்து கொண்டார்.அவரிடமிருந்து நான் கலையை எப்படி நேசிப்பது என்ற விசயத்தைக் கற்றுக் கொண்டேன்.ஒரு மாணவரை பரிசோதிக்கலாம் ஆனால் ஒரு ஆசிரியரை எப்படிப் பரிசோதிப்பது..? ஒரு ஆசிரியரைப் பரிசோதிப்பது போல் இருந்தது.

படப்பிடிப்பு நிறைவடைந்த பிறகு விக்ரமிடம் மீண்டும் ரீசூட் செய்ய வேண்டும் என்று சொன்னவுடன், உடனே ஒப்புக்கொண்டார். சண்டைக் காட்சிகளில் அவருடைய விலா எலும்பு முறிந்தது.அந்தக் காட்சி நிறைவடைந்ததும் உடனடியாக என்னுடைய உதவியாளரை அழைத்து அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா? என்று கேள் எனச் சொல்வேன்.அவர்கள் விக்ரமிடம் கேட்டுவிட்டு வலி இருக்கிறது ஆனால் பொறுத்துக் கொள்கிறேன் என பதில் அளிப்பார்.அதனால் மீண்டும் அதே காட்சியைப் படமாக்கினேன் இந்த விசயத்தில் அவரிடம் நான் சற்று கடினமாக நடந்து கொண்டேன்.அதற்காக இந்தத் தருணத்தில் அவரிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.இதன் நோக்கம் என்னவென்றால் அவரை எப்படியாவது திரையில் தங்கலானாகக் கொண்டு வர வேண்டும் என்பதுதான். இதனை விக்ரமும் புரிந்து கொண்டு இன்றுவரை எனக்கு சகல விதங்களிலும் ஆதரவாக இருக்கிறார்.இந்தப் படத்தின் மீது அவர் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்திருக்கிறார்.என் மீதும் இந்தப் படத்தின் மீதும் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை வெற்றி பெற வேண்டும். என்னுடைய விருப்பமும் அதுதான். இது சாத்தியமாகும் என நான் உறுதியாக நம்புகிறேன்.

விக்ரமைத் தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கு இணையாக ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும் என நினைத்தபோது என் மனதில் தோன்றியவர் பசுபதி தான்.அவரும் ஒரு திறமையான கலைஞர்.இந்தப் படத்தில் அவருடைய நடிப்பும் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்.‌

பார்வதி – மாளவிகா இருவரும் முக்கியமான கதாபாத்திரங்கள்.இந்தத் திரைப்படத்தில் நிறைய பெண் கதாபாத்திரங்கள் இருக்கின்றன.‌ பார்வதியை ‘பூ’ படத்திலிருந்து பின் தொடர்கிறேன்.அவருடைய திறமைக்கேற்ப கதை இருந்தால் தான் அவரை அழைக்க வேண்டும் என்பதற்காகக் காத்திருந்தேன்.இந்தப் படத்தில் அது சாத்தியமானது.‌

இந்தத் திரைப்படத்தை கருணையற்ற மனிதனாக இருந்தால் மட்டும் தான் உருவாக்க முடியும் என நான் நினைத்தேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் திறமையாக அர்ப்பணிப்புடன் நடித்தார்கள்.நான் ஏனைய படங்களை இயக்கும்போது படப்பிடிப்புத் தளத்தில் மகிழ்ச்சியாகத் தான் பணியாற்றுவேன்.ஆனால் இந்தப் படத்தில் என்னை நானே வருத்திக் கொண்டு பணியாற்றினேன்.‌இப்போது வரை மன உளைச்சலுடன்…ஒருவித தவிப்புடன் தான் இருக்கிறேன்.இந்தப் படம் வெளியாகி இரசிகர்கள் ஏற்றுக்கொண்டு வெற்றி பெற்ற பிறகு தான் மகிழ்ச்சி அடைவேன்.

