September 18, 2026
சினிமா செய்திகள்

ராஜாவுக்கு செக் – பாதுகாப்பற்ற சூழலில் பெண் குழந்தைகள் பதறும் சேரன்

இயக்குநர் சேரன் கதாநாயகனாக நடித்துள்ள படம் ராஜாவுக்கு செக். சாய் ராஜ்குமார் எழுதி இயக்கியிருக்கிறார்.மலையாளத் திரையுலகின் பிரபல தயாரிப்பாளர்களான சோமன் பல்லாட் மற்றும் தாமஸ் கொக்காட் ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இப்படத்தில், சிருஷ்டி டாங்கே சரயூ மோகன், நந்தனா வர்மா, இர்பான் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

எம்எஸ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். குற்றம் கடிதல் படத்தின் எடிட்டிங்கிற்காக பேசப்பட பிரேம் இந்த படத்தின் படத்தொகுப்பைக் கவனிக்கிறார். ஆக்சன் காட்சிகளை டேஞ்சர் மணி வடிவமைத்துள்ளார்.

தெலுங்கில் முன்னூறுக்கும் அதிகமான படங்களில் பணியாற்றி, தனது பின்னணி இசைக்காகவே பிரபலமான வினோத் யஜமானியா இந்தப்படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தின் முன்னோட்டம் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று (அக்டோபர் 14) மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக, இயக்குநர்கள் வசந்தபாலன், சரண், பத்மா மகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த விழாவில் இயக்குநர் சேரன் பேசியதாவது….

இந்தப் படத்தில் நடித்த என்னை விட மற்ற அனைவரும் இந்தப் படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வருகிறார்கள், காரணம் நான் தேவையான அளவுக்கு வெற்றி, பெயர் எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன்.

இந்த உலகத்தில் பாராட்டுகளை எதிர்நோக்கி அடுத்தடுத்து நல்ல வாய்ப்புகளை எதிர்நோக்கிக் காத்திருக்கும் இளைஞர் கூட்டம் தான் இங்கே இந்தப் படத்தின் வெற்றியை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

குடும்பத்திற்கான திரில்லர் படமாக இது அமைந்துள்ளது. உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் இந்தப் படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அவர்களையும் அழைத்து வந்து இந்த படத்தைக் காட்ட வேண்டும்.அது அவர்களுக்கு ஒரு பத்து புத்தகங்களை கொடுத்து படிக்கச் சொன்னதற்குச் சமமாக இருக்கும்.

இந்த வாழ்க்கைச் சூழலில், இன்றுள்ள சமூகத்தில் எந்த மாதிரியான வாழ்க்கையில் நாம் இருக்கிறோம், நமக்கான அபாயங்களும் நமக்கான பிரச்சனைகளும் நம் கூடவே நடந்து வந்து கொண்டிருக்கின்றன, அப்படிப்பட்ட சூழலில் பெண் குழந்தைகளை எப்படிப் பாதுகாக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஒவ்வொரு பெற்றோருக்கும் இருக்கிறது. அப்படி ஒரு பெற்றோராக, அவர்களின் பிரதிநிதியாக தான் நானும் இருக்கிறேன்.

நாம் எந்த தருணத்தில் அப்பாவாக உணர்கிறோம் என்பதை இந்த படம் அழகாகச் சொல்கிறது.. நான் பல தருணங்களில் என்னை ஒரு அப்பாவாக உணர்ந்திருக்கிறேன்.

சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது கூட அங்கே ஒரு அப்பாவாக வாழ வேண்டிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதிலும் நான் என்னுடைய உண்மையாக, நேர்மையாக என் மகளை பார்ப்பதுபோல அவரைப் பார்த்துக்கொண்டேன்.

அதில் எந்த பாசாங்கும் இல்லை அந்த விளையாட்டிற்காக அப்படி நடக்கவேண்டிய எண்ணமும் ஏற்படவில்லை. அந்த பாசத்தை நான் பொய்யாகக் காட்டினால், இந்த உலகத்தில் வாழ்வதற்கே எனக்கு அருகதை கிடையாது..

