Uncategorized விமர்சனம்

வா வரலாம் வா – திரைப்பட விமர்சனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்ற பாலாஜிமுருகதாஸ் நாயகனாக நடித்திருக்கும் படம் வா வரலாம் வா.பல வருடங்கள் சிறையில் கழித்துவிட்டு விடுதலையாகிறார் பாலாஜி முருகதாஸ்.அவருடனே இருக்கிறார் ரெடின் கிங்ஸ்லி.

வெளியில் வந்த பின்பு உழைத்து வாழ நினைக்கிறார்கள்.சிறைக்குப் போய்வந்தவர்களுக்கு வேலை தர மறுக்கிறது சமுதாயம்.அதனால் குறுக்குவழியில் செல்லும் ஒருவரிடம் வேலைக்குச் சேருகிறார்கள்.

40 குழந்தைகளும், மலேசியாவில் இருந்து வந்த சகோதரிகள் மஹானா மற்றும் காயத்ரி ரெமா ஆகியோர் பயணிக்கும் பேருந்தைக் கடத்துகிறார்கள்.

அந்தக் குழந்தைகள் ஆதரவற்றவர்கள் அதனால், அவர்களுடைய திட்டம் தோல்வியடைகிறது. இதனால், மஹானா மற்றும் காயத்ரி இருவரையும் காதலிக்கத் தொடங்குகிறார்கள். அவர்கள் பணக்கார வீட்டுப் பெண்கள்.எனவே, அவர்களைக் கடத்திப் பணம் பறிக்க அந்த குறுக்குவழிக்காரர் திட்டம் போடுகிறார்.

அந்தத் திட்டம் வெற்றி பெற்றதா? பாலாஜி மற்றும் கிங்ஸ்லி காதல் வெற்றி பெற்றதா? என்பதைச் சொல்வதுதான் படம்.

நாயகன் பாலாஜி முருகதாசுக்கு காதல்,நகைச்சுவை, ஆக்‌ஷன் என எல்லாவற்றையும் வெளிப்படுத்தக் கூடிய வேடம்.அவரும் அடித்து ஆடியிருக்கிறார்.நடனமும் நன்றாக வருகிறது.அதனால் அவர் வரும் காட்சிகள் இரசிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

நாயகியாக நடித்திருக்கும் மஹானாவும் குறைவில்லை. வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார்.பாடல் காட்சிகளில் தாராளம் காட்டி இளைஞர்களை ஈர்க்கிறார்.

நாயகனுடன் படம் முழுவதும் வருகிறார் ரெடின்கிங்ஸ்லி.சிரிப்புக்காக அவரை வைத்திருக்கிறார்கள்.அவர் மட்டுமின்றி சிங்கம் புலி, தீபா ஆகியோரும் சிரிக்க வைக்கிறார்கள்.

காயத்ரி ரெமா, சரவண சுப்பையா, கிரேன் மனோகர், வையாபுரி, மைம்கோபி ஆகியோர் படம் வேகமாக நகர உதவியிருக்கிறார்கள்.

தேவாவின் இசையில் அனைத்துவகைப் பாடல்களும் இடம்பெற்றிருக்கின்றன.பின்னணி இசையும் நன்று.

கார்த்திக் ராஜா ஒளிப்பதிவு செய்திருக்கிறார். காட்சிகள் வண்ணமயமாக அமைந்திருக்கின்றன.பாடல்காட்சிகள் பெரிதாகப் பேசப்படும்.

எல்.ஜி.ரவிசந்தர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதோடு, தயாரிப்பாளர் எஸ்.பி.ஆர் உடன் இணைந்து இயக்கியுள்ளார்.

பல கஷ்டங்களோடு திரையரங்குகளுக்கு வருபவர்கள் சிரித்து மகிழ்ந்து செல்லவேண்டும் என்று நினைத்துப் படம் எடுத்திருக்கிறார்கள். அதில் வெற்றியும் கிடைத்திருக்கிறது.

– சுரா

Related Posts