மாளவிகா- இந்தக் கதாபாத்திரத்தை எழுதி விட்டேனே தவிர..இதனை திரையில் கொண்டு வருவதற்கு நிறைய சிரமப்பட்டேன். இதனை உணர்ந்த மாளவிகாவும் கடுமையாக முயற்சி செய்து நடித்திருக்கிறார்.

டேனியல்- அவருக்கும் எனக்கும் மொழி பிரச்சனை.அதன் பிறகு கலாச்சார பிரச்சனை.ஆனால் எல்லாவற்றையும் கடந்து டேனியல் அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார்.

படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறார்கள்.

ஜீ வியுடன் இணைந்து பணியாற்றும் போது..நட்புடன் பணியாற்றுவது போல் இருந்தது.எல்லாவற்றையும் விட என்னுடைய உணர்வைப் புரிந்து கொண்டு..என்னுடைய தேடலைப் புரிந்து கொண்டு.பொருத்தமான இசையை வழங்கி பெரும் பக்க பலமாக இருந்தார்.அவருக்கும் இந்தத் தருணத்தில் சிறப்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் அனைவரும் இரசிக்கும் படமாக இருக்கும்.நான் எப்போதும் படத்தை பொழுதுபோக்காக மட்டும் உருவாக்குவதில்லை. அதனுடன் சமூகத்திற்கு ஏதேனும் பலன் இருக்க வேண்டும் என்றும் நினைப்பேன்.‌பொழுதுபோக்கு அம்சங்களைக் கடந்து இந்தச் சமூகத்திற்கு ஏதாவது ஒரு விசயத்தை வழங்கிட முடியும் என்பது தான் என்னுடைய பார்வை.‌

இந்தச் சமூகம் என்னை உருவாக்கியிருக்கிறது.இந்தச் சமூகத்தில் இருந்து நான் நிறையப் பெற்றிருக்கிறேன்.அதில் இன்பங்களும் உண்டு.துன்பங்களும் உண்டு.நிறைய படிப்பினையும் இருக்கிறது.இதில் நான் பல விசயங்களை உட்கிரகித்திருக்கிறேன்.அதனை நான் கலை வடிவமாக மாற்றி சினிமாவாக உங்கள் முன் படைத்திருக்கிறேன்.இந்த சினிமா உங்களுக்குள் இருக்கும் அந்த உணர்வைத் தொடும் என நம்புகிறேன்.இதன் மூலம் இந்த சினிமா சில விவாதங்களை ஏற்படுத்தும்.சில கேள்விகளை எழுப்பும்.அந்த கேள்விகளுக்கானப் பதிலைத் தேடுவதன் மூலமாக வரலாற்றில் நாம் மறந்த..மறைத்த.. பல விசயங்களுக்கான பதிலைப் பெற முடியும் என நம்புகிறேன்.இதுதான் என்னுடைய வலிமை என நம்புகிறேன்.இதுதான் என்னுடைய அரசியல்.இந்த அரசியல் இல்லையென்றால் நான் இல்லை.இதற்காக அண்ணன் பாபா சாகிப் அம்பேத்கருக்கு நான் மிகப்பெரிய நன்றியைச் சொல்கிறேன். அவர்தான்’நீ உன் சமூகத்திற்காக..உன் மக்களுக்காக..பேசியாக வேண்டும்’ என்ற உத்வேகத்தை வழங்கியவர்.அவருடைய குரலாக.. அவருடைய மாணவராக.. அவருடைய சீடராக…தொடர்ந்து நான் இயங்குவேன் என்றார்.

இவ்விழாவில் நடிகர் விக்ரம் பேசுகையில்…..

இந்தப் படத்தின் பிள்ளையார் சுழி தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான்.இது போன்றதொரு படைப்பை உருவாக்குவதற்கு தனித்துவமான துணிச்சல் தேவை.அதனைச் செய்து சாதித்ததற்காக உங்களுக்கு இந்தத் தருணத்தில் ஒரு ‘ஓ’ போட்டு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்கலானுக்கு வாழ்வு கொடுத்த உங்களுக்கு என்றென்றும் நன்றிக்கடன் பட்டவனாக இருப்பேன். என்னுடைய வாழ்க்கையில் இது மிக முக்கியமான படம்.

