இலங்கையில் சிக்கித் தவிக்கும் நால்வர் – பராசக்தி பரபரப்பு

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உட்பட பலர் நடிக்கும் படம் பராசக்தி.
சிவகார்த்திகேயனின் 25 ஆவது படமான இப்படத்துக்கு ஒளிப்பதிவு ரவி கே.சந்திரன்,இசை ஜி.வி.பிரகாஷ்குமார்.
இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி பின்பு கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது.அதன்பின் இலங்கை சென்று சுமார் இருபது நாட்கள் படப்பிடிப்பு நடத்திவிட்டு வந்தார்கள்.மார்ச் 27 ஆம் தேதி படக்குழுவினர் திரும்பி வந்தார்கள்.
அங்கு சென்று வந்த பின் மீண்டும் சென்னையில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டிருந்தார்கள்.
மார்ச் 30 முதல் படப்பிடிப்பைத் தொடங்கவிருந்தார்களாம். ஆனால் இன்னமும் படப்பிடிப்பைத் தொடங்கவில்லை.
மீண்டும் படப்பிடிப்பு தொடங்காததற்கு தயாரிப்பு நிறுவனம் பணம் தரவில்லை என்றும் இயக்குநர் மற்றும் நடிகர்களுக்கிடையேயான கருத்து வேறுபாடு ஆகியனவே காரணம் என்று சொல்லப்பட்டது.
அவற்றைத் தாண்டி இன்னொரு அதிர்ச்சித் தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
அது என்ன?
இலங்கையில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோதே தயாரிப்பு நிறுவனம் பணம் கொடுக்கவில்லையாம்.இதனால் அங்கு படப்பிடிப்புக்குத் திட்டமிட்டுக் கொடுத்தவர்களே பொறுப்பெடுத்துக் கொண்டு படப்பிடிப்பை நடத்தினார்களாம்.படப்பிடிப்பு முடிவதற்குள்ளோ அல்லது முடிந்த பின்னோ மொத்தத் தொகையையும் கொடுத்து விடுவோம் என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால், படப்பிடிப்பு நிறைவடைந்து படக்குழு கிளம்புகிற நேரத்திலும் பணம் தரவில்லையாம்.
இதனால், படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர்கள் பொறுப்பிலிருக்கும் இருவர் மற்றும் அவர்களுடைய உதவியாளர்கள் இருவர் ஆக மொத்தம் நால்வர் அங்கேயே இருக்கிறார்களாம்.அவர்கள் நால்வரும் தங்களது கடவுச்சீட்டை ஒப்படைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
தயாரிப்பு நிறுவனம் கொடுக்க வேண்டிய பணத்துக்காக இப்படி நால்வர் அடமானம் வைக்கப்பட்ட நிகழ்வு நடந்திருக்கிறது.
பொதுவாக வெளிமாநிலங்கள் அல்லது வெளிநாடுகளுக்குப் படப்பிடிப்புக்காகச் செல்லும்போது இதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது இயல்புதான்.காலங்காலமாக அப்படித்தான் நடந்து வருகிறது.
ஆனால்,முன்னெப்போதும் இல்லாத வகையில் இம்முறை, இப்போதுவரை அவர்கள் நால்வரும் நாடு திரும்பவில்லை.நிகழ்வு நடந்து சுமார் பனிரெண்டு நாட்களாகிவிட்டன.இன்னமும் அவர்கள் அங்கேயே இருக்கிறார்கள்.
அங்கே கொடுக்க வேண்டிய தொகை சுமார் பத்துகோடி என்று சொல்கிறார்கள்.அதனால் தான் அவர்கள் அங்கேயே இருக்கவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுவிட்டதாம்.
அதோடு இன்னொரு காரணமும் சொல்லப்படுகிறது.
விஜய் நடித்த தி கோட் படத்தின் படப்பிடிப்புக்காக இலங்கை சென்று படப்பிடிப்பு நடத்தியிருந்தார்களாம்.அப்போது அவர்கள் கிளம்புகிற நேரத்தில் சுமார் ஒரு கோடி ரூபாய் பாக்கி வைத்துவிட்டார்களாம்.சென்னை சென்றதும் அனுப்பிவிடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அவர்களும் அதை ஏற்று படக்குழுவை அனுப்பி வைத்திருக்கிறார்கள்.ஆனால் இன்னமும் அந்தப் பணத்தைத் தராமல் திகோட் படத்தைத் தயாரித்தநிறுவனம் இழுத்தடிக்கிறதாம்.
இப்போது இவர்களை விடாமல் பிடித்து வைத்திருப்பதற்கு அதுவும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது.
இந்தத் தகவல் கொஞ்சம் கொஞ்சமாக திரையுலகில் கசிந்து கேட்போரை அதிர்ச்சியடைய வைத்துக் கொண்டிருக்கிறது.