படம் பார்க்கும் பார்வையாளர்கள் இந்தப் படத்தின் கதாபாத்திரத்துடன் தங்களை ஏதோ ஒரு விதத்தில் தொடர்பு படுத்திக் கொள்வது போல இந்தப் படம் இருக்கும்.

படம் பார்த்து முடித்துவிட்டு நீங்கள் வெளியே வரும்போது யாரோ ஒருவருடைய கரத்தைப் பற்றிக்கொள்ள தேடுவீர்கள். அது உங்களுடைய மகளுடைய, மகனுடைய, மனைவியுடைய, யாரோ ஒருவருடைய கரமாக இருக்கலாம்.

உறவுகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை.உங்கள் உறவுகளிடம் இருந்தும் அவர்கள் ஏற்படுத்தும் தொல்லைகள், பிரச்சனைகளிலிருந்தும் அவை கொடுக்கும் அனுபவங்களிலிருந்தும் தயவுசெய்து விலகி நின்று விடாதீர்கள். கூடவே சேர்ந்து பயணியுங்கள்..

இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு சற்று கஷ்டமாகவும், அதேசமயம் சவாலாகவும் இருந்தது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் எம்.எஸ்.பிரபு இணை இயக்குநர் போலவே பணியாற்றியுள்ளார்.

இந்தப் படத்துக்கு திரையரங்கு உரிமையாளர்கள் நிறைய தியேட்டர்கள் கொடுக்கவேண்டும். அதிகக் காட்சிகள் குறிப்பாக குடும்பத்துடன் அனைவரும் வந்து பார்க்கும் விதமாக மாலை நேரக் காட்சிகளை ஒதுக்கவேண்டும்.

பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது எனக்கு ஆதரவாக வெளியில் இருந்து பேசியவர்களில் இங்கே வந்திருக்கும் இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்த கருத்துகள் அங்கே உள்ளே இருக்கும்போதே என் காதுகளுக்கு வந்தது.வெளியே வந்த பிறகும் அதை நான் பார்த்தேன்.என்மேல் கொண்ட அன்பின் மிகுதியால் மட்டுமே அவர் அப்படி பேசியிருக்கிறாரே தவிர அதில் வேறு ஒன்றுமில்லை.அக்கறை உள்ளவர்கள்தான் நம் பக்கத்தில் வந்து நிற்பார்கள்.மற்றவர்கள் பார்த்து சிரித்துவிட்டுப் போய்விடுவார்கள.

தமிழ் சினிமாவில் புதுப்புது படைப்பாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார்கள்.சமீபத்தில் அசுரன் படத்தைப் பார்த்து பிரமித்துப் போய்விட்டேன்.

எப்படி அந்தப் படத்தை அருமையாக படைப்பாக்கம் செய்திருக்கிறார்கள், கமர்சியல் படங்களில் நடித்து வரும் ஒரு நடிகன் எப்படி 50 வயது மனிதனாகத் தன்னை மாற்றிக்கொண்டு அற்புதமாக நடிக்க முடிகிறது, அதற்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்.

அந்த மாதிரியான படங்களை தருவதற்கு இங்கே நிறைய படைப்பாளிகள் இருக்கிறார்கள். ஆனால் இங்கே படங்களை வியாபாரம் செய்வதில் நாம் சிக்கிக் கொண்டிருக்கிறோம்.. சமீபத்தில் ஒத்த செருப்பு படம் வெளியானது. பார்த்திபன் அருமையான படைப்பாளி.அதுபோன்ற படம் வெகு ஜனங்களை சென்றடைய வேண்டுமே என்கிற ஏக்கம் அவரைப்போல பலருக்கும் இருக்கிறது.அது போன்ற ஒரு திரைப்படம் தான் இந்த ராஜாவுக்கு செக் படமும்.

இவ்வாறு சேரன் பேசினார்.

Related Posts