படப்பிடிப்புத் தளத்தில் அமைதியாக இருந்து அற்புதமாகப் பணியாற்றிய ஒளிப்பதிவாளர் கிஷோர் குமாருக்கும் நன்றி.படத்தில் அனைத்துக் கதாபாத்திரங்களும் முக்கியமானவை.இந்தப் படத்தை நீங்கள் பார்ப்பதை விட ஜீவி இசை மூலம் கேட்பீர்கள்.இன்றைய விழாவின் நாயகன் அவர்தான்.படத்தில் நாங்கள் உணர்ந்து நடித்த விசயத்தை..நீங்கள் திரையில் அற்புதமான இசை மூலம் மேம்படுத்தி இருக்கிறீர்கள்.நீங்கள் உருவாக்கிய ஒலிகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும் தனித்துவமானதாகவும் இருந்தன. இதற்காக உங்களுக்கு இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படத்தின் பணியாற்றிய நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்தத் தருணத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவிற்காக ஆர்வத்துடன் காத்திருந்து வருகை தந்த என்னுடைய இரசிகர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் என்னுடன் பணியாற்றிய என்னுடைய குழுவினருக்கு இந்த மேடையில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை நான் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்ததில்லை.ஏனெனில் ஒவ்வொரு நாளும் நான்கு மணி நேரம் மேக்கப் போட வேண்டும். அதிலும் குறிப்பாக முப்பையிலிருந்து வருகை தந்த டாம் எனும் கலைஞர்.

இந்தக் கதாபாத்திரத்தை இயக்குநர் ரஞ்சித் கற்பனை செய்து உருவாக்கியிருந்தாலும், இதனை திரையில்‌ காணும் தோற்றத்தை உருவாக்கியவர் ஒப்பனைக் கலைஞர் டாம் தான்.

இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரத்தில் தோன்றும் தொப்பையை நிஜமாகவே சாப்பிட்டு சாப்பிட்டு ஏற்படுத்திக் கொண்டதுதான்.

என்னுடைய குழுவைச் சேர்ந்த ஷ்ரவண் டாட்டூவை வரைவார்.மேலும் என்னுடைய குழுவைச் சேர்ந்த கலை, பிரின்ஸ் இவர்களெல்லாம் என்னுடைய ஒப்பனையை சீராக்கியவர்கள்.செதுக்கியவர்கள்.

‘தூள்’படத்தில் தொடங்கி இதுவரை ஆறு படங்களில் பசுபதி உடன் இணைந்து நடித்திருக்கிறேன்.இதுவரை நான் யாருடனும் இவ்வளவு படங்களில் நடித்ததில்லை.‌இந்தத் திரைப்படத்தில் அற்புதமான கதாபாத்திரத்தில் அவரும் நடித்திருக்கிறார்.இந்தப் படத்தில் அவர் பேசும் ஸ்லாங்கை அனைவரும் மேடையில் மிமிக்கிரி செய்வார்கள்.அந்த அளவிற்கு அவருடைய பேச்சு பிரபலமாகும்.அவர் இப்போது துருவ்‌ உடனும் பைசன் படத்தில் நடித்து வருகிறார்.

மாளவிகா மோகனன் – ஆரத்தி எனும் கதாபாத்திரத்தை மிகவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார்.படத்தில் அவர்கள் பேசும் டயலாக் கஷ்டமாக இருக்கும்.இயக்குநர் ரஞ்சித் அவரிடம் இருந்து நேர்த்தியாக வேலையை வாங்கினார்.

