விமர்சனம்

நிமிர் விமர்சனம்

மலையாளத்தில் ஃபகத் ஃபாசில் நடித்து வெளிவந்த ‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தின் தமிழ் மாற்றுதான் தான் நிமிர்.

நடிப்பு இராட்சசன் என்று சொல்லப்படுகிற ஃபகத் நடித்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதே உதயநிதியின் தன்னம்பிக்கைக்குச் சான்று. ஒப்புக் கொண்டது மட்டுமின்றி உறுத்தாத நடிப்பில் தேர்ச்சி மதிப்பெண் பெறுகிறார். வசன உச்சரிப்புகளில் இன்னும் கொஞ்சம் யதார்த்தம் இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

‘மகேஷிண்ட பிரதிகாரம்’ படத்தில் இடுக்கி மாவட்டத்தின் அழகு, பழக்க வழக்கங்கள் காட்டப்படிருப்பது தனித்தன்மை. இப்படத்தில் திருநெல்வேலி பின்புலம் என்று வைத்திருந்தாலும் அது படத்துக்குத் தேவைப்படவில்லை.

தென்காசியில் ஒரு சிறிய புகைப்பட நிலையம் வைத்து நடத்தும் புகைப்படக் கலைஞராக உதயநிதி நடித்திருக்கிறார். அவருடைய அப்பாவாக இயக்குநர் மகேந்திரன் நடித்திருக்கிறார். அவரும் புகைப்படக்கலைஞர். இவ்விருவரையும் வைத்துக் கொண்டு புகைப்படம் எடுப்பது வேலையல்ல கலை என்பதை நுட்பமாகக் காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் நாயகிகளாக பார்வதிநாயர், நமீதா பிரமோத் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். நடிப்பிலும் அழகிலும் நமீதா முந்துகிறார். உன் சபதத்தை விட நம் திருமணம் முக்கியம் என்று உதயநிதியிடம் கெஞ்சி விட்டு வீட்டுக்குள் போகும் முன் கையெடுத்துக் கும்பிடும் காட்சியில் அசத்துகிறார் நமீதா.

சமுத்திரக்கனி நல்லவரா ? கெட்டவரா ? எதுவோ அளவாய் நடித்திருக்கிறார். அவருடைய வசனங்கள் படத்துக்குப் பலம்.

கருணாகரன், எம்.எஸ்.பாஸ்கர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பு. கருணாகரன் இப்படி விஸ்வரூபமெடுப்பார் என்று எம்.எஸ்.பாஸ்கர் போலவே நாமும் எதிர்பார்க்க முடியாது.

நடுத்தரக் குடும்பத் தந்தை வேடத்துக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறார் சண்முகராஜா. இன்னும் எவ்வளவு நாளைக்குத்தான் லாலா கடை வடையையே சாப்பிடுவ என்று மகளிடம் கேட்டு அதிர வைக்கிறார்.

இமான் அண்ணாச்சி, அருள்தாஸ் ஆகியோரெல்லாம் எதற்கென்று தெரியவில்லை.

பாடல்கள் ரசிக்கத்தக்கனவாக இருக்கின்றன. அஜானீஷின் இசையில் தாமரையின் வரிகளில் வரும் “நெஞ்சில் மாமழை பாடல்” கேட்கும் போதே மனதைக் கவரும்.இவ்வாண்டின் வெற்றிப் பாடல்கள் வரிசையில் இடம் பிடிக்கும்.

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவால், நாமும் அவ்வாற்றில் குதித்து நீந்த மாட்டோமா ? என்கிற ஏக்கம் வருகிறது.

இவ்வளவு பலங்கள் படத்தில் இருந்தும் அழுத்தமான கதை, நாயகனுக்கும் எதிர்நாயகனுக்குமான முரணில் இருக்கும் சிறுபிள்ளைத்தனம் ஆகியனவற்றால் இயக்குநர் பிரியதர்ஷனால் நம்மை நிமிர வைக்க முடியவில்லை.

Related Posts