விமர்சனம்

மாயன் – திரைப்பட விமர்சனம்

சொந்த வீடு வாங்க வேண்டும் என்கிற வேகத்தோடு, தான் பணியாற்றும் மென்பொருள் நிறுவனத்தில் தனக்கு வரும் அவமதிப்புகளைக் கூடத் தாங்கிக் கொண்டு பணியாற்றுகிறார் ஓர் இளைஞர். அவருக்கு ஒரு மின்னஞ்சல் வருகிறது. அதில் இன்னும் 13 நாட்களில் உலகம் அழியப்போகிறது என்றொரு செய்தி.முதலில் அதை அவர் நம்பவில்லை.அதன்பின் அவர் வாழ்வில் நடக்கும் சில நிகழ்வுகள் அதை நம்ப வைக்கிறது.அதன் விளைவாக, இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கைக்கு மாறாக விரும்பியதை எல்லாம் செய்கிறார்.அதற்குப் பிறகு என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லியிருப்பது தான் மாயன் திரைப்படம்.

நாயகனாக நடித்திருக்கும் வினோத்மோகன், பெரும் தாடி மீசையுடன் இருக்கிறார்.காதல், மோதல், ஆன்மீக உணர்வு ஆகியனவற்றை வெளிப்படுத்தக்கூடிய வேடம்.அதற்குத் தக்க நடிக்க முயன்றிருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கிறார் பிந்துமாதவி.நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் வருகிறார்.அவருடைய வழக்கமான புன்சிரிப்பும் அகன்ற கண்களும் சேர்ந்து நடித்திருக்கின்றன.

எதிர்மறை வேடங்களில் சாய் தினா,ராஜசிம்மன் ஆகியோரைப் பாரத்ததுமே இவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று நினைக்கிற மாதிரியே நடித்திருக்கிறார்கள். காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ஜான்விஜய் கவனம் பெறுகிறார்.ஆடுகளம் நரேன், கஞ்சா கருப்பு,கெளரவ வேடத்தில் வரும் பியா பாஜ்பாய், ஆதிகாளியாக நடித்திருக்கும் மரியா, சில காட்சிகளில் மட்டும் வரும் ரஞ்சனா நாச்சியார் ஆகியோர் தங்கள் பங்கை நிறைவாகச் செய்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபர்ட் கதை மற்றும் திரைக்கதையை உணர்ந்து அதற்கேற்ற பாடல்களைக் கொடுக்க விழைந்திருக்கிறார்.இந்தக் கதைக்கு இப்படித்தான் இருக்கவேண்டுமென்கிற எண்ணத்தில் பின்னணி இசைத்திருக்கிறார்.

ஒளிப்பதிவாளர் கே.அருண் பிரசாத்தின் உழைப்பைக் காட்டிலும் கணினி வரைகலைக் காட்சிகள் அதிகம்.அதற்கான அடிப்படைக் காட்சிகளைச் சரியாகக் கொடுத்திருக்கிறார்.

எழுதி இயக்கியிருக்கிறார் ஜெ.ராஜேஷ் கண்ணா. சுவாரசியமான மையக்கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார்.அதற்குள், மாயவர்கள், ஆதிசிவன், அவ்வப்போது நாயகனை துரத்தும் பாம்பு என்று பல புதிரான விசயங்களைச் சேர்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

மாயவர்கள் கதை என்று சொல்லப்படுவதை நம்பி எடுக்கப்பட்டிருக்கும் படம்.அதற்கேற்பவே இருக்கிறது.

– இளையவன்

Related Posts