அவர் குரலின் நிழல் பதிப்பாக வாழ்ந்தேன் – எஸ்.பி.பிக்கு கமல் இரங்கல்
இன்று (செப்டம்பர் 25) மதியம் 1:04 மணிக்கு பாடகர் எஸ்பிபி காலமானார். அவருடைய மறைவுக்குத் திரையுலகப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
எஸ்பிபி மறைவு குறித்து,அன்னைய்யா எஸ்.பி.பி அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.
ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.
என்கிற முகமனுடன் கமல் வெளியிட்டுள்ள இரங்கல் காணொலியில் பேசியிருப்பதாவது……..
வெகுசில பெருங்கலைஞர்களுக்கே தாம் வாழும் காலத்திலேயே, திறமைக்குத் தகுந்த புகழ் கிடைக்கும். அப்புகழ் கிடைக்கப் பெற்றவர் என் உடன்பிறவா அண்ணன் எஸ்பிபி.
நாடு தழுவிய புகழ் மழையில் நனைந்தபடியே அவரை வழியனுப்பி வைத்த அத்தனை இரசிகர்களுக்கும் அவர்களில் ஒருவனாக என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
அவர் நனைந்த மழையில் கொஞ்சம் நானும் நனைய அனுமதித்த அண்ணனுக்கு நன்றி. அவர் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.
பல மொழிகளில் நாலு தலைமுறை திரை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர். ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும்.
இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.











