பிக்பாஸ் ராசியில்லாதவர் என்கிற சர்ச்சையை மீறி 5 ஆம் பாக ஒளிபரப்பு தேதி உறுதியானது
2017 ஆம் ஆண்டு தொடங்கி, ஒவ்வொரு ஆண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பி வந்தது விஜய் தொலைக்காட்சி. ஆனால், சென்ற ஆண்டு (2020) கொரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.
இவ்வாண்டும் அக்டோபர் மாதத்தில்தான் பிக்பாஸ் 5 நிகழ்ச்சி தொடங்குகிறது. அக்டோ[பர் மூன்றாம் தேதி முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடிவு செய்திருக்கிறார்கள்.
பல்வேறு ஐயங்களைத் தாண்டி இவ்வாண்டும் கமல்ஹாசனே அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர். இதுதொடர்பாக தயாரிப்பு நிறுவனம் அவரோடு பேசி அவருடைய தோற்றம் உள்ளிட்ட பல விசயங்களை முடிவு செய்துவிட்டார்களாம்.
போட்டியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் பணியும் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டு அது கடினமாக இருக்கும் என்று சொல்கிறார்கள்.
தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முன்னணியில் இருக்கும் பலர் ஆர்வம் காட்டி வந்தார்கள். ஆனால் போகப்போக அந்த ஆர்வம் குறைந்துவிட்டது.
அதிலும் இவ்வாண்டில், அந்நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு துறை ரீதியாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பதோடு தேவையற்ற பல சர்ச்சைகளில் சிக்குவட்தும் நடக்கிறது. எல்லாம் பிக்பாஸ் ராசி என்று யாரோ கிளப்பிவிட அது நன்றாக வேலை செய்கிறதாம்.
பிக்பாஸ் குழுவிலிருந்து பேசுகிறோம் என்றாலே பலர் பதறியடித்து விலகி ஓடுவதாகச் சொல்லப்படுகிறது.











