எனக்கு இரவுகள் பிடிக்கும் காரணம் இதுதான் – ஒளிப்பதிவாளர் அருள்வின்செண்ட் பேட்டி
விஷ்ணுவிஷால் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற படம் எஃப் ஐ ஆர்.
அந்தப்படத்தின் ஒளிப்பதிவு நல்ல வரவேற்பைப் பெற்றது.அதற்கு ஒளிப்பதிவு செய்தவர் அருள்வின்செண்ட்.
அவரிடம் ஒரு பேட்டி….
1. எஃப் ஐ ஆர் படத்துக்குக் கிடைத்த வரவேற்புகள் பற்றி…?
படம் வெளியானதிலிருந்து நிறைய அழைப்புகள் வந்துகொண்டேயிருந்தன. லைட்டிங், லென்ஸ் பற்றியெல்லாம் குறிப்பிட்டுப் பாராட்டிப் பேசினார்கள். எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அந்தப்படத்துக்காகக் கடுமையாக உழைத்தோம், அதற்கேற்ற வரவேற்பு கிடைத்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
2. பல காட்சிகளின் ஒளியமைப்பு குறிப்பாக இறுதிக்காட்சிகளில் கவனிக்கத்தக்க வகையில் இருந்தது. என்ன செய்தீர்கள்.?
படம் தொடங்கும்போதே மிகவும் பளிச்செனவும் இல்லாமல் இருள்தன்மையும் இல்லாமல் இரண்டுக்கும் இடைப்பட்ட வகையில் லைட்டிங் செய்யலாம் என்று இயக்குநரோடு பேசி வைத்துக் கொண்டோம். அந்த முடிவு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
3.எஃப் ஐ ஆர் படத்துக்குப் பிறகு..?
படம் வெளியானபின்பு நிறையப் படங்களில் பணியாற்ற அழைப்பு வந்தது. அதிலும் ஓர் இயக்குநர், என் படத்தின் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்கவிருக்கிறது. வேறொரு ஒளிப்பதிவாளரை ஒப்பந்தம் செய்திருந்தேன், எஃப் ஐ ஆர் பார்த்த பிறகு நீங்கள் தான் என் படத்துக்குப் பொருத்தமாக இருப்பீர்கள் என உணர்ந்தேன். எனவே நீங்கள் வாருங்கள் என்றார். ஆனால், நான் ஏற்கெனவே ஒரு தெலுங்குப் படம் ஒப்புக்கொண்டிருப்பதால் அதை ஏற்கமுடியவில்லை.

Arul Vincent
4. அந்தத் தெலுங்குப்படம் பற்றி…?
மகேஷ் எனும் இயக்குநர் இயக்கத்தில் மகேஷ்பாபுவின் மைத்துனர் சுதிர்பாபு கதாநாயகனாக நடிக்கிறார். மார்ச் முதல்வாரத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது ஒரு போலிஸ்கதை. என் ஒளிப்பதிவுக்கு நல்ல வாய்ப்புள்ள படம்.
5.கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தில் ஒரு படம் வேலை செய்யப்போகிறீர்களா?
ஆமாம், ஒரு மலையாளப் படத்தின் ரீமேக் அது. சில காரணங்களால் அது கொஞ்சம் தள்ளிப்போகிறது.
6.ஒவ்வொரு படத்துக்கும் அதிக இடைவெளி ஏற்படுவது ஏன்?
ஆமாம், கிருமி வெளியாகி ஆறாண்டுகளுக்குப் பிறகு இந்தப்படம் வெளியானது. அதற்குப் பல காரணங்கள்.அவவப்போது பைக்கை எடுத்துக்கொண்டு ஊர்சுற்றக் கிளம்பிவிடுவேன், வாரக்கணக்கில் சுற்றிக் கொண்டிருப்பேன். அப்புறம் மும்பை சென்று நிறைய விளம்பரப்படங்களில் பணியாற்றினேன். இவற்றால் தான் படங்களுக்கிடையே இடைவெளி ஏற்பட்டுவிட்டது.
7. நடிகராகவும் ஆகிவிட்டீர்களே..?
மிஷ்கின் நல்ல நண்பர் என்பதால் பிசாசு படத்தில் நடிக்கவைத்தார். அதன்பின்னும் நட்புக்காகவே அந்தகாரம் படத்தில் நடித்தேன். தொடர்ந்தும் நடிக்கக் கூப்பிடுகிறார்கள். ஆனால் ஒளிப்பதிவு வேலைகள் இருப்பதால் ஒப்புக்கொள்ள இயலவில்லை.
8.உங்களுடைய படங்களில் இரவுக்காட்சிகள் கூடுதலாக இடம்பெறுகின்றனவே..?
எனக்கு இரவில் படப்பிடிப்பு நடத்த மிகவும் பிடிக்கும். அதற்குக்காரணம், ஒளியமைப்பு முழுக்க நம் கட்டுப்பாட்டில் இருக்கும். நாம் நினைத்ததைத் திரையில் கொண்டுவந்துவிட முடியும். பகல் என்றால் இயற்கை ஒளியுடன் போராடவேண்டியிருக்கும்.
9. புத்தகங்கள் வாசிக்கும் பழக்கம் இருக்கிறதா..?
படிக்கும் காலத்தில் இல்லை. பி.சி. சாரிடம் சேர்ந்தபின் படிக்கத் தொடங்கினேன். தொடர்ந்து வாசிக்கவியலாமல் வேலைப்பளு. தொடர்ந்து வாசிப்பவர்களைக் கண்டால் வியப்பாக இருக்கிறது.
– ராஜன்











