உலகின் முதல் சூப்பர் ஸ்டார் புரூஸ்லீ பெயரில் புதிய படம்
ஐந்து படங்கள் மட்டுமே நடித்து உலகப்புகழ் பெற்ற புரூஸ்லீ 1973. ஜூலை 20 அன்று மரணம் அடைந்தார்.அவர் புகழின் உச்சியில் இருக்கும்போது அந்த மரணம் நடந்தது. மரணத்தின்போது அவரின் வயது 32 மட்டுமே.
மறைந்து 45 ஆண்டுகள் ஆனாலும் அவர் புகழ் இன்னும் மங்கவில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக உருவாகியிருக்கும் படம் புதிய புரூஸ்லீ.
ஏ.சோணை என்பவர் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் புரூஸ்லீ மாதிரியான தோற்றத்தில் உள்ள புரூஸ் சான், நாயகனாக நடித்திருக்கிறார்.
வந்தவாசி கே.அமான் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் நாயகியாக ரஸியா என்ற புதுமுகம் நடித்திருக்கிறார்.
இந்தப்படத்துக்கு ஒளிப்பதிவு சிவசங்கர், இசை செளந்தர்யன், நடன இயக்கம் ராபர்ட், மனோஜ், படத் தொகுப்பு தங்கவேல்.
இப்படம் பற்றி இயக்குநர் கூறியதாவது….
நான் ‘புரூஸ்லீ’யின் தீவிர ரசிகன். எனக்கு அந்தக் கேரக்டரை மனதில் வைத்து ஒரு படம் செய்ய வேண்டும் என்ற ஆசை.நாயகன் சானைப் பார்த்ததும் அது செயல்பாட்டுக்கு வந்துவிட்டது. சான், ஏற்கெனவே கராத்தேயில் இரண்டு பிளாக் பெல்ட் பதக்கங்கள் பெற்றவர் என்று தெரிந்ததும் எனக்கும் இன்னும் அதிகமாக ஆசையும், பலமும் சேர்ந்து கொண்டது. இதன் பின்புதான் இந்தப் படத்தின் கதையையே உருவாக்கினேன்.
கிராமத்தில் இருக்கும் நாயகன் ஒரு பாதிப்பினால் தன் குடும்பத்தை இழக்கிறான். மன ஆறுதலுக்காக நகரத்தில் உள்ள தூரத்து உறவினரான தன் மாமா வீட்டிற்கு அழைத்து வரப்படுகிறான். அங்கு அவரது மாமா ஒரு பெரிய பிரச்சினையில் சிக்கியிருப்பதை உணர்ந்து அந்தப் பிரச்சினையை தனது சண்டை திறமையால் தீர்த்துவைத்துவிட்டு ஊருக்குத் திரும்புகிறான். இதுதான் இந்தப் படத்தின் கதை.
கதையின் நாயகனாக சான் இருந்தாலும், எனக்கு நினைவில் இருந்ததெல்லாம் நான் நேசிக்கும் புரூஸ்லீதான். அவர் நடை, உடை, பாவனை.அவர் உணர்வுகளை வெளிப்படுத்தும்விதம்.. அனைத்தையும் நான் ரசிக்கும் அளவுக்கு சானிடம் இருந்து வெளிக்கொணர்ந்திருக்கிறேன்.
குறிப்பாக சண்டைk காட்சிகளில் புரூஸ்லீ வெளிப்படுத்திய வீரத்தை இதில் கையாண்டிருக்கிறேன். என் எண்ணத்தை முழுமையாகப் புரிந்து கொண்ட சண்டை பயிற்சியாளர் ‘த்ரில்’ சேகர் மிகச் சிறப்பாக சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறார். சண்டை காட்சிகளை நீங்கள் பார்க்கும்போது நிச்சயமாக அவர்களது மனக்கண்ணில் புரூஸ்லீ தோன்றுவார் என்பது மட்டும் உண்மை.
புரூஸ்லீயாக ஒருவரைக் காட்டும்போது அவருடன் சண்டையிடும் வில்லன் மற்றும் சண்டை வீரர்கள் எப்படியிருக்க வேண்டும் என்பதை யோசித்து மிகவும் கவனமாக பொறுக்கியெடுத்து தேர்வு செய்துள்ளோம்.
இந்தப் படத்தில் சுரேஷ் நரங் என்பவர் சர்வதேச கிரிமினல் பிஸினஸ்மேனாக வில்லனாக நடித்திருக்கிறார். படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிக்காக ஜிதேந்திர ஹூடாவை மும்பையிலிருந்து வரவழைத்து நடிக்க வைத்திருக்கிறோம். அனைவருமே சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
படத்தில் மூன்று பாடல்கள் இருக்கின்றன. மூன்று பாடல்களையும் நானே எழுதியிருக்கிறேன். மூன்றுமே இசை ரசிகர்களையும், சினிமா ரசிகர்களையுமே கவரும் வகையில் அருமையான இசையில் உருவாக்கப்பட்டிருக்கின்றன என்கிறார்.
புரூஸ்லீ ரசிகர்களுக்கும் சண்டைப் பிரியர்களுக்கும் இப்படம் நல்ல விருந்தாக அமையும்.