வீரன் – திரைப்பட விமர்சனம்
கதாநாயகர்கள் என்றாலே அதீத சக்தி உள்ளவர்கள்தாம். நூறு பேரை அடித்துத் துவைப்பார்கள், ஆயிரக்கணக்கான துப்பாக்கிக் குண்டுகள் பாய்ந்தாலும் நாயகன் மேல் மட்டும் ஒரு குண்டு படாது. வெறும் நாயகன் என்றாலே அப்படி, இந்தப்படத்தில் நாயகன் ஆதிக்கு இடிவிழுவதால் சிறப்பு சக்திகள் வந்துவிடுகின்றன. அவற்றை வைத்துக் கொண்டு அவர் என்னவெல்லாம் செய்கிறார்? என்பதுதான் படம்.
நாயகன் ஹிப்ஹாப் ஆதி, இந்தப்படத்தில் புதிதாக நடிக்க முயன்றிருக்கிறார்.ஆனால் அது அவருக்கு உதவவில்லை. நடிப்பு என்பது தோன்றுவது மட்டுமன்று என்பதை உணராமல் தொடர்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அறிமுக நடிகை ஆதிரா ராஜ்,கதைக்களத்துக்கு ஏற்றவராக இருக்க முயன்றிருக்கிறார். சில இடங்களில் இரசிக்க வைத்திருக்கிறார்.
வில்லனாக நடித்திருக்கிறார் வினய். முந்தைய படங்களில் பார்த்தது போலவே இருக்கிறார். ஆதியின் நண்பராக நடித்திருக்கும் யூடியூபர் சசி கவனிக்க வைக்கிறார்.,
நகைச்சுவைக்கென இருக்கும் முனிஷ்காந்த், காளி வெங்கட் ஆகியோர் அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள்.
தீபக் டி.மேனனின் ஒளிப்பதிவில், சூப்பர்ஹீரோ காட்சிகளை விறுவிறுப்பாகக் காட்ட நினைத்திருக்கிறார்கள். ஆனால் நினைத்தது நடக்கவில்லை.
படத்தொகுப்பாளர் பிரசன்னா ஜி.கே, இன்னும் கூடுதலாக உழைத்திருக்கவேண்டும். பல காட்சிகளில் தொய்வு.
நடிப்பில் மட்டுமின்றி இசையிலும் குறை வைத்திருக்கிறார் ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதி.அவருடைய பலம் என்று சொல்லப்படும் பாடல்களிலேயே குறை என்றால் பின்னணி இசையில் கேட்கவும் வேண்டுமோ?
கிராமத்து வீரன் கோயில், அதை இடிக்கத் துடிக்கும் பன்னாட்டு முதலை, அதை தன் சிறப்புச் சக்திகளின் மூலமாக நாயகன் தடுக்கிறார் என்கிற வழக்கமான கதையை வழக்கமான திரைக்கதை மூலம் சொல்லிச் சலிப்பேற்படுத்துகிறார் இயக்குநர் ஏ.ஆர்.கே.சரவண்.
இவரா மரகதநாணயம் படம் கொடுத்தவர்? என்கிற எண்ணமும் ஏற்படுகிறது. இதற்கு நாயகன் ஆதி தான் காரணமாக இருப்பாரோ? என்கிற ஐயமும் ஏற்படுகிறது.
– வேலன்











