சமுதாய சேவைக்காக சம்பளம் வாங்காமல் நடிக்கும் சூர்யா
சித்தார்த் பிரியா ஆனந்த் நித்யாமேனன் உள்ளிட்டோர் நடித்த 180 உட்பட சில படங்களை இயக்கியவர் ஜெயேந்திரா.
தமிழ்த்திரையுலகில் முக்கியப் புள்ளியாக விளங்கும் இவர் இப்போது சில குறும்படங்களைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
ஒரு இணைய நிறுவனத்தில் ஒளிபரப்பாகும் வண்ணம் ஒன்பது குறும்படங்களை அவர் தயாரிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
நவரசம் என்கிற பெயரில் தயாராகவிருக்கும் அக்குறும்படங்களைப் பிரபல இயக்குநர்கள் இயக்கவிருக்கிறார்களாம்.
கெளதம்மேனன் மற்றும் கே.வி.ஆனந்த் ஆகியோர் அந்த ஒன்பது இயக்குநர்களில் அடக்கம் என்று சொல்கிறார்கள்.
இந்த ஒன்பதில் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நாயகனாக நடிக்கவிருக்கிறார் என்பதுதான் முக்கிய செய்தி.
வரிசையாகப் படங்கள் வைத்திருக்கும் சூர்யா இப்படி ஒரு குறும்படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது எதனால்?
அதற்குக் காரணம் இருக்கிறதாம். இக்குறும்படங்களை பெரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்ள இணைய நிறுவனம் முன்வந்திருக்கிறதல்லவா? அந்தத் தொகை மொத்தமும் சமுதாய சேவைக்காகச் செலவிடவிருக்கிறார்களாம்.
சமுதாய சேவைக்கானது என்பதால் சூர்யா மனமுவந்து நடிக்க ஒப்புக்கொண்டார் என்று சொல்கிறார்கள்.
இக்குறும்படங்களில் பணியாற்றும் சூர்யா உள்ளிட்ட எல்லோருமே சம்பளம் வாங்காமல் பணியாற்ற ஒப்புக்கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.











