செய்திக் குறிப்புகள்

8 நாட்களில் 75 கோடி வசூல் – வாத்தி பட இயக்குநர் தகவல்

ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் பிப்ரவரி 17ஆம் தேதி இந்தப்படம் வெளியானது.

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள இந்தப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, பாரதிராஜா சாய்குமார், தணிகலபரணி, ஆடுகளம் நரேன் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலுமே இந்தப்படம் வெற்றி பெற்று பல இடங்களில் தற்போதும் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தநிலையில் இந்தப்படத்தின் வெற்றிக்குப் பக்கபலமாக இருந்த பத்திரிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக இயக்குநர் உள்ளிட்ட வாத்தி படக்குழுவினர் சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி, உதவி திரைக்கதை ஆசிரியர் சதீஷ், ஒளிப்பதிவாளர் யுவராஜ், படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நகைச்சுவை நடிகர் சாரா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்

நடிகர் சாரா பேசும்போது,

இயக்குநர வெங்கி அட்லூரியுடன் இணைந்து நிறைய படங்கள் பண்ண வேண்டும். அதனால் என்னை கழட்டி விட்டுடாதீங்க என இயக்குநரைக் கேட்டுக்கொள்கிறேன். வீட்டில் என் பையனை நான் படிக்கச் சொன்னால் படிக்க மாட்டான். ஆனால் வாத்தி படத்தில் தனுஷ் மாணவர்களை படிக்கச் சொல்லி உற்சாகப்படுத்துவதை பார்த்துவிட்டு தனுஷ் அங்கிள் சொல்வதால் படிக்கிறேன் என்று கூறுகிறான். அந்த அளவிற்கு வாத்தி படம் அனைவரையும் சென்று சேர்ந்துள்ளது என்று கூறினார்.

ஒளிப்பதிவாளர் யுவராஜ் பேசும்போது,

வாத்தி படம் வெளியானதில் இருந்து எந்த ஊருக்குச் சென்றாலும் திருவிழா மாதிரி இருக்கிறது. இப்போதும் பல தியேட்டர்களில் அரங்கம் நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் என்னுடைய குருநாதர் ஒளிப்பதிவாளர் ரத்னவேலுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.

இயக்குநர் வெங்கி அட்லூரி பேசும்போது,

இந்தப்படத்தின் கதையை நம்பி படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் வம்சி மற்றும் எனக்கு மிகப்பெரிய ஆதரவு தந்த தனுஷ் ஆகிய இருவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். இப்போது வரை 8 நாட்களில் 75 கோடி நிகர தொகையாக இந்தப்படம் வசூலித்துள்ளது. பத்திரிகை விமர்சனங்கள் மற்றும் படம் பார்த்தவர்களின் வாய்மொழி பாராட்டுக்கள் என இந்தப்படத்திற்கு பாசிட்டிவான விளம்பரம் கிடைத்துள்ளது.

படத்தின் தயாரிப்பாளர் வம்சி இந்தப்படத்தின் வசூலை எண்ணிக்கொண்டிருப்பதால் இன்று இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.இந்தப்படத்தைத் தமிழில் மிகப்பெரிய அளவில் விளம்பரம் செய்து வெளியிட்ட லலித்குமார் சாரை இன்னும் பார்க்கவே முடியவில்லை. வாத்தி என்னுடைய கனவு திரைப்படம். இந்தப்படத்தில் தனுஷுடன் பணியாற்றும்போது அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டு இன்னும் நல்ல டெக்னிசியனாக மாறியுள்ளேன்

இவ்வாறு அவர் பேசினார்.

Related Posts