திரைப்படத் தொழிலாளர்கள் ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை ஏன்?
தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களுக்கு, ஊதிய உயர்வு சம்பந்தமாகக் கடந்த சில ஆண்டுகளாகப் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியாக இருந்தனர்.
இந்நிலையில், திரைப்படத்தொழிலாளர்களீன் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், நடப்பு தயாரிப்பாளர்கள் மற்றும் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
வழக்கமாக இருதரப்பும் ஒப்பந்தம் போடுவார்கள். அதை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கவேண்டும்.
இப்போது நடைபெற்ற பேச்சுவார்த்தையின்போது, திரைப்படத் தொழிலாளர்களுக்கு இப்போது வாங்கும் சம்பளத்தைவிட முப்பது முதல் நாற்பது விழுக்காடு வரை ஊதிய உயர்வு தர தயாரிப்பாளர்கள் தரப்பு ஒப்புக்கொண்டுள்ளதென்று சொல்லப்பட்டது.
இந்த ஒப்பந்தம் தமிழ்நாடு அரசின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக செய்தித்துறைஅமைச்சர் முன்னிலையில் பிப்ரவரி 28 அன்று கையெழுத்தாகும் என்றும்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்று திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார்.
ஆனால், திட்டமிட்டபடி நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
அதற்குக் காரணம் தயாரிப்பாளர்கள் தரப்பு சில ஊதிய உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதாம். தொழிலாளர்கள் சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் 24 அமைப்புகளில் இன்னும் மூன்று நான்கு அமைப்பிலுள்ள தொழிலாளர்கள் ஊதிய உயர்வு சம்பந்தமாக ஒத்த கருத்து ஏற்படவில்லையாம்.
எனவே, ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லையாம்.
அரசாங்கத்திடம் தொழிலாளர் தரப்பில் இதுகுறித்து முறையிட்டபோது, உங்களுக்குள்ளாகவே ஒன்றுக்குப் பலமுறை பேசி ஓர் உடன்பாட்டுக்கு வாருங்கள் என்று சொல்லப்பட்டுவிட்டதாம்.
அதனால் மீண்டும் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
எப்போது உடன்பாடு ஏற்படும் எனத் தெரியவில்லை.









