September 7, 2024
சினிமா செய்திகள்

தொடக்க நாளிலேயே நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு – சரத்குமார் இப்படிச் செய்யலாமா?

2015 ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘சகாப்தம்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக தமிழ்த் திரையுலகில் களமிறங்கினார் மறைந்த நடிகர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன்.அவர், தற்போது ‘படைத்தலைவன்’ படத்தில் நடித்து வருகிறார்.‘படைத் தலைவன்’ திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்கிறார்கள்.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் மற்றும் சீமராஜா உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் பெற்ற இயக்குநர் பொன்ராம் அவற்றிற்கடுத்து இயக்கிய படங்கள் சசிகுமார் நடித்த எம்ஜிஆர்மகன் மற்றும் விஜயசேதுபதி நடித்த டிஎஸ்பி ஆகிய படங்கள்.அவை தொல்வி அடைந்ததால் பின்னடைவில் இருக்கும் அவர் அடுத்ததாக ஒரு புதிய படத்தை இயக்குகிறார்.

அப்படத்தில் சண்முக பாண்டியன் நாயகனாக நடிக்கிறார்.இந்தப் படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
நடிகர் விஜயகாந்துடன், ‘புலன் விசாரணை’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘சந்தன காற்று’ படங்களில் சரத்குமார் நடித்திருந்தது கவனிக்கத்தக்கது.

காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தை ஸ்டார் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

ஆகஸ்ட் 25 ஆம் தேதி மறைந்த நடிகரும், தேமுதிக கட்சியின் முன்னாள் தலைவருமான விஜயகாந்தின் 71 ஆவது பிறந்தநாள் அவரது இல்லத்தில் கடைபிடிக்கப்பட்டது. அந்நாளில் தேமுதிக தலைவரும் விஜயகாந்தின் மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த், தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்துக்கான பூஜையை நடத்தினார்.

விஜயகாந்தின் ஆசிகளோடு இப்படத்தைத் தொடங்கப்போவதாக பொன்ராம் அறிவித்தார்.

அப்படத்தின் படப்பிடிப்பு நேற்று தேனியில் தொடங்கியது.

தொடங்கியதுமே அப்படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

என்ன சிக்கல்?

ஜூலை மாதம் 26 ஆம் தேதி சென்னையில்,தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம், திரையரங்கு மல்டிபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம், திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்ட கூட்டுக்கூட்டம் நடந்தது.

அப்போது சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அவற்றில்…

இன்றைய தேதியில் தயாரிக்கப்பட்ட பல படங்கள், சரியான திரையரங்குகள் கிடைக்காமல் தேங்கி நிற்கின்றன. அந்த நிலையை மாற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் சார்பில் புதிய விதிமுறைகள் உருவாக்கப்படுகின்றன. அந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு படப்பிடிப்புகளைத் தொடங்கலாம் என்பதால், வரும் 16.8.2024 முதல் புதிய படங்கள் தொடங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் படங்களைப் பற்றிய விவரங்களை தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்குக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.அந்தப் படப்பிடிப்புகளை வரும் அக்டோபர் 30 ஆம் தேதிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும்.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் சம்பளம் மற்றும் இதர செலவுகள் கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளதால், தமிழ்த் திரைத்துறையை மறுசீரமைப்பு செய்ய வேண்டியிருக்கிறது. எனவே, வரும் 1.11.2024 முதல் தமிழ்த் திரையுலகின் அனைத்து படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட வேலைகளும் நிறுத்தப்படும். திரைத்துறை சம்பந்தமாக ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் அடங்கிய கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இவற்றின்படி ஆகஸ்ட் 16 முதல் புதிய படங்கள் தொடங்கப்படக்கூடாது.ஆனால் இவர்கள் ஆகஸ்ட் 25 ஆம் தேதி படத்தைத் தொடங்கினார்கள்.

அதேபோல் ஏற்கெனவே நடக்கிற படங்களீன் படப்பிடிப்பைத் தவிர வேறு படங்களின் படப்பிடிப்பு நடத்தக்கூடாது ஏற்கெனவே நடக்கும் படங்களும் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் படப்பிடிப்பை முடித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

திரையுலகத்தினர் கூட்டாக எடுத்திருக்கும் இந்த முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் புதியபடத்தின் படப்பிடிப்பை தொடங்கினார்கள். இந்த விவரம் அறிந்ததும் திரைப்படக் கூட்டியக்கத்தின் சார்பில் அப்படப்பிடிப்புத் தளத்துக்குச் சென்று படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்களாம்.

நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர் விஜயகாந்த், அதன் செயலாளராகத் திறம்படச் செயலாற்றியவர் சரத்குமார்.அவர் திரையுலகம் கூட்டாக எடுத்திருக்கும் ஒரு முடிவை மதிக்காமல் படப்பிடிப்புக்குச் செல்லலாமா? என்கிற விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இதற்கிடையே, திரையுலகக் கூட்டமைப்பிடம் சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பைத் தொடரும் முயற்சிகளில் தயாரிப்புத் தரப்பினர் இறங்கியிருக்கிறார்கள்.

Related Posts