களமிறங்கிய கலைஞர் தொலைக்காட்சி – திரைத்துறை மகிழ்ச்சி
தமிழ்த்திரைப்படங்களுக்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வியாபாரம் என்பது முக்கியமான ஒன்று. படத்துக்குச் செலவாகும் தொகையில் பெரும்பங்கு தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையில் கிடைக்கும் என்பது பெரிய கதாநாயகர்களை வைத்துப் படமெடுப்பவர்களின் கணக்கு.
தமிழில் சன், விஜய், ஜீ தமிழ், கலைஞர், ஜெயா ஆகிய தொலைக்காட்சிகள் படங்களை விலைக்கு வாங்கிவந்தன. கடந்த பல ஆண்டுகளாக கலைஞர் தொலைக்காட்சியும் ஜெயா தொலைக்காட்சியும் புதுப்படங்கள் வாங்குவதில்லை. அதனால் திரைத்துறையினரின் வியாபார எல்லை சுருங்கிவிட்டது.
இதனால், விஷால் நடித்துள்ள சக்ரா ஆர்யா நடித்துள்ள மகாமுனி உள்ளிட்ட ஏராளமான படங்களின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை விறப்னை ஆகாமல் இருக்கின்றன.
இப்போது திமுக ஆட்சி அமைந்ததும் கலைஞர் தொலைக்காட்சி புதிய படங்களை வாங்கக் களமிறங்கியிருக்கிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அவர்கள் ஆகஸ்ட் 15 அன்று அன்பிற்கினியாள் படத்தை ஒளிபரப்பவிருக்கிறார்கள்.
அதோடு பல புதிய படங்களை வாங்கவும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். அவற்றில் சார்பட்டா பரம்பரையும் ஒன்று.
இப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமைக்காக ஐந்துகோடி கேட்டுக்கொண்டிருந்த படக்குழுவினர் படத்துக்கு நல்ல வரவேற்பு என்றதும் விலையை எட்டுக் கோடியாக உயர்த்திவிட்டார்களாம். அதனால் விஜய் மற்றும் க்லர்ஸ் தொலைக்காட்சி ஆகியன பின்வாங்கிவிட்டனவாம். அந்நேரத்தில் கலைஞர் தொலைக்காட்சி களமிறங்கி அப்படத்தின் ஒளிபரப்பு உரிமையைக் கைப்பற்றியிருக்கிறதாம். அவர்கள் கொடுத்த விலை சுமார் ஆறுகோடி என்கிறார்கள்.
இதுதவிர இன்னும் பல படங்களை வாங்கப் பேச்சுவார்த்தை நடஎதுவருவதால் திரைத்துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.











