சினிமா செய்திகள்

பையா 2 படத்தில் நடிக்கிறார் கார்த்தி – புதிய தகவல்கள்

இயக்குநர் ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான படம் பையா.

இப்படத்தின் இரண்டாம்பாகம் தயாராகவிருப்பதாகவும் அதனை இயக்குநர் ந.லிங்குசாமியே இயக்கவுள்ளார் என்றும் அண்மைக்காலமாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இப்போது உருவாகவிருக்கும் பையா 2 படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இந்நிலையில், இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

பையா 2 படத்தில் நடிக்க ஆர்யாவிடம் பேச்சுவார்த்தை நடந்துவந்ததாகவும் அதில் சரியான உடன்பாடு ஏற்படவில்லையாம்.

இந்நிலையில், பையா 2 படத்தின் கதை குறித்து கார்த்தியிடம் பேச இயக்குநர் ந.லிங்குசாமி முயன்றுள்ளார். அந்த முயற்சி வெற்றி பெற்று கார்த்தியைச் சந்தித்திருக்கிறார்.

அப்போது, கதையை கார்த்தியிடம் இயக்குநர் ந.லிங்குசாமி விவரித்தாராம். அந்தக் கதை கார்த்திக்குப் பிடித்துவிட்டதாம்.

இதனால், இப்படத்துக்கு வேறு யாரையும் தேடவேண்டாம் நானே நடிக்கிறேன் என்று உறுதி கொடுத்திருக்கிறார்.அதைக் கேட்டு மகிழ்ந்திருந்த இயக்குநர் ந.லிங்குசாமிக்கு மேலும் ஒரு மகிழ்ச்சியாக, இப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்தை நானே சொல்கிறேன் என்று கார்த்தி சொல்லியிருக்கிறார்.

அப்படி அவர் சொன்ன நிறுவனம் ஸ்டுடியோகிரீன் நிறுவனம்.

இதுகேட்டு ந.லிங்குசாமிக்கு அதிர்ச்சி. ஏனெனில், ஸ்டுடியோகிரீன் ஞானவேல்ராஜாவுடன் கருத்துவேறுபாட்டில் இருக்கிறார் லிங்குசாமி.

அவர் தயாரிப்பில் படம் இயக்குவதா? என்கிற அதிர்ச்சிதான் அது.

இப்படம் மிகுந்த பொருட்செலவு தேவைப்படும் கதையைக் கொண்டிருப்பதாகவும் அதைக் கையாள ஸ்டுடியோகிரின் போன்ற ஒரு நிறுவனம் தேவை என்கிற நிலை.

இதனால் இயக்குநர் ந.லிங்குசாமியின் தயக்கத்தைப் போக்கிய அதேநேரம், கார்த்தியின் முன்னெடுப்பில், ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தின் சார்பில் இயக்குநர் ந.லிங்குசாமியைத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள்.

அந்தப்பேச்சுவார்த்தைகள் சுமுகமாக நிறைவடைந்ததாகச் சொல்கிறார்கள்.

இதனால்,ஸ்டுடியோகிரின் தயாரிப்பில் ந.லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பையா 2 என்கிற அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்கிறார்கள்.

பையா படம் கார்த்தியின் திரைப்பயணத்துக்கு பலமாக அமைந்த படம். அவருடைய இப்போதைய உயரத்துக்குத் தகுந்தாற்போல் அமைந்திருக்கும் இந்தக்கதை அவருக்கு மேலும் பலம் சேர்க்கும் என்கிறார்கள்.

Related Posts