September 21, 2026
சினிமா செய்திகள்

திரைக்கு வந்து 30 நாளில் ஹாட்ஸ்டாருக்கு வந்த கைதி! காரணம் என்ன?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த மாதம் அக்டோபர் 25ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலா வெளியான திரைப்படம் கைதி.

விஜய் நடிப்பில் பிகில் மற்றும் கார்த்தி நடிப்பில் கைதி என இரண்டு படங்கள் வெளியானது. விஜய் படத்துடன் வெளியான காரணத்தால் கைதி படத்துக்கு முதல் வாரம் 250 திரையரங்குகள் மட்டுமே கிடைத்தது. பட ரிலீஸூக்குப் பிறகு கிடைத்த வரவேற்பினால் திரையரங்குகள் அதிகரித்தது. நல்ல வசூலையும் பெற்றுக் கொடுத்தது.

கைதி வெளியாகி சரியான 30 நாட்களில், அதாவது இன்று டிஜிட்டல் தளங்களில் ஒன்றான ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்த வெளியீடு ரசிகர்களுக்கு நல்ல செய்தி என்றாலும், திரையரங்க உரிமையாளர்கள் அதிருத்தி அடைந்திருக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல், பிவிஆர் திரையரங்குகளில் கைதி படத்துக்கான காட்சியை திரையிடுவதை நிறுத்தியுள்ளது. தவிர, பிவிஆர். குழுமத்தைச் சேர்ந்த எஸ்.பி.ஐ. சினிமாக்களிலும் கைதி இன்று திரையிடப்படவில்லை.

இதுகுறித்து பலரும் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் கேள்வி எழுப்ப, அவர் டிவிட்டரில் பதிலும் அளித்துள்ளார். அதில், “ திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படத்தை 30 நாட்களில் ஆன்லைனில் வெளியிடுவது குறித்து பலரும் கவலையடைகின்றனர். ஒரு கட்டத்தில் மக்கள் திரையரங்குக்கு வருவது குறையுமா? என்றால் நிச்சயம் ஆம் என்பேன். ஆனால், திருட்டு மற்றும் மூன்று வாரத்திலேயே வசூல் குறைவு போன்றவற்றை இதன் மூலம் தயாரிப்பாளர் சமன் செய்ய முடியும்” என்று கூறியுள்ளார்.

குறிப்பாக, நேற்றைய தினம் ரோகினியில் கைதி திரையிரப்பட்ட மூன்றில் இரண்டு காட்சிகள் அரங்கம் நிறைந்தே இருந்திருக்கிறது. இப்படியான சமயத்தில் கைதி ஹாட் ஸ்டாரில் வந்துவிட்டது என்கிறார்கள் டிரேடிங் வட்டாரத்தினர். ஒவ்வொரு படமும் குறைந்தது 50 நாட்களாவது திரையரங்குகளில் ஓடிய பிறகே டிஜிட்டல் தளத்தில் வெளியிட்டால் நன்றாக இருக்கும் என்பதே திரையரங்க உரிமையாளர்களின் கோரிக்கையாக இருக்கிறது.

எது எப்படியோ… திரையரங்குகளில் தவறவிட்ட ரசிகர்கள், ஹாட் ஸ்டாரில் பார்த்து மகிழுங்கள்!

Related Posts