விமர்சனம்

மேற்குத் தொடர்ச்சி மலை – திரைப்பட விமர்சனம்

அதிகாலை நான்கு மணிக்கு மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள கிராமத்தில் கண் விழிக்கும் நாயகன் ரங்கசாமியின் (நடிகர் ஆண்டனி) நிழல் போல, அல்ல அல்ல உடல் போலவே தேனி ஈஸ்வரின் ஒளிப்படக் கருவி பயணிக்கிறது.

கண்களுக்கு விருந்து என்று வியக்கும் மலைகளின் உடல் வழியே நரம்புகள் போல அமைந்த ஒற்றையடிப் பாதையில் நம்பிக்கையும் அன்பும் கலந்து மொழியும் மனிதர்களை நமக்குக் காட்டியபடியே மலையேறுகிறார் ரங்கசாமி.

மேலே போனால், ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களுடைய உரிமைகளுக்காகப் போராடும் தோழர் (அது கேரளப் பகுதி என்பதால் சகாவு) மூலம் கங்காணி சொல்லே மந்திரம் என்கிற வாழ்க்கை அமைந்த மக்களையும், மேலிருந்து கீழே ஏலக்காய் மூட்டை சுமக்கும் தொழிலாளர்களையும் நமக்கு அறிமுகம் செய்கிறார்.

தொழிலாளர்கள் மத்தியில் மூத்தவரான வனகாளி (பாண்டி) ஆயிரம் தன்னம்பிக்கைச் சொற்பொழிவுகளுக்குச் சமமான மனிதராக இருக்கிறார். மழை கொட்டி காடு கலங்கி பாதைகள் அறுந்து தொங்கும் நிலையில் நம்பி வந்த முதலாளிக்காக அவர் மூட்டை சுமந்த கதையைக் கேட்டுக் கதறி அழத்தோன்றுகிறது.

கலப்பில்லாத மொழியில், நாம் சுவைக்கும் ஏலக்காய் மணத்தின் பின்னால் எவ்வளவு ரணங்கள் இருக்கின்றன என்பது படிப்படியாக விரிகின்றன.

அதிகாலை தொடங்கி அந்தியில் முடியும் முதல்பாதிப் படத்தில் மலைகளையும் மக்களையும் நமக்குக் காட்டுகிறார் ரங்கசாமி.

இரண்டாம் பாதிப்படம் சுமார் பத்தாண்டுகளுக்கு மேல் பயணம் செய்கிறது. அதில் அம்மக்கள் வாழ்வு மட்டுமின்றி இப்போதைய ஒட்டுமொத்தச் சமூகத்தின் வாழ்க்கையும் பிரதிபலிக்கிறது.

தனக்கான நிலம் வேண்டும் என்கிற ரங்கசாமியின் எண்ணம் முதல்முறை ஈடேறாமல் போகிறது.

அடுத்து அவர் முயற்சி எடுக்கும்போது, மலையிலிருந்து உருண்டு விழும் ஏலக்காய் மூட்டையோடு அவர் உழைப்பும் கனவும் சேர்ந்து விழுகிறது. சட்டென நம் மடியிலிருந்து தவறும் குழந்தையைப் பிடிக்க முற்படுவது போல் திரைக்குள் நுழைந்து அந்த மூட்டையைப் பாதுகாத்திடும் துடிப்பு வருகிறது. அப்போதுதான் நாம் படம் பார்க்கிறோம் என்கிற உணர்வும் வருகிறது.

அதன்பின்னும், ஏங்க நம்மள நம்பி அந்தம்மா கல்யாண வேலையை தொடங்கிடுச்சி, நிலம் வாங்கலேன்னாலும் அவங்களுக்குக் கடன் வாங்கியேனும் பணம் கொடுக்கணுங்க என்று நாயகி ஈஸ்வரி ரங்கசாமியிடம் சொல்லும்போது பாருங்கடா எம் மக்கள் மனச என்று பெருமிதத்துடன் விம்முகிறது நம் மனசு.

