பொங்கல் போட்டியில் இணைகிறது வீரதீரசூரன் – விவரம்
விஜய்சேதுபதி நடித்த பண்ணையாரும் பத்மினியும்,சேதுபதி,சிந்துபாத் ஆகிய படங்களையும் சித்தார்த் நடித்த ‘சித்தா’ படத்தையும் இயக்கிய இயக்குநர் எஸ்.யு.அருண்குமார், இபோது விக்ரம் நடிக்கும் வீரதீரசூரன் படத்தை இயக்குகிறார்.
விக்ரமின் 62 ஆவது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். இந்நிலையில், இப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.படத்தொகுப்பை பிரசன்னா கவனிக்கிறார்.
இந்தப்படம் இரண்டு பாகங்களாகத் தயாராகவிருக்கிறது. இதுவரை இல்லாத மாதிரி படத்தின் இரண்டாம்பாகத்தை முதலில் வெளியிடுவதென்றும் முதல் பாகத்தை இரண்டவதாக வெளியிடுவதென்றும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
மதுரையைக் கதைக்களமாகக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் 21 ஆம் தேதி மதுரையில் தொடங்கியது.அப்போது முதல் விட்டு விட்டு நடந்த படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிட்டது.இப்போது படப்பிடிப்புக்குப் பிறகான பணிகள் நடந்து வருகின்றன.
ஏற்கெனவே, இப்படம் குறித்த அறிமுகக் காணொலி முதல்பார்வை புகைப்படம் மற்றும் விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு காணொலி ஆகியனவற்றைப் படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படம் முழுமையாகத் தயாராகுமுன்பே இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமை விற்பனை ஆகி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இப்படத்தின் தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையை ஃபைவ் ஸ்டார் செந்தில் பெற்றிருக்கிறார்.எம் ஜி எனப்படும் குறைந்தபட்ச பாதுகாப்பு வியாபார முறை அடிப்படையில் சுமார் 21 கோடி கொடுத்து இந்த உரிமையை அவர் பெற்றிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு முடிவு செய்திருக்கிறதாம்.
இப்படத்தை பொங்கல் திருநாளையொட்டி 2025 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்களாம்.
ஏற்கெனவே பொங்கல் நாளில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் குட்பேட்அக்லி,ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் கேம்சேஞ்சர்,பாலா இயக்கத்தில் அருண்விஜய் நடித்திருக்கும் வணங்கான் ஆகிய படங்கள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்தப்படத்தையும் பொங்கல் நாளில் வெளியிட முடிவு செய்திருப்பதால் 2025 பொங்கல் நாளில் நான்கு தமிழ்ப் படங்கள் வெளியாகவிருக்கிறது.
இயக்குநர்கள் பாலா,ஷங்கர் ஆகியோர் படங்களும் நடிகர்கள் விக்ரம்,அஜீத் ஆகியோர் படங்களும் ஒரேநாளில் வெளியாகும் என்று சொல்லப்படுவதால் பொங்கல் போட்டி கடுமையாக இருக்கும் என்கிறார்கள்.











