விமர்சனம்

மகான் – திரைப்பட விமர்சனம்

கதராடை தலையில் வெள்ளைத்தொப்பி அணிந்து முழுமையான காந்தியவாதியாக வாழும் ஆடுகளம் நரேனின் மகன் விக்ரம். மகனுக்கு காந்தி மகான் என்று பெயர் வைத்து அவர் போலவே மகன் வளரவேண்டும் என்று ஆசