செய்திக் குறிப்புகள்

19 ஆண்டுகள் சண்டைப்பயிற்சி இப்போது இயக்குநர் – அனல் அரசு அதிரடி

தமிழ்த்திரையுலகம் மட்டுமின்றி இந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான சண்டைப்பயிற்சி இயக்குநர் அனல் அரசு. 12 ஆண்டுகளுக்கும் மேலாக சண்டைப் பயிற்சிக் கலைஞராக இருந்து 2004 ஆம் ஆண்டு சண்டைப் பயிற்சி இயக்குநராக மாறினார்.

பத்தொன்பது ஆண்டுகள் வெற்றிகரமான சண்டைப்பயிற்சி இயக்குநராகத் தொடரும் அவர் இப்போது, இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக மாறியுள்ளார்.

அவர் தயாரித்து இயக்கவிருக்கும் படத்தின் பெயர் பீனிக்ஸ்.இந்தப்படத்தில் விஜய்சேதுபதி மகன் சூர்யா கதாநாயகனாக அறிமுகமாகிறார்.இவர் ஏற்கெனவே, விஜய் சேதுபதி நடித்த நானும் ரவுடி தான், சிந்துபாத் ஆகிய படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். தற்போது அவர் பீனிக்ஸ் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறார்.

ஏகே பிரேவ்மேன் பிக்சர்ஸ் சார்பில் ராஜலக்ஷ்மி அரசகுமார் தயாரிக்கும் இப்படத்தின் தொடக்கவிழா நவம்பர் 24,2023 அன்று நடைபெற்றது.

தொடக்க விழாவில் பேசிய அனல் அரசு, இயக்குநராக எனது முதல் திரைப்படம் இது. இதைச் சிறந்த படைப்பாகக் கொடுக்க ஆவலுடன் இருக்கிறேன். ஜவான் படப்பிடிப்பில் இருந்தபோது, விஜய் சேதுபதியின் மகன் தனது தந்தைக்கு மதிய உணவு பரிமாறுவதற்காக செட்டுக்கு வந்திருந்தார். அவர் அதிரடியான சண்டைக் காட்சிக்கான தயாரிப்பை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அப்போது தான் என் கதையில் நடிக்க அவர் பொருத்தமானவராக இருப்பார் என்பதை உணர்ந்தேன்.இந்த எண்ணத்தை விஜய் சேதுபதியிடம் பகிர்ந்து கொண்டபோது,அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
இந்தப் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் சூர்யாவை அறிமுகப்படுத்துவதில் பெருமைப்படுகிறேன் என்றார்.

செய்தியாளர்களிடம் சூர்யா பேசியதாவது….

நீண்ட நாட்களாக சண்டைக் காட்சிகளில் நடிக்க விரும்பினேன். அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது அதைச் சரியாகப் பயன்படுத்த நினைத்தேன்.

ஒருநாள் அப்பா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அவருக்கு சாப்பாடு கொடுக்கப் போனேன். அப்போது அனல் அரசு மாஸ்டர் கண்ணில் பட்டுவிட்டேன். அதன்பிறகு இந்தப் படம் அமைந்தது.இந்தப் படத்திற்காக 6 மாதம் பயிற்சி எடுத்தேன்.

அப்பா பெயரை நான் எந்த இடத்திலும் உபயோகப்படுத்தக் கூடாது என நினைக்கிறேன். அதனால்தான், படத்தில் கூட சூர்யா என என் பெயரை மட்டும்தான் பயன்படுத்தச் சொன்னேன். இப்போது காலேஜில் இரண்டாம் வருடம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து அப்பாவோடு சேர்ந்து நடிப்பேனா என்றுக் கேட்டால் அதைப் போக போகப் பார்த்துக் கொள்ளலாம். அப்பா மலேசியாவில் ஷூட்டிங்கில் உள்ளதால் இங்கு கலந்துகொள்ள முடியவில்லை. காலையில் எங்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.

இப்படத்தில் சூர்யாவோடு, விக்னேஷ்,வர்ஷா விஸ்வநாத்,அபி நட்சத்ரா,சத்யா என்.ஜே,சம்பத்,ஹரீஷ் உத்தமன்,
திலீபன்,’அட்டி’ ரிஷி,பூவையார் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள்.

இந்தப்படத்தை ‘அனல்’ அரசு எழுதி இயக்குகிறார். அவர் மனைவி இராஜலட்சுமி அரசகுமார் தயாரிக்கிறார்.

இப்படத்துக்கு இசை – சாம் சி.எஸ்,ஒளிப்பதிவு – ஆர்.வேல்ராஜ்,படத்தொகுப்பு – பிரவீன் கே.எல்,

திரைப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Related Posts