ஹரிஷ் கல்யாணின் ஸ்டார் படம் டிராப்
2018 ஆம் ஆண்டு இளன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘பியார் பிரேமா காதல்’. கே புரொடக்ஷன்ஸ் மற்றும் இசையமைப்பாளர் யுவன் இணைந்து தயாரித்த இப்படம் வரவேற்பைப் பெற்றது.
இப்படத்துக்குப் பிறகு இளன் – ஹரீஷ்கல்யாண் ஆகிய இணையும் ஸ்டார் என்கிற படம் அறிவிக்கப்பட்டது. ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் அப்படத்தில் யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்து வந்தார்.
2020 டிசம்பர் 12 ஆம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு, இளன் – ஹரிஷ் கல்யாண் – யுவன் கூட்டணி படத்தின் முதல்பார்வையை வெளியிட்டனர்.மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘தளபதி’ படத்தின் ரஜினி கெட்டப் போலவே ஸ்டார் படத்தின் முதல்பார்வை வடிவமைக்கப்பட்டிருந்தது.
படத்தின் முதல்பார்வையை டிசம்பர் 12 ஆம் தேதி மதியம் 12 மணி, 12 நிமிடம், 50 விநாடிகளின்போது வெளியிட்டார்கள். ஏனென்றால் 12-12-1950 அன்று ரஜினி பிறந்தார் என்பதால் அந்த நேரத்தில் வெளியிட்டது படக்குழு.
அதன்பின் படத்தின் இரண்டாம்பார்வையை படக்குழுவினர் வெளியிட்டனர். அதில், சிகப்பு ரோஜாக்கள் படத்தில் கமல் இருந்த தோற்றத்தில் இருந்தார் ஹரிஷ்கல்யாண்.
அப்போதே, விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் சென்னை, மும்பை, ஊட்டி உள்ளிட்ட இடங்களில் இதன் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது என்றும் சொன்னார்கள்.
அப்படத்துக்காக யுவன் இசையில் மூன்று பாடல்களும் பதிவுசெய்யப்பட்டதாகச் சொன்னார்கள்.
அதன்பின், அப்படம் நகரவே இல்லை. தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக படம் கைவிடப்பட்டுவிட்டதென பேச்சு வந்தது.
அது தற்போது உறுதியாகியிருக்கிறது.ஏனெனில் இயக்குநர் வேறொரு பெரிய தயாரிப்பு நிறுவனத்தில் பெரிய கதாநாயகன் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறாராம்.
இதனால் ஹரிஷ்கல்யாண் நடிப்பில் அறிவிக்கப்பட்ட ஸ்டார் நின்றுபோய்விட்டது என்பது உறுதியாகிவிட்டது.











