சினிமா செய்திகள்

அடுத்த படத்தில் கமல் – அமெரிக்கா சென்று சாதித்த அட்லீ

ஷாருக்கான்,விஜய்சேதுபதி,நயன்தாரா உட்பட பலர் நடித்த ஜவான் படம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.அப்படத்தை எழுதி இயக்கியிருந்தார் அட்லீ.

அப்படம் வெளியாகி ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டாலும் அட்லீ இயக்கும் அடுத்தபடம் குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அதேசமயம் அட்லீ இயக்கும் அடுத்தபடத்திலும் இந்தி முன்னணி நடிகர்களில் ஒருவரான சல்மான்கான் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் என்கிற தகவல்கள் வந்துகொண்டிருந்தன.

அதோடு அப்படத்தில் சல்மான்கானோடு கமல்ஹாசனும் நடிக்கவிருக்கிறார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது அந்தத் தகவல் உறுதியாகியிருக்கிறது.

கமல்ஹாசன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார்.இயக்குநர் அட்லீயும் அமெரிக்கா சென்றிருக்கிறார்.

இந்நிலையில் அட்லீ இயக்கும் அடுத்த படத்தில் சல்மான்கான் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து நடிப்பது உறுதியாகியிருக்கிறது என்கிற தகவல் வருகிறது.

இதனால், ஏற்கெனவே இதுசம்பந்தமாக நடந்த சந்திப்புகளில் சல்மான்கானுடன் இணைந்து நடிப்பதற்கு சம்மதம் சொல்லாதிருந்தார் கமல்.அவரை அமெரிக்கா சென்று பேசி சம்மதிக்க வைத்திருக்கிறார் அட்லீ என்று சொல்லப்படுகிறது.

கமல் அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் பிரபாஸ் உடன் அவர் நடிக்கும் கல்கி இரண்டாம் பாகம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று சொல்லப்படுகிறது.

அதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சண்டைப்பயிற்சி இயக்குநர்கள் அன்பறிவ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிறார்கள்.

அப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த பின்பு அட்லீ இயக்கும் படத்தில் கமல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சல்மான்கான்.அப்படம் அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதன்பின்,அட்லீ இயக்கும் படத்தில் சல்மான்கான் கலந்து கொள்வார் என்றும் அதற்குள் அன்பறிவ் படத்தை முடித்துவிட்டோ அல்லது அதற்கு இடையிலேயோ அட்லீ இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் கமல் என்று சொல்லப்படுகிறது.

படப்பிடிப்புத்தேதிகளில் மாற்றம் இருந்தாலும் அடுத்து அட்லீ இயக்கும் படத்தில் கமல்ஹாச்ன் மற்றும் சல்மான்கான் ஆகியோர் இணைந்து நடிப்பது மட்டும் இப்போது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.

இப்படத்தைத் தயாரிக்கவிருப்பது ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களாக இருக்கும் என்றும், எவர் தயாரிப்பாளராக இருந்தாலும் அட்லீயின் தயாரிப்பு நிறுவனமே முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துக் கொடுக்கும் என்றும் சொல்கிறார்கள்.

Related Posts