இன்னொரு படத்திலிருந்தும் வடிவேலு நீக்கம்?
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வடிவேலு நடித்த நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் எதிர்பார்த்தபடி போகவில்லை. இதன்காரணமாக. சந்திரமுகி 2 படத்திலிருந்து வடிவேலுவை நீக்கும் முடிவை அப்படக்குழு எடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்நிலையில் இன்னொரு படத்திலிருந்தும் வடிவேலுவை நீக்கும் முடிவை எடுத்திருக்கிறார்களாம்.
விஜய்சேதுபதி நடித்த ஒருநல்லநாள்பாத்துசொல்றேன் படத்தை இயக்கியவர் ஆறுமுககுமார். அவர் இப்போது மீண்டும் விஜய்சேதுபதியைக் கதாநாயகனாக வைத்து ஒரு படம் இயக்கவிருக்கிறார்.
அப்படத்துக்கான வேலைகள் வேகமாக நடந்துகொண்டிருக்கின்றன. அந்தப்படத்தில் நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் வடிவேலுவை நடிக்க வைக்கத் திட்டமிட்டிருந்தார்கள். வடிவேலுவும் நடிக்க ஒப்புக்கொண்டிருந்தாராம்.
அதன்பின் சம்பளம் குறித்த பேச்சுவந்த போது வடிவேலு ஐந்துகோடி ரூபாய் சம்பளம் என்று சொல்லியிருக்கிறார். இதனால் படக்குழு அதிர்ச்சியடைந்ததாம்.
வடிவேலுவுக்கு இவ்வளவு சம்பளம் கொடுத்துப் படமெடுத்தால் அதற்குப் பலன் இருக்குமா? என்கிற விவாதம் நடந்துகொண்டிருந்த நேரத்தில், சம்பளம் மட்டுமல்ல தான் நடிக்கும் காட்சிகளில் இம்மாதிரியெல்லாம் இருக்கவேண்டும் என்று சில நிபந்தனைகளையும் அவர் விதித்ததாகச் சொல்கிறார்கள்.
இதனால் அவரை நடிக்க வைப்பதா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருந்திருக்கின்றனர்.
இந்நிலையில், நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி அது சரியாகப் போகவில்லை என்பதோடு அந்தப்படத்தில் ஆனந்தராஜ் அளவுக்குக் கூட வடிவேலுவுக்குப் பெயர் கிடைக்கவில்லை என்பதால் இந்தப்படத்திலிருந்தும் அவரை நீக்கிவிடும் முடிவுக்குப் படக்குழுவினர் வந்துவிட்டார்களாம்.
செய்தியறிந்து பதறிய வடிவேலு அங்கும் சமரச முயற்சியைத் தொடங்கியிருக்கிறாராம்.
விரைவில் இந்தப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது. அப்போது வெளியாகும் அறிவிப்பில் விடை கிடைத்துவிடும்.











