சிம்பு செய்த போன் ஞானவேல்ராஜா நெகிழ்ச்சி
கன்னடத்தில் பெரிய வெற்றி பெற்ற படம் ‘முஃப்தி’.அந்தப்படத்தைத் தமிழில் மொழிமாற்றம் செய்து எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.தமிழில் சிம்பு, கவுதம் கார்த்திக் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். இதில் சிம்பு நிழலுலக தாதாவாகவும் கவுதம்கார்த்திக் காவல்துறை அதிகாரியாகவும் நடிக்கிறார்கள்.
கன்னடத்தில் படத்தை இயக்கிய நார்தனே தமிழிலும் இயக்கி வந்தார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு ஜூன் 15 இல் தொடங்கியது.
அதன்பின், இயக்குநர் நார்தன் விலகிக் கொள்ள சில்லுனு ஒரு காதல் உட்பட சில படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில் அப்படம் தொடரும் எனவும் அப்படத்துக்கு பத்துதல என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடைகளைத் தாண்டி ஜூன் 6 ஆம் தேதி தொடங்குவதாக இருந்தது. படப்பிடிப்பு தொடங்கி மொத்தமாகப் படத்தை முடித்துவிடத் திட்டமிட்டிருந்தார்கள்.
இதற்காக, முடி அதிகமாக வளர்ப்பது தாடி வளர்ப்பது உடல் எடையைக் கூட்டுவது போன்று எல்லா விசயங்களையும் செய்து படப்பிடிப்புக்குத் தயாராகிவந்தார் சிம்பு.
இந்நிலையில், யாரும் எதிர்பாராதவிதமாக சிம்புவின் தந்தை டி.இராஜேந்தருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருடைய சிகிச்சைக்காக வெளிநாடு செல்லவிருக்கிறோம் என்று சிம்பு அறிக்கை விட்டிருந்தார்.
இதற்காக சிம்பு முன்கூட்டியே அமெரிக்கா சென்றிருக்கிறார்.
இதனால், பத்துதல படத்தின் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால்,அதுகுறித்த எந்த வருத்தமும் ஸ்டுடியோகிரின் நிறுவனத்திடம் இல்லை என்கிறார்கள்.
அதற்குக் காரணம், அமெரிக்கா செல்லுமுன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவை தொலைபேசியில் தொடர்புகொண்ட சிம்பு, ஜூன் 6 இல் படப்பிடிப்பு தொடங்கி முழுமையாக முடித்துக் கொடுத்துவிடலாம் என்று நான் தயாராகிவந்தேன், ஆனால் எதிர்பாராதவிதமாக அப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போய்விட்டது. இப்போது நான் கூட இருந்து அவரைப் பார்த்துக் கொள்ளவேண்டும். எனவே, அப்பா சிகிச்சைக்காக வெளிநாடு போகிறோம். போய்வந்ததும் பத்துதல படத்தை முடித்துக் கொடுத்துவிட்டுத்தான் அடுத்தவேலை என்று உருக்கமாகப் பேசியிருக்கிறார்.
இதனால் ஞானவேல்ராஜா உள்ளிட்ட படக்குழு நெகிழ்ந்துபோயிருக்கிறது.
சிம்பு எதுவும் சொல்லாமலே கிளம்பிப் போயிருக்கலாம்.அதற்கு மாறாக, ஒரு தயாரிப்பாளரின் வலியை உணர்ந்து அவருக்குத் தெம்பூட்டும்விதமாகப் பேசியிருக்கிறார்.இந்த விசயமறிந்த பலரும் அவரைப் பாராட்டிப் பேசிவருகிறார்கள்.