செய்திக் குறிப்புகள்

ட்யூட் படத்தின் கதை இதுதான் – இயக்குநர் கீர்த்தீஸ்வரன் பேட்டி

அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ட்யூட்’. நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள
இந்தப் படம் இந்த மாதம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளியாகிறது. 

இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்குநர் சுதா கொங்கராவிடம் ஆறேழு வருடங்கள் உதவி இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். 27 வயதில் தன்னுடைய முதல் படம் இயக்கி இருப்பவர்.

அவரிடம் ட்யூட் பட அனுபவங்கள் குறித்து ஒரு பேட்டி.

1.ட்யூட் படம் உருவானது பற்றி..?

என்னுடைய ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மி மூலமாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸிடம் ‘ட்யூட்’ படத்தின் கதை சொன்னேன். அவர்களுக்கும் கதை பிடித்துப் போனதால் உடனே பட வேலைகள் தொடங்கினோம்.

2.படத்தின் கதை பற்றிச் சொல்லலாமா?

‘ட்யூட்’ படத்தின் கதை எழுதத் தொடங்கியபோதே ரஜினி சாருக்கு 30 வயதிருந்தால் எப்படி இந்தக் கதையில் நடித்திருப்பார் என மனதில் வைத்துத்தான் எழுதினேன். அதில் பிரதீப் ரங்கநாதன் பொருந்திப் போயிருக்கிறார். பிரதீப்புக்கும் கதை பிடித்ததால் ஒத்துக் கொண்டார். படத்தில் பிரதீப்- மமிதா இருவரும் ஒரு ஈவண்ட் மேனேஜ்மெண்ட் கம்பெனி வைத்து நடத்துவார்கள். முழுக்க முழுக்க சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறோம். 

3.முழுமையான காதல் கதையா?

லவ் சப்ஜெக்ட் மட்டுமல்லாது கதையில் ஒரு மாஸ் இருக்கும். அது படம் பார்க்கும்போது உங்களுக்குப் புரியும்.காஸ்ட்யூம், லொகேஷன், விஷுவல் என எல்லாவற்றிலும் பார்த்துப் பார்த்து உழைத்திருக்கிறோம்.

4.உங்கள் முதல்படமே தீபாவளிக்கு வெளியாவது எப்படி இருக்கிறது?

இயக்குநராக என்னுடைய முதல் படமே தீபாவளிக்கு வெளியாவது என் கனவு நனவாகியது போல உள்ளது.
 
5.கதாநாயகியாக மமிதா பைஜூவை தேர்வு செய்தது எப்படி?

இந்தப் படத்திற்கு மமிதாவை நான் சொன்னபோது அவரின் ‘பிரேமலு’ படம் கூட வெளியாகியிருக்கவில்லை. ‘சூப்பர் சரண்யா’ படம் பார்த்துத்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம். மமிதா கதைக்குள்ளே வந்தவுடன் ‘ரஜினி- ஸ்ரீதேவி’ இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி படம் வந்திருக்கிறது எனத் தோன்றுகிறது.

6.தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து..?

என்னுடைய டெக்னிக்கல் டீம் படத்திற்கு மிகப்பெரிய பலம். புதிதாக இசையில் முயற்சி செய்து பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர் சாய் அபயங்கர். அவரது இசையும் நன்றாக வந்திருக்கிறது. இயக்குநர், கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் என அனைவரும் இளம் தலைமுறையினர் என்பதால் இது ஜென் ஸீ படமா எனப் பலர் கேட்கின்றனர். இந்தக் காலத்து இளைஞர்களும் குடும்பப் பார்வையாளர்களும் பார்த்து கொண்டாடும் வகையில் எண்டர்டெயின்மெண்ட்டாக படம் இருக்கும். பிரத்தீப், மமிதாவுடன் நடிகர்கள் சரத்குமார், ரோகிணி, பரிதாபங்கள் புகழ் டேவிட் ஆகியோரும் நடித்துள்ளனர். பிரதீப் படத்தில் வழக்கமாக நீங்கள் எதிர்பார்க்கும் எல்லா விசயங்களும் இந்தப் படத்தில் இருக்கும். படம் பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.

– அப்துல்

Related Posts