பார்வதி- இவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என எப்போதும் விரும்பி இருக்கிறேன்.‌அவருடைய ஸ்டைல் ஆப் ஆக்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும்.இந்தப் படத்தில் அவருடன் இணைந்து நடித்திருப்பது சந்தோசமாக இருக்கிறது.

பா இரஞ்சித் சொன்னது போல் அந்தக் காலகட்டத்தில் பெண்களும் வேலைக்குச் செல்வார்கள்.போருக்குச் செல்வார்கள். சண்டையிடுவார்கள்.அவர்களுடைய கைகளும் ஆண்களின் கைகளைப் போல் கடினமாகத்தான் இருக்கும்.அது போன்றதொரு சமத்துவம் இருந்த காலகட்டம் அது.‌இரஞ்சித்தின் படங்களில் பெண்கள் எப்போதும் உறுதியானவர்களாக இருப்பார்கள்.இந்தப் படத்தில் நாயகனுக்கு நிகராக நாயகிகள் இருக்கிறார்கள்.இதனால் பார்வதி, மாளவிகாவுடன் பணியாற்றியது மறக்க இயலாத அனுபவமாக இருந்தது.

டேனி – படப்பிடிப்புத் தளத்தில் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.படத்தில் அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.அவரிடம் படத்தின் விளம்பரப்படுத்துவதற்கான நிகழ்வுகளில் கலந்து கொள்வீர்களோ கலந்து கொள்ள மாட்டீர்களோ அது உங்கள் விருப்பம். ஆனால் இந்தப் படத்தின் முதல் நாள் முதல் காட்சியைக் காண திரையரங்கத்திற்கு வருகை தர வேண்டும்.அங்கு நாங்கள் இந்தப் படைப்பை எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதனை நேரில் காண வேண்டும் எனக் கேட்டுக் கொண்டேன். அதற்காக இன்று இந்த இசை வெளியீட்டு விழாவில் அவரும் கலந்து கொண்டிருக்கிறார். இதற்காகவும் அவருக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படத்தில் அரிகிருஷ்ணன் சிறப்பாக நடித்திருக்கிறார்.அவரை நான் ‘மெட்ராஸ்’ படத்திலிருந்தே கவனித்து வந்திருக்கிறேன். அவன் சிறந்த நடிகர்.அனைத்து இயக்குநர்களும் அவன் மீது ஒரு கண் வைத்து, வாய்ப்பினை வழங்க வேண்டும் என இந்தத் தருணத்தில் கேட்டுக்கொள்கிறேன்.படப்பிடிப்புத் தளத்தில் காட்சியைப் படமாக்கும் தருணத்தில் அவனது முயற்சிகள் அனைத்தும் ‘சேது’ படத்திற்கு முன் நான் எதனை முயற்சி செய்தேனோ..‌ அதனை அவரிடத்தில் பார்த்தேன். அதனால் உறுதியாகச் சொல்கிறேன் எதிர்காலத்தில் அரிகிருஷ்ணன் சிறந்த நடிகராக வலம் வருவார்.

படத்தில் நான் மட்டுமல்ல ஒவ்வொரு காட்சியிலும் நடித்திருக்கும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களும் அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார்கள்.பா.இரஞ்சித் ஒவ்வொரு காட்சியையும் ஓவியம் போல் செதுக்கியிருக்கிறார்.ஒரு காட்சியில் நான் மட்டும் கோவணம் கட்டிக்கொண்டு தோன்றுகிறேன் என நினைத்தேன்.அந்தக் காட்சி இரண்டு நாள் நீடிக்கும் என நினைத்தேன்.ஆனால் பத்து நிமிடத்தில் அந்தக் காட்சியை இயக்குநர் இரஞ்சித் படமாக்கினார்.அந்தக் காட்சியில் உடன் நடித்த அனைவரும் அர்ப்பணிப்புடன் முழு ஈடுபாட்டுடன் நடித்து அந்தக் காட்சியை நிறைவு செய்தனர்.இது எனக்கு பிரமிப்பைத் தந்தது.

