அஜீத்தின் அடுத்த படம் எப்போது?
கடந்த ஆண்டு இறுதியில் அஜீத் தரப்பிலிருந்து வெளியான தகவல்படி இவ்வாண்டு அக்டோபர் வரை அவர் மகிழுந்துப் பந்தயத்தில் கலந்துகொள்வார்.அதன்பின் நவம்பரில் அவருடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (அக்டோபர் 5,2025) வெளியான அஜித் குமார் ரேசிங் அணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பில்….
தமிழ்நாட்டின் மாண்புமிகு துணை முதல்வர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SDAT) மற்றும் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுக்கு, அஜித் குமார் மற்றும் அவரது ரேசிங் அணி தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்கிறது. உங்கள் அன்பும், ஆதரவும் எப்போதும் எங்களுக்குத் துணை நின்றுவந்துள்ளன.
எங்களின் அடுத்த கட்ட பங்கேற்பு, கீழ்காணும் புகழ்பெற்ற சர்வதேச மோட்டார் விளையாட்டு போட்டிகளில் நடைபெறும்:
ஆசியன் லெ மான்ஸ் தொடர் (Asian Le Mans Series)
•டிசம்பர் 13 & 14, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 31 & பிப்ரவரி 01, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•பிப்ரவரி 07 & 08, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
கிரெவென்டிக் 24 மணி நேர தொடர் (Creventic 24H Series)
•டிசம்பர் 05 & 06, 2025 – சேபாங், மலேசியா
•ஜனவரி 09 & 10, 2026 – அபூதாபி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
•ஜனவரி 17 & 18, 2026 – துபாய், ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
வரவிருக்கும் பங்கேற்புகள் – 2026
•மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் (Michelin Le Mans Cup – European Series)
•கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர் (Creventic 24H – European Series)
உங்களின் அன்பும், ஆதரவும், வாழ்த்துகளும் எப்போதும் எங்களுடன் இருக்கும் என நம்பிக்கையுடன் எதிர்பார்க்கிறோம்.
அஜித் குமார் மற்றும் அவரது அணி, மேலும் உயர்ந்த இலக்குகளுக்காக தங்கள் முழு மனதும் உடலும் அர்ப்பணித்து செயல்பட உள்ளனர்.
அன்புடன்,
அஜித் குமார் மற்றும் அஜித் குமார் ரேசிங் அணி
இவ்வாறு அதில் கூற்ப்பட்டுள்ளது.
இதன்படி 2026 பிப்ரவரி வரை அவர் பந்தயங்களில் கலந்து கொள்கிறார். அதற்கடுத்து அவர் கலந்து கொள்ளவிருக்கும் மிச்சலின் லெ மான்ஸ் யூரோப்பிய தொடர் 2026 ஏப்ரலில் நடக்கவிருக்கிறது.
அதைத்தொடர்ந்து, கிரெவென்டிக் 24 மணி நேர யூரோப்பிய தொடர்,2026 செப்டம்பரில் நடக்கவிருக்கிறது.
இவ்விரு தொடர்களுக்கிடையே ஐந்து மாதங்கள் இடைவெளி இருக்கிறது.அதிலும் அவர் பயிற்சி எடுத்தாக வேண்டும்.எனவே நேற்றைய அறிவிப்பின்படி அவர் 2026 செப்டம்பர் வரை அதாவது இன்னும் ஓராண்டுக்கு பந்த்யங்களில் மட்டுமே கவனம் செலுத்துவார் என்பதால் அவருடைய அடுத்த படம் என்பது அதற்குப் பிறகுதான் என்பது தெளிவாகிவிட்டது.









