சுந்தர்.சி சொன்ன இரகசியம் – வெளிப்படுத்திய விஷால்
சுந்தர்.சி இயக்கத்தில் ஜீவா, ஜெய், கத்ரீன் தெரசா மற்றும் நிக்கி கல்ராணி ஆகியோர் நடிப்பில், ஹிப் ஹாப் ஆதி இசையமைப்பில் வெளியான படம் கலகலப்பு 2.
பிப்ரவரி 9-ம் தேதி இப்படம் வெளியானது. இப்படம் வெளியாகி இருபதாவது நாளில், அதாவது மார்ச் 1 ஆம் தேதி முதல் திரையுலக வேலை நிறுத்தம் தொடங்கியது. அதனால் புதிய படங்கள் வெளியாகவில்லை.
இதனால் கலகலப்பு 2 படம் திரையரங்குகளில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. இதனால் அப்படம் நல்ல இலாபம் கொடுத்த படம் என்று சொல்லப்பட்டது. ஆனால் இப்போது விஷால் தெரிவித்திருக்கும் கருத்து அதைப் பொய்யாக்கியிருக்கிறது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் எட்டு வாரத்துக்கு மேல் ஓடி மாபெரும் வெற்றி பெற்ற கலகலப்பு 2 படத்தில் எனக்கு திரையரங்குகளிலிருந்து எந்த இலாபமும் வரவில்லை, வெறும் கணக்கு பேப்பர் மட்டுமே கொடுத்தார்கள் என்று இயக்குநர் சுந்தர்.சி தன்னிடம் சொல்லி வருத்தப்பட்டதாக விஷால் கூறினார்.
தயாரிப்பாளர்கள் சங்க அவசரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு கூறினார் என்று சொல்லப்படுகிறது.









