February 12, 2025
சினிமா செய்திகள்

பிக்பாஸ் – கமலுக்குப் பிறகு இவர்?

விஜய் தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ்.இதுவரை ஏழாண்டுகள் ஒளிபரப்பாகியிருக்கிறது.இவ்வாண்டு எட்டாமாண்டு.இந்த ஏழாண்டுகளும் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்தார் நடிகர் கமல்ஹாசன்.

இவ்வாண்டு அந்நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது….

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்ற தகவலை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களின் வழியே வந்து உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அன்பையும், பாசத்தையும் பொழிந்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் மாறியதற்கு, நீங்கள் அளித்த உணர்வுபூர்வமான, உற்சாகமான ஆதரவே அடிப்படைக் காரணம். தனிப்பட்ட முறையில் தொகுப்பாளராக நான் கற்றுக் கொண்டதை நேர்மையாக உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த அனுபவத்திற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு என்னுடைய மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காகப் பாடுபட்ட விஜய் டிவி குழுவினருக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் மற்றொரு வெற்றி சீசனாக இருக்கும் என்று நம்புகிறேன்

இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

கமல்ஹாசன் விலகியதைத் தொடர்ந்து இவ்வாண்டு அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கப்போவது யார்? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

கமல்ஹாசனுக்கு அடுத்து இந்நிகழ்ச்சியில் சிம்பு பங்குபெறுவார் என்கிற எதிர்பார்ப்பு இருந்தது.ஏனெனில், இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்கினார்.அதனால் கமலுக்குப் பிறகு அவர்தான் பிக்பாஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார் என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் இப்போது அவரும் என்னால் இயலாது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டார் என்று தெரிகிறது.

இதனால், பிக்பாஸ் தமிழ் எட்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க,நடிகர் சூர்யா மற்றும் நடிகர் விஜய்சேதுபதி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்களாம்.

இருவரில் சூர்யா வரிசையாகப் படங்கள் வைத்திருக்கிறார்.ஏற்கெனவே அவற்றிற்காகத் தேதிகள் ஒதுக்கித் தந்துள்ளார்.விஜய்சேதுபதியின் கைவசம் இருக்கிற படங்களை முடித்துவிட்டார்.புதியபடங்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எனவே,பிக்பாஸ் தமிழ் எட்டு நிகழ்ச்சியை விஜய்சேதுபதி தொகுத்து வழங்கும் வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன என்கிறார்கள்.

Related Posts