சினிமா செய்திகள் நடிகை

ஸ்ரீதேவி வாழ்க்கை முழுதும் நிம்மதி இல்லை – பரபரப்பைக் கிளப்பும் இயக்குநர்

ஸ்ரீதேவி துபாயில் பிப்ரவரி 24-ம் தேதி இறந்தார். இதையடுத்து நேற்று முன்தினம் அவர் உடல் கொண்டு வரப்பட்டு நேற்று (பிப்ரவரி 28) தகனம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா நடிகை ஸ்ரீதேவி குறித்து ட்விட்டரில் அவர் பதிவு செய்துள்ளார்.அதில்….

நடிகைகள் பலர் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதுபோல் காட்டிக் கொள்கின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதில்லை. அதுபோலத்தான் நடிகை ஸ்ரீதேவியும். அவர் தனது சொந்த வாழ்க்கையில் மகிழ்ச்சி இல்லாமல்தான் காணப்பட்டார்.

நடிகை ஸ்ரீதேவி, இந்தியாவிலேயே அனைவராலும் விரும்பப்பட்ட நடிகையாக இருந்தார். மேலும் இந்தியாவின் முதல் லேடி சூப்பர் ஸ்டார் என்றும் அவர் பாராட்டப்பட்டார். ஆனால் அவர் சொந்த வாழ்வில் மகிழ்ச்சியாக இருந்தாரா என்று கேள்வி எழுப்பினால் இல்லை என்றுதான் பதில் வரும்.

ஸ்ரீதேவி தனது வாழ்வில் மிகவும் சரியாக இருந்தார். நிறைவாக வாழ்ந்தார் என்று பலர் நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். ஆனால் நடிகை ஸ்ரீதேவி நிஜமாகவே சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்தாரா…?

நான் அவரை முதன்முதலாக ஷணா ஷணம் என்ற படத்தில் நடிக்க வைக்க அணுகினேன். அப்போது முதலே நடிகை ஸ்ரீதேவியை நான் நன்கு அறிவேன். அவர் தனது தந்தை இறக்கும் வரை சுதந்திரமாக இருந்தார். ஆனால் அதன் பின்னர் தாயாரின் பிடிக்குள் வந்ததும் கூண்டுக் கிளியாக மாறிவிட்டார். அவரின் பாதுகாப்பில்தான் அவர் முழுவதும் இருந்தார். யாரும் ஸ்ரீதேவியை நெருங்கி விட முடியாது. அந்த காலத்தில் நடிகர், நடிகைகளுக்கு கருப்புப் பணத்தில் சம்பளத்தைக் கொடுப்பார்கள்.

அப்படித்தான் நடிகை ஸ்ரீதேவியும் தனது சம்பளத்தைப் பெற்று வந்தார். வருமான வரித்துறை சோதனை போன்ற பயங்களால், அவரது தந்தை அந்த தொகையை எல்லாம் அவரது நண்பர், உறவினர்களிடம் கொடுத்து வைத்திருந்தார். கொடுத்து வைத்தவர்கள் ஏமாற்றியதால் ஸ்ரீதேவியின் தந்தை இறந்தார்.

அதைப் போலவே ஸ்ரீதேவியின் தாயாரும், சில நிறுவனங்களில் தவறான முதலீடுகளைச் செய்து சொத்துகளை இழந்தார். இதனால் ஒரு பைசா கூட இல்லாத நிலையில்தான் போனி கபூர், ஸ்ரீதேவியின் வாழ்க்கையில் வந்தார். அப்போது போனி கபூருக்கும் பெரிய அளவில் கடன் இருந்தது.

ஸ்ரீதேவியின் தாயார் இறப்பதற்கு முன்பாக அனைத்து சொத்துகளையும் மகள் ஸ்ரீதேவி பெயருக்கு மாற்றி எழுதினார். இதைத் தொடர்ந்து ஸ்ரீலதா, ஸ்ரீதேவி மீது வழக்கு தொடுத்தார். தனக்கும் சொத்தில் சரி பாதியைத் தரவேண்டும் என்று வழக்கு நடைபெற்றது. இதுபோல நடிகை ஸ்ரீதேவிக்கு ஏராளமான பிரச்னைகள் இருந்தன.

போனிகபூரின் முதல் மனைவி வாழ்க்கையை கெடுத்துவிட்டதாக அவரது அம்மா நட்சத்திர ஓட்டல் ஒன்றில் ஸ்ரீதேவியின் வயிற்றில் ஓங்கி குத்திய சம்பவமும் நடந்தது. இதனால் வாழ்க்கையில் தனிமைப்படுத்தப்பட்ட பெண்ணாகவே ஸ்ரீதேவி ஆகிவிட்டார்.

நீங்கள் ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலிஷ் படத்தைப் பார்க்கும்போது அவர் ஒரு சில ஷாட்டுகளில் மட்டுமே மகிழ்ச்சியாகத் தெரிவார். மற்ற நேரங்களில் அவரது சோகம் படம் முழுவதும் தென்படும். நடிகை ஸ்ரீதேவி மிகவும் கூச்ச சுபாவமுள்ளளவர்.

அவருக்கு அவர் மீதே நம்பிக்கையில்லை. யாராவது துணையுடன்தான் வருவார். பயத்துடனேயே காணப்படுவார். முதலில் தாயாரின் பாதுகாப்பில் வந்தவர், பின்னர் கணவர் போனி கபூரின் பாதுகாப்பில் இருந்தார்.

அவருடைய மரணம் என்ற பேச்சு வரும்போது அவருக்கு முதலில் இருதய ஸ்டிரோக், அதன் பின்னர் தவறி விழுந்து தண்ணீர் தொட்டியில் விழுந்திருக்கலாம் என்பது எனது கணிப்பு.

பெரும்பாலும் தற்கொலைகள், தவறி விழுந்து மரணம் போன்ற விவகாரங்கள் மிகப்பெரிய விருந்து நிகழ்ச்சிகள், திருமண நிகழ்ச்சிகளுக்குப் பின்னரே நடக்கின்றன. பெரும்பாலும் பிரபலங்கள் மரணமடையும்போது நான் ரெஸ்ட் இன் பீஸ் (ஆன்மா சாந்தியடையட்டும்) என்று நான் சொல்வதில்லை. ஆனால் ஸ்ரீதேவி விஷயத்தில் அவரது ஆன்மா இப்போதாவது சாந்தியடையட்டும் என்று சொல்ல விரும்புகிறேன். ஏனெனனில் அவர் தனது வாழ்வில் இப்போதாவது முதன்முறையாக அமைதியாக உறங்கட்டும்.

இவ்வாறு அவர் எழுதியுள்ளார்.

Related Posts