சினிமா செய்திகள்

இரண்டு மடங்கு இலாபம் – பரியேறும்பெருமாள் பட சாதனை

பரியேறும்பெருமாள் போன்று சமுதாயப் பொறுப்புடன் எடுக்கப்படும் படங்கள் நல்ல பெயரைப் பெற்றாலும் வசூல் ரீதியாக இலாபம் சம்பாதித்துக் கொடுக்காது என்று திரை வர்த்தகர்கள் விடாமல் பேசுகிறார்கள்.

ஆனால் அதைப் பொய்யாக்கி வசூலிலும் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது அந்தப்படம்.

அந்தப்படம் வெளியான செப்டம்பர் 28 ஆம் தேதிக்கு முந்தைய நாள் செப்டம்பர் 27 அன்று மனிரத்னம் இயக்கத்தில் சிம்பு.விஜய்சேதுபதி, அருண்விஜய் உள்ளிட்ட நிறைய நடிகர்கள் நடித்த செக்கச் சிவந்த வானம் வெளியானது. அப்படம் பெரும்பாலான திரையரங்குகளைப் பிடித்துக்கொண்டது.

அதற்கு முந்தைய வாரங்களில் விக்ரம் நடித்த சாமி 2, சிவகார்த்திகேயன் நடித்த சீமராஜா ஆகிய படங்களும் நிறைய திரையரங்குகளில் இருந்தன.

இதனால் பெரும் போராட்டத்துக்குப் பின் 122 திரையரங்குகளில் இந்தப்படம் வெளியானது. அவற்றில் பல திரையரங்குகளில் ஒரு காட்சி அல்லது இரண்டுகாட்சிகள் மட்டுமே.

படம் வெளியாகி நல்ல பெயர் பெற்றதோடு ஊடகங்களும் மக்களும் இந்தப்படத்தைக் கொண்டாடியதன் விளைவு ஒரு காட்சி இரண்டு காட்சிகள் இருந்த திரையரங்குகளில் நான்கு காட்சிகளும் பரியேறும்பெருமாள் திரையிடப்பட்டது.

அக்டோபர் 4, 5 தேதிகளில் விஜய்சேதுபதியின் 96, நோட்டா, ராட்சசன் ஆகிய 3 படங்கள் வெளியானபோதும் வெறும் 12 திரையரங்குகள் குறைந்து 110 திரையரங்குகளில் இப்படம் தொடர்கிறது.

அவற்றில் தொடர்ந்து நல்ல கூட்டம் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.

சுமார் இரண்டரை கோடி செலவில் எடுக்கப்பட்ட இப்படம் ஐந்துகோடி வரை திரையரங்குகளில் வசூலிக்கும் என்று சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையும் பெரிய தொகைக்குக் கேட்கப்படுகிறதாம்.

இதனால் நல்ல படம் என்கிற பெயரோடு நின்று விடாமல் தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் ஆகிய அனைவருக்கும் நல்ல இலாபம் கொடுத்த படமாகவும் இது அமைந்திருக்கிறது.

Related Posts