September 20, 2026
செய்திக் குறிப்புகள்

கொட்டுக்காளி பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் சொன்னது என்ன? – சூரி பகிர்வு

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் கொட்டுக்காளி. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளை வென்று வரும் இப்படத்தில்,கதையின் நாயகனாக சூரி நடித்துள்ளார்.நாயகியாக மலையாள நடிகை அன்னாபென் நடித்துள்ளார். கூழாங்கல் பட இயக்குநர் பிஎஸ்.வினோத்ராஜ் இயக்கியுள்ளார்.

இப்படம் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படம் குறித்து நாயகன் சூரியும் நாயகி அன்னாபென்னும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்தப்படத்தில் படம் முழுக்க வசனம் பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நாயகி அன்னாபென்.

இந்தக் கதாபாத்திரத்தை ஒப்புக்கொண்டது எப்படி? என்று கேட்டால்…

இப்படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது அதனால் தான் ஒப்புக்கொண்டேன். இது மிகவும் புதிய முயற்சி.
தமிழ் கலாச்சாரம் சம்மந்தமான கதைக்களம்.மதுரை, வட்டார மொழி என குறிப்பிட்ட மக்களின் வாழ்வியலைப் பற்றிப் படம் பேசுகிறது.ஆனால் இதன் உள்ளடக்கம் சர்வதேச அளவிலானது.அதனால் எந்த மொழியில் எடுத்தாலும் இந்தப் படம் மக்களைச் சென்றடையும்.இப்படத்தில் எனக்கு மட்டுமல்ல படத்திலுள்ள அனைத்துக் கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் இருக்கிறது.ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் தனித்துவம் இருக்கிறது.இயக்குநர் வினோத்ராஜ் என்னிடம் கதை சொன்ன போதே நான் நிச்சயம் இதில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டேன்.பொதுவாக, நான் கதை கேட்டால் ஒரு நாள் அவகாசம் எடுத்துக்கொண்டு தான் என் முடிவைச் சொல்வேன். ஆனால் இந்தப் படத்தின் கதையைக் கேட்டவுடனே சம்மதம் சொல்லிவிட்டேன்.

நான் மீனா என்கிற வாய்பேசாத கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.மீனா கதாபாத்திரத்தை வடிவமைத்த விதம் வித்தியாசமாக இருக்கும்.பிடிவாதம் பிடித்த பெண்.பேசமுடியாத பாத்திரம் என்பதால், உடல் மொழி, முகபாவனை, பார்வை ஆகியனவற்றின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். முகச் சவாலான இந்தக் கதாபாத்திரத்தில் சரியாக நடித்திருக்கிறேன் என நினைக்கிறேன்.படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள் என்றார்.

படம் குறித்து நடிகர் சூரி பகிர்ந்து கொண்டதாவது….

இப்படம், மக்கள் மனதில் நிச்சயம் இடம் பிடிக்கும். தனி வரவேற்பும் பெறும். இப்படத்தில் நடப்பது போன்ற ஒரு சம்பவம் அனைத்து இடங்களிலும் நடந்திருக்கும்.இதை நாம் அனைவரும் பார்த்திருப்போம்.கண்டும் காணாமல் கடந்தும் வந்திருப்போம். ஆனால் படமாக இந்த கதைக்களம் இதுவரை வந்ததில்லை. இது வர வேண்டிய ஒரு களம்.இதை என்னிடம் இயக்குநர் சொன்னவுடன் இதில் நான் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.இப்போது இப்படத்தில் நடித்ததற்காகப் பெருமைப்படுகிறேன்.

விடுதலை மற்றும் கருடன் படங்கள் போல் இந்தப்படமும் வசூலிக்குமா? என்று கேட்கக்கூடாது.இது முற்றிலும் மாறுபட்ட படம்.

சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்பேன் என்று நான் எதிர்பார்த்ததில்லை. விடுதலை படம் கூட நான் எதிர்பார்க்காதது தான்.நகைச்சுவை நடிகராக இருந்து கதையின் நாயகனாகி ’விடுதலை’, ’கருடன்’ போன்ற படங்களில் நடித்துவிட்டு, ’கொட்டுக்காளி’ போன்ற படத்தில் நடித்திருப்பது,அதன் மூலம் சர்வதேச திரைப்பட விழாக்களில் நான் பங்கேற்றிருப்பது எல்லாம் சினிமாவில் நான் நேர்மையாகப் பயணித்ததால் கிடைத்தது என நினைக்கிறேன். இவை அனைத்தும் எனக்குப் புதிய அனுபவங்கள். அதோடு, ஒரு நடிகராக பலவிதமான கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்கிற நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு சிவகார்த்திகேயன் எனக்கு அதிகாலை 5 மணியளவில் போன் செய்தார்.அப்போது அவர் சொன்ன விசயங்களை நான் இங்கு சொன்னால் அது அதிகமாக இருக்கும்.இயக்குநர் அமைதியாக இருந்துக்கொண்டு இப்படி ஒரு படம் செய்துவிட்டாரே என்று பாராட்டினார்.உங்களைப் பார்த்தால் எனக்குப் பயமாக இருக்கிறது என்றார். விடுதலை படத்தை விட இந்தப் படம் உங்களை மிகப்பெரிய உயரத்திற்கு அழைத்துச் செல்லும் என்றும் சொன்னார்.இந்தப்படத்தைப் பலமுறை பார்த்ததாகவும்,என்னுடைய நடிப்பு மிகச் சிறப்பாக இருப்பதாகவும் சொன்னார்.அவர் மட்டுமின்றி, அவரது மனைவி, அம்மா ஆகியோரும் படம் பார்த்துவிட்டு என் நடிப்பு சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள் என்றார்.அது எனக்கு சந்தோசமாக இருந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts