September 11, 2026
Uncategorized சினிமா செய்திகள்

டான் புதிய வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார்.

இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி, ஜார்ஜ், ஆதிரா மற்றும் பல நடிகர்கள் ‘டான்’ படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்தப்படத்தின் வெளியீட்டுத் தேதியை சனவரி 31,2022 காலை பத்துமணி பத்து நிமிடத்தின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

அதன்படி, மார்ச் 25 ஆம் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாகும் என்று சொல்லப்பட்டது.

இந்த அறிவிப்பு வந்த சில மணிநேரங்களில் மார்ச் 25 அன்று ஆர் ஆர் ஆர் படம் வெளியாகும் என்கிற அறிவிப்பு வந்தது.

ஏற்கெனவே மார்ச் 18 அல்லது ஏப்ரல் 28 என்று சொல்லியிருந்தது ராஜமெளலியின் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ஆர் ஆர் ஆர் படக்குழு. அவர்கள் திடீரென தங்கள் முடிவை மாற்றி மார்ச் 25 ஆம் தேதி ஆர் ஆர் ஆர் வெளியாகிறது என்று அறிவித்துவிட்டார்கள்.

அந்தப்படத்தையும் தமிழில் லைகா நிறுவனமே வெளியிடவிருக்கிறது. லைகாவின் காலை அறிவிப்பைக் கணக்கில் கொள்ளாமல் ஆர் ஆர் ஆர் படக்குழு தேதியை அறிவித்துவிட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த லைகா நிறுவனம் டான் தேதியை மாற்ற முடிவு செய்தது.

இன்று (மார்ச் 2,2022) காலை புதிய வெளியீட்டுத் தேதியை அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, மே 13 ஆம் தேதி டான் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

Related Posts