சில காட்சிகளில் நான் நிற்பது கூடத் தெரியாமல் என்னைத் தள்ளிவிட்டு நடிகர்கள் தங்களது பங்களிப்பை முழுமையாக வழங்கினார்கள்.இதற்காக இந்தத் திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும்.

சேது,பிதாமகன்,அந்நியன்,ஐ,ராவணன் ஆகிய படங்கள் எல்லாம் நான் கஷ்டப்பட்டு நடித்தேன் என அனைவருக்கும் தெரியும். அனைத்துக் கதாபாத்திரங்களையும் நான் கஷ்டப்பட்டு, முழு ஈடுபாட்டுடன் தான் தான் நடித்திருக்கிறேன்.இது அனைவருக்கும் தெரியும்.ஆனால் இந்தப் படங்கள் எல்லாம் என்னை மிகவும் கஷ்டப்படுத்தியது.ஆனால் தங்கலானுடன் ஒப்பிடும்போது இவை மிகக் குறைவு.

அனைவரும் இதுபோன்ற படங்களைத் தேர்வு செய்து நடிப்பது ஏன்? எனக் கேள்வி கேட்கிறார்கள்.இதற்கு எப்படி பதில் அளிப்பது? என யோசித்துக் கொண்டிருந்தேன்.ஆனால் உண்மையைச் சொல்ல வேண்டுமானால் தங்கலான் எனக்குள் இருக்கிறான்.எனக்கும் அவருக்கும் ஒரு ஆன்மீகத் தொடர்பு இருக்கிறது.அது என்னால் உணர முடிந்தது.

யார் தங்கலான்..? அவர் ஒரு தலைவர்…அவர் ஒரு வீரர்.அதை எல்லாம் கடந்து..அவனுக்கு ஒரு இலக்கு.அதைச் சென்றடைய வேண்டும்.அவன் குடும்பத்தை அளவு கடந்து நேசிக்கிறான்.அவன் தன் மக்களை அளவு கடந்து நேசிக்கிறான்.அவனுடைய மக்களுக்கு தங்கத்தையோ அல்லது விடுதலையோ வழங்க வேண்டும் என விரும்புகிறான்.அது என்ன? என்பது நீங்கள் படம் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.‌அவன் யோசித்துக் கூடப் பார்க்க முடியாத விசயம்..அவனுக்குக் கிடைக்க வேண்டும்.‌பல தலைமுறைகளாக கிடைக்காத ஒரு விசயம் தனக்குக் கிடைக்க வேண்டும் என நினைக்கிறான்.அவருடன் இருப்பவர்களே ‘நீ நினைப்பது நடக்காது.ஏன் நேரத்தை வீணடிக்கிறாய்.விட்டு விடு என தொடர்ந்து ஆலோசனை சொல்கிறார்கள்.எத்தனையோ தடைகள் வருகின்றன. அத்தனையும் அவன் கடக்கிறான்.

இது ஏன்? என்னுடன் சம்பந்தப்பட்டது என்றால் நான் சிறிய வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். நான் படிக்கவே மாட்டேன்.நடிப்பின் மீது தான் விருப்பம் கொண்டிருந்தேன்.எட்டாவது படிக்கும் வரை மதிப்பெண் விசயத்தில் வகுப்பில் முதல் மூன்று மாணவர்களின் ஒருவராக இருந்தேன்.நடிக்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்ட பிறகு மதிப்பெண் விசயத்தில் கடைசி மூன்று மாணவர்களில் ஒருவராக இருந்தேன்.‌

