ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த ‘2.0’, பா.ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்த ‘காலா’ திரைப்படங்கள் வெளியீட்டுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில், ரஜினியின் அடுத்த படத்துக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘இறைவி’ படங்களின் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் ரஜினி நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்நிலையில் ரஜினி – கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘3’ படத்தின் மூலம் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். ‘எதிர்நீச்சல்’, ‘மான்கராத்தே’, ‘வேலையில்லா பட்டதாரி’, ‘கத்தி’, ‘நானும் ரவுடிதான்’, ‘வேதாளம்’, ‘ரெமோ’, ‘தங்கமகன்’, ‘விவேகம்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத் ரஜினி படத்துக்கு இசையமைப்பது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.