அதன்பின்னர் அவ்வூர் பணக்காரரின் கருணைவழியும் அன்பில் ரங்கசாமியின் எண்ணம் ஈடேறுகிறது. இவரு கடனாக வாங்கிக்கிறாராம் எனும் அவருடைய எள்ளலில் வழியும் பாசம் நம் கண்களை நிறைக்கிறது.

அதன்பின்னர், ஏலக்காய்த் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பாதுகாக்கும் பொருட்டு நடக்கும் கொலை வழக்கில் சிறைக்குச் சென்று திரும்பும் ரங்கசாமியை கார்ப்பரேட் உலகம் வரவேற்கிறது.

அவருக்குப் புத்தாடை கொடுத்து தன் நிலத்திலேயே சோளக்காட்டு பொம்மை போல அமர வைக்கிறது.

ரங்கசாமி, அவர் மனைவி ஈஸ்வரி(நடிகை காயத்ரிகிருஷ்ணா), சகாவு (அபு ) கங்காணி (ஆண்டனி வாத்தியார்) கணக்குப் பிள்ளை (சுடலை ), கிறுக்குக் கிழவி (பாண்டியம்மா) உட்பட படத்தில் வருகிற அத்தனை பாத்திரங்களும் மனிதம் என்றால் என்ன என்பதை நமக்கு உணர்த்துகின்றன.

தேனி ஈஸ்வர் நம் கண்களாக மாறிவிட்டார் என்றால் இளையராஜா நம் சுவாசமாகவே ஆகிவிட்டார். அந்தரத்தில் தொங்குதம்மா,கேட்காத வாத்தியம் கேட்குது என்று பாடல்கள் வரும்போதுதான் இசை தெரிகிறது. பின்னணி இசை அவர் அமைத்தாரா நேரடி ஒலிகளைப் பதிவு செய்துவிட்டனரா? என்கிற எண்ணம் வருகிறாற்போல் அவ்வளவு இசைவு அவருடைய இசையில்.

இது படம்,பல நூறு காட்சிகளாக எடுத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது என்பது படத்தொகுப்பு மு.காசிவிஸ்வநாதன் என்கிற பெயரைப் பார்க்கும்போதுதான் தெரிகிறது.

இரண்டு கூடை தக்காளியைச் சுமந்து கொண்டு மாட்டுவண்டியில் கேட்டு ஏறிச் செல்லும் லோகு பாத்திரம்,
உள்ளூர் மக்களை மட்டுமின்றி நிலங்கள் மற்றும் வளங்களையும் உலக முதலாளிகளுக்குத் தாரை வார்க்கும் தரகு முதலாளிகளின் பிரதிநிதியாக வளர்ந்து கார்ப்பரேட் நுழைவுக்குப் பாதை அமைப்பதை பரப்புரை தொனியில்லாமல் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போலச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் லெனின்பாரதி.

தொழிலாளிகளுக்கு இரண்டகம் செய்யும் மூத்த தோழரை வெட்டிச் சாய்ப்பதில் உண்மையான பொதுவுடைமையாளன் தெரிகிறான்.

தொழில்முறை நடிகர்களை உண்மைத் தொழிலாளிகளாக்கி உண்மைத் தொழிலாளர்களைத் தேர்ந்த நடிகர்கள் போல் காட்டியிருப்பதில் லெனின்பாரதியின் வெற்றி உறுதியாகியிருக்கிறது.

இப்படம் கதையல்ல வாழ்க்கை, வெகுமக்களுக்குத் தெரியாத வாழ்க்கை. இதைத் திரைப்படமாகக் கொடுத்திருக்கும் லெனின்பாரதிக்கும் அதற்கு உதவிய விஜய்சேதுபதிக்கும், எம் தமிழ்ச்சமூகம் எவ்வளவு உயர்ந்த விழுமியங்களைக் கொண்டிருக்கிறது என்பதைப் பதிவு செய்தமைக்காகக் கண்ணீருடன் நன்றி.

Related Posts