நாடகம் பார்க்கும்போது இந்தக் கதாபாத்திரத்தை இப்படி நடிக்க வேண்டும்.இப்படி நடித்திருக்க வேண்டும்..என நான் முயற்சி செய்து கொண்டே இருப்பேன்.மேடை நாடகங்களில் கூட நடிப்பதற்கு வாய்ப்பு உள்ள கேரக்டர்களில் தான் நடிப்பேன்.மேடையில் தனியாக நடித்துக் கொண்டிருப்பேன்.இது கல்லூரியிலும் தொடர்ந்தது.கல்லூரியில் படிக்கும் போது நடிப்பின் மீதான ஆசை உச்சத்தைத் தொட்டது.அதிர்ஷ்டமோ…துரதிர்ஷ்டமோ எனக்குத் தெரியவில்லை.சென்னை ஐஐடியில் ‘பிளாக் காமெடி’ எனும் நாடகத்தில் நான் நடித்தேன்.அந்த நாடகத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்று விருது கிடைத்தது.அதில் நடித்த பிறகுதான் என் கால் உடைந்தது. காலை வெட்டி அகற்ற வேண்டும் எனச் சொன்னார்கள்.அதன் பிறகு ஆஸ்பத்திரி படுக்கையில் மூன்று வருடங்களைக் கழித்தேன்.23 அறுவை சிகிச்சைகள் நடந்தன.அதன் பிறகு ஒரு வருடம் ஊன்றுகோலுடன் தான் நடப்பேன்.அப்போது என் அம்மா மருத்துவரிடம் பையன் எப்போது எழுந்து நடப்பான்? எனக் கேட்டார்கள்.அதற்கு மருத்துவர்,’இனி எழுந்து நடக்கவே மாட்டான்’எனச் சொன்னார். அதற்கு என் அம்மா அழுது கொண்டே,ஏன் இப்படிச் சொல்கிறீர்கள்? எனக்கேட்டார்.’வெட்டி அகற்ற வேண்டும் என்று சொன்ன காலை நான் காப்பாற்றி விட்டேன்.கால் இருக்கிறது தானே..எனப் பதில் அளித்தார்.

அப்போது அழுது கொண்டிருந்த என் அம்மாவைப் பார்த்து, ஏன் அழுகிறாய்? நான் நிச்சயம் எழுந்து நடப்பேன்.‌ஏனெனில் நான் சினிமாவில் நடிக்க வேண்டும். ஒரே ஒரு காட்சியில் வந்தாலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது.‌

அதன் பிறகு மெதுவாக பட வாய்ப்புகள் வந்தன.‌ தொடர்ந்து 10 ஆண்டுகள் போராடினேன்.அந்தத் தருணத்தில் நான் வேலைக்கு எல்லாம் சென்றிருக்கிறேன்.‌என்னுடைய இரண்டு ஊன்றுகோல்களில் முதலில் ஒன்றைத் தொலைத்தேன்.அதன் பிறகு மற்றொன்றையும் தொலைத்தேன்.ஏனென்றால் நடிக்க வேண்டும் என்று தீரா ஆசை மட்டும் இருந்தது.‌

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் ஊன்றுகோல் உடன் பணியாற்றினேன்.அப்போது நான் வாங்கிய சம்பளம் 750 ரூபாய்.

சினிமா வாய்ப்பு கிடைத்த பிறகு அனைவரும் அமைதியாகிவிட்டார்கள்.ஆனால் படம் ஓடவில்லை.பத்தாண்டுகள் கடந்து சென்றன. மீண்டும் உனக்கு நடிப்பு வராது விட்டுவிடு வேறு ஏதாவது கவனம் செலுத்து என்றனர்.அந்தத் தருணத்திலும் என்னால் முடியும் நிச்சயம் வெல்வேன் என்று அவர்களிடம் சொன்னேன்.அன்று என்னுடைய நண்பர்களின் பேச்சைக் கேட்டிருந்தால் நான் இன்று இந்த மேடையில் நின்று இருக்க மாட்டேன்.‌உங்களிடத்தில் நான் இப்போது பேசிக் கொண்டிருக்க மாட்டேன்.‌

ஒரு கனவை இலக்காக வைத்து நம்பிக்கையுடன் பயணித்தால் அதனை ஒரு நாள் வெல்ல முடியும்.

