சினிமா செய்திகள்

தமிழ்த் திரையுலக வரலாற்றில் முதன்முறையாக… – சந்திரமுகி 2 பட தகவல்

பி.வாசு இயக்கத்தில் ரஜினி, ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘சந்திரமுகி’.2005 ஆம் ஆண்டில் வெளியான இந்தப்படத்தை சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.

பெரும் வசூல் சாதனை புரிந்த இந்தப்படத்தின் அடுத்த பாகமாக ‘சந்திரமுகி 2’ என்கிற படம் குறித்த பேச்சுவார்த்தை அவ்வப்போது நடைபெற்று வந்தது.

ஏப்ரல் 2020 இல் ‘சந்திரமுகி 2’ படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் ராகவா லாரன்ஸ்.அதன்படி, பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கவுள்ளார்.

இது தொடர்பாக ராகவா லாரன்ஸ் வெளியிட்டுள்ள முகநூல் பதிவில் கூறியிருந்ததாவது….

நண்பர்கள் மற்றும் ரசிகர்களே, உங்கள் அனைவரும் ஒரு மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்கிறேன். எனது அடுத்த படங்களில் ஒன்று என் தலைவரின் படமான ‘சந்திரமுகி 2’. தலைவரின் அனுமதி மற்றும் ஆசியுடன் இந்தப் படத்தில் நடிப்பது என் அதிர்ஷ்டம். பி.வாசு சார் இயக்க, எனது அதிர்ஷ்டக்கார தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் சார் தயாரிக்கவுள்ளார்.

இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார்.

அதன்பின் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி, ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பதிவில்…

‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜோதிகா அவர்கள் சிம்ரன் அவர்கள், மற்றும் கியாரா அத்வானி நடிக்க உள்ளதாக வரும் செய்திகள் அனைத்தும் வதந்திகள் ஆகும். தற்போது திரைக்கதை வேலைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொரோனா சூழ்நிலை முடிவு பெற்ற பிறகே தயாரிப்பு நிறுவனம் மூலம் அது பற்றி அதிகாரபூர்வமாக வெளியிடப்படும்.

என்று சொல்லியிருந்தார்.

இப்போது சந்திரமுகி 2 படத்துக்கான வேலைகள் தொடங்கிவிட்டனவாம்.

முதல்கட்டமாக, சந்திரமுகி படத்தைத் தயாரித்த சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து அப்பெயரைப் பயன்படுத்தும் உரிமையை வாங்கியிருக்கிறார்களாம்.

இதற்காக சன் பிக்சர்ஸ் கொடுத்த தொகை ஒரு கோடி என்று சொல்லப்படுகிறது. ஒரு பெயருக்கு இவ்வளவு தொகை கொடுத்தது தமிழ்த்திரையுலகில் இதுவே முதல்முறை என்கிறார்கள்.

விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts