சினிமா செய்திகள்

புகழ்ந்த பாலா நெகிழ்ந்த சசிகுமார்

சசிகுமார்,சிம்ரன் உட்பட பலர் நடிப்பில் புது இயக்குநர் அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில் வெளியான படம் டூரிஸ்ட் ஃபேமிலி.மே 1 ஆம் தேதி வெளியான இந்தப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சசிகுமார்,என்னுடைய குட்டிப்புலி, சுந்தரபாண்டியன் ஆகிய படங்களுக்குப் பிறகு வசூல் ரீதியாகப் பெரிய வெற்றியைப் பெற்ற படம் இது என்று வெளிப்படையாகவே சொல்லியிருந்தார்.இந்தக் கதை ஈழத்தமிழர்களுக்கு தமிழ்நாட்டுத் தமிழர்கள் எவ்வளவு நெருக்கமாக இருக்கிறார்கள் என்பதை உலகத்துக்குப் பறைசாற்றுகிற கதை என்பதால் சசிகுமாருக்கு உலகம் முழுவதிலுமிருந்து அழைப்புகள் வந்துகொண்டேயிருக்கின்றனவாம்.

பல்வேறு திரைப்பிரபலங்களும் இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு படக்குழுவினரை அழைத்துப் பாராட்டுத் தெரிவித்து வருகிறார்கள்.நடிகர் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன்,அனிருத் உட்பட தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த பலர் மட்டுமின்றி தெலுங்கின் பிரபல இயக்குநர் ராஜமெள்லியும் இந்த்ப் படத்தைப் பாராட்டியிருந்தார்.

இந்நிலையில்,இயக்குநர் பாலா இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு மிகவும் நெகிழ்ந்துபோய் சசிகுமாரை அழைத்துப் பாராட்டிப் பேசியிருக்கிறார்.

திருவண்ணாமலையில் தன்னுடைய அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார் பாலா.இதுபோன்று கதை விவாதம் நடக்கும் நேரங்களில் திரைப்படங்கள் பார்க்கமாட்டார் என்கிறார்கள்.ஆனால், சசிகுமார் படம் நன்றாக ஓடுகிறது,பெரிய வசூலைப் பெற்று வருகிறது என்று தெரிந்ததும்,திரையரங்குக்குச் சென்று படம் பார்த்திருக்கிறார்.

ஈழத்தமிழர்கள் மேல் அக்கறையும் அன்பும் கொண்டிருக்கும் அவருக்கு இந்தப்படம் மிகவும் பிடித்துவிட்டதாம்.

படம் முடிந்தவுடன் சசிகுமாரை அழைத்துப் பாராட்டியிருக்கிறார்.படத்தில் வரும் காட்சிகள்,அதிலும் குறிப்பாக சசிகுமார் நடிப்பு பற்றிய நுட்பமான பார்வையுடன் பாராட்டுச் சொன்னது சசிகுமாருக்குப் பெருமிதமாக இருந்திருக்கிறது. அவருடைய பேச்சு மிக நெகிழ்வுடன் இருந்ததெனச் சொல்லி மகிழ்ந்திருக்கிறார் சசிகுமார்.

அதோடு,அடுத்தடுத்த படங்கள் வெளியிடுவதில் கவனமாக இருக்கவேண்டும் எனவும் ஆலோசனை சொல்லியிருக்கிறார்.

இந்தப்படத்தைப் பார்த்துவிட்டு ஏராளமானோர் பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவித்தாலும் தன்னுடைய் குருநாதர் பாலாவின் பாராட்டு சசிகுமாருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது என்று அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

அதுமட்டுமின்றி அடுத்தடுத்த படங்கள் குறித்து பாலா சொன்ன ஆலோசனைகளை அப்படியே ஏற்றுக் கொண்டு அதைச் செயல்படுத்தும் வேலைகளில் இறங்கிவிட்டார் என்றும் சொல்கிறார்கள்.

அதனால்,இனி சசிகுமாரின் திரைப் பயணத்தில் ஏறுமுகம் தான் என்று நம்பிக்கையாகச் சொல்கிறார்கள்.

Related Posts