February 12, 2025
சினிமா செய்திகள்

சிம்பு சொன்ன அடுத்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் விவரம்

மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது கமல் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் நடித்து முடித்திருக்கிறார் சிம்பு.மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றன.அசோக் செல்வன்,த்ரிஷா,அபிராமி,ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பதாக அறிவிப்பு வெளியானது.ஆனால்,அப்படத்தின் படப்பிடிப்பு குறித்த எந்தத் தகவலும் இதுவரை இல்லை.

இதுமட்டுமின்றி இன்னொரு படத்திலும் சிம்பு நடிப்பதாகச் சொல்லப்படுகிறது.2023 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற படம் 2018.அந்தப்படத்தை இயக்கிய ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில், தனது அடுத்த படத்திற்கான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் சிம்பு.இது தொடர்பாக அக்டோபர் 18 அன்று தனது சமூகவலைதளத்தில்,

தம் + மன்மதன் + வல்லவன் + விண்ணைத்தாண்டி வருவாயா இணைந்த ஜென் இசட் (gen z 1995 2010க்குள் பிறந்தவர்கள்) கதைதான் நம்ம அடுத்த திரைப்படம் எனத் தெரிவித்திருக்கிறார்.

அப்படத்தின் இயக்குநர் யார்? தயாரிப்பாளர் யார்? என்பது குறித்த அறிவிப்பு அதையும் அவர் தெரிவிக்கவில்லை.

திரையுலகத்தில் இதுகுறித்து விசாரித்தால்?

அசோக்செல்வன் நடிப்பில் உருவாகி வெற்றி பெற்ற ஓ மை கடவுளே திரைப்படத்தை இயக்கிய அஷ்வத் மாரிமுத்து,இப்போது பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் டிராகன் எனும் படத்தை இயக்கிவருகிறார்.அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து தான் சிம்புவின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் அப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனமே தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன் ஏஜிஎஸ் நிறுவனத்தில் ஒருபடம் நடிக்கவிருக்கிறார் சிம்பு என்கிற தகவல்கள் வந்தன.ஆனால் அப்படி ஒன்ரு நடக்கவேயில்லை.இப்போது அது நடந்திருக்கிறது என்றும் அப்போது கொடுத்த முன் தொகைக்காகவே இப்போது படம் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.

சிம்பு நடிப்பில் அடுத்து இந்தப் படத்தின் படப்பிடிப்பு தான் தொடங்கவிருக்கிறது என்றும் அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்புதான் அடுத்தடுத்த படங்களில் நடிப்பார் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts