சினிமா செய்திகள்

இந்தப்படம் வேண்டாம் விட்டுவிடுங்கள் – விஜய்சேதுபதிக்கு இயக்குநர் சேரன் வேண்டுகோள்

முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றுக் கதையைத் திரைப்படமாக்கப் போவதாக மூவி ட்ரைன் மோஷன் பிக்சர்ஸ் மற்றும் டார் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனங்கள் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. 800 விக்கெட்டுகள் வீழ்த்தியவர் முத்தையா முரளிதரன் கதைக்கு ‘800’ என பெயர் வைத்துள்ளனர்.

இந்தப் படத்தை எம்.எஸ்.ஸ்ரீபதி இயக்கவுள்ளார். இதன் முதல்பார்வை மற்றும் சலனப்படம் ஆகியவை நேற்று (அக்டோபர் 13) நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் – சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் வெளியிடப்பட்டது.

‘800’ படத்தின் படப்பிடிப்பு 2021-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்தியா, இலங்கை, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதனிடையே இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று உலகெங்கிலுமிருந்து விஜய்சேதுபதிக்குக் கோரிக்கைகள் வந்து கொண்டிருக்கின்றன.

அதற்குக் காரணம், தமிழினப்படுகொலை செய்த இராஜபக்சே குடும்பத்தினரோடு முத்தையா முரளிதரன் நெருக்கமாக இருப்பதும் அவர்களுக்காகத் தேர்தல் பரப்புரை செய்ததும்தான்.எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியதுபோல் இந்தப்படத்தில் நடிப்பதற்காக விஜய்சேதுபதியை, இராஜபக்சே மகன் புகழ்ந்து பேசினார்.

இதனால் தமிழகம் மட்டுமின்றி உலககெங்கும் உள்ள தமிழர்கள் இந்தப்படத்தில் நடிக்க வேண்டாம் என்று விஜய்சேதுபதிக்குக் கோரிக்கை வைத்துவருகின்றனர்.

இது தொடர்பாக இயக்குநர் சேரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்….

விஜயசேதுபதி அவர்களே, உலகம் முழுவதுமிருந்து தமிழர்களின் வேண்டுகோள் 800 வேண்டாம் என.. உங்களை வாழவைத்த மக்களைவிட, உணர்வை விட, தமிழ் ஈழ மக்களின் உயிர்போன கொடும் நிகழ்வை விட இந்தப்படம் பெரிதல்ல சகோதரா.. விட்டுவிடுங்கள். உங்களின் நடிப்புத்தீனிக்கு ஆயிரம் கதாபாத்திரங்கள் காத்திருக்கிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Posts