ஃபைனல் ஸ்கோர் அடித்த தி கோட் – படக்குழு மகிழ்ச்சி
விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கும் படம் தி கோட் என்று சுருக்கமாகச் சொல்லப்படும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்.
வெங்கட்பிரபு இயக்கியிருக்கும் இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபு தேவா, சினேகா, மீனாட்சி செளத்ரி, மோகன்,ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்துக்கு சித்தார்த் நுனி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இப்படம் தம்ழ்நாட்டில் மட்டும் சுமார் எண்ணூறு முதல் தொள்ளாயிரம் திரையரங்குகளில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில்,பரபரப்பாக நடந்து கொண்டிருந்த இப்படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடைந்து இப்போதுதான் படம் முழுமையாகத் தயாராகியுள்ளது.
முழுமையாகத் தயாரான பின்பு தன் குழுவினருடன் படம் பார்த்திருக்கிறார் விஜய்.படம் முடிந்து உற்சாகப் புறப்பட்டுச் சென்றாராம்.அவருடைய உற்சாகம் படக்குழுவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
அதன்பின் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் குடும்பத்தினர் படம் பார்த்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் படம் பிடித்திருக்கிறது என்றும் நிச்சயம் வெற்றி பெறும் என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்களாம்.
மூன்று மணி நேரம் படம் இருப்பதும் தொழில்நுட்ப ரீதியாக விஜய் வயதைக் குறைத்திருப்பது சரியாக அமையாதது ஆகியனவற்றை மட்டும் சிறிய குறையாகச் சிலர் சொல்கின்றனர்.
ஆனால், படத்தின் இடம்பெறும் சண்டைக்காட்சிகள் சிறப்பாக அமைந்திருக்கின்றனவாம்.
குறிப்பாக படத்தின் இறுதியில் இடம்பெறும் சண்டைக் காட்சி படம் பார்த்த அனைவரையும் கவர்ந்திருக்கிறது என்கிறார்கள்.அது நிச்சயம் பெரிதாகப் பேசப்படும் என்பதோடு விஜய் இரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பட இரசிகர்கள் அனைவரையும் கவரும் என்று சொல்கிறார்கள்.
அந்த சண்டைக் காட்சி ஓர் ஆங்கிலப் படத்தில் இடம்பெற்ற ஒரு சண்டைக்காட்சியைப் பார்த்து அதன் உத்வேகத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
எங்கிருந்து எடுத்தால் என்ன? இங்கு அதைச் சிறப்பாகக் கொடுத்துவிட்டால் இரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிவிடுவார்கள்.அந்த வகையில் இப்படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.
அண்மைக்காலமாக தமிழ்நாடு திரையரங்குகளில் பல படங்கள் நல்ல வசூலைக் கொடுத்து திரையரங்கினரை மகிழ்ச்சிப்படுத்தி வருகின்றன.அந்த வரிசையில் இந்தப் படமும் சேரும் என்கிறார்கள்.
நல்லது.