நான் சில சமயங்களில் இப்படிக் கூட நினைத்ததுண்டு.ஒருவேளை வெற்றி கிடைக்கவில்லை என்றால்… என்ன செய்வது என்று. தற்போதும் நடிப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருப்பேன்.இதுதான் எனக்குப் பதிலாகக் கிடைத்தது.

இதுதான் எனக்கு சினிமா மீதான காதல்.எனவே சினிமாவை நான் இப்போதும் அளவு கடந்து நேசித்துக் கொண்டிருக்கிறேன். சினிமாவை நேசித்ததால் கிடைத்த அன்பளிப்பு தான் இரசிகர்களாகிய நீங்கள்.

ராவணன் படத்தில் ஒரு வசனம் இருக்கிறது.‌’எய்யா சாமி இந்தப் பிசாசு அப்பன் ஆத்தா ஆச காசு காதல் கத்திரிக்கா இது எல்லாத்தையும் விட பெருசு..என பேசி இருப்பேன் இதுதான் இரசிகர்களாகிய நீங்கள் எனக்குக் கொடுக்கும் பரிசு. நீங்கள் கொடுத்த அங்கீகாரம்.

நாளை ஆந்திராவிற்குச் செல்கிறோம்.அதன் பிறகு பெங்களூருக்குச் செல்கிறோம்.அனைவரும் எதை நம்பி இந்தத் திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் எனக் கேட்கிறார்கள்? இப்படி அனைவரையும் இயக்குநர் பா.இரஞ்சித் கேள்வி கேட்க வைத்து விட்டார்.‌ அதுதான் முக்கியமானது இது போன்றதொரு படத்திற்கு வாய்ப்பளித்ததற்காக இரஞ்சித்திற்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.‌

மெட்ராஸ் படம் வெளியானதில் இருந்து அவர் மீது எனக்கு ஒரு மரியாதை.அவருடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தொடர்ந்து விருப்பமாக இருக்கிறேன்.அவருடைய அடுத்த படத்தில் தினேஷ் ஹீரோ.அதற்கு அடுத்த படத்தில் ஆர்யா ஹீரோ. அதற்கடுத்து நாம் இருவரும் மீண்டும் சேரலாமா? எனக் கேட்டிருக்கிறேன்.

இந்தப் படத்தில் அவர் எனக்கு ஒரு சவாலை கொடுத்தார்.இந்தக் கதாபாத்திரத்தில் தனித்துவமாக நடிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.அந்தச் சவாலைக் கொடுத்ததற்காக அவரை நான் என்றென்றும் மறக்க மாட்டேன்.நான் இந்தப் படத்தில் சிறப்பாக நடித்திருந்தால் அதற்கான அங்கீகாரம் அனைத்தும் இயக்குநர் பா.இரஞ்சித் -விஜய் -மணிரத்னம் -ஷங்கர் -ஹரி போன்ற இயக்குநர்களுக்குத் தான் சேரும்.ஏனெனில் இவர்கள் கொடுத்த ஊக்கம்.வடிவமைத்த கதாபாத்திரம்.கொடுத்த உத்வேகம் தான் காரணம்.‌இவர்களைப் போன்ற இயக்குநர்கள் இருப்பதால்தான் என்னைப் போன்ற நடிகர்கள் உருவாக முடிகிறது.

இரஞ்சித்திற்கு என தனித்துவமான ஆற்றல் வாய்ந்த குரல் இருக்கிறது.அதனைப் பின்பற்றுவதற்கு ஒரு கூட்டமும் இருக்கிறது. அதனைப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கிறார்.இதில் என்னுடைய ஆரோக்கியமான ஆதரவு உண்டு. அவருக்குள் ஒரு மென்மையான இதயம் இருக்கிறது.அதனையும் நான் கண்டிருக்கிறேன்.அவருடன் இணைந்து பணியாற்றுவதற்கு காத்திருக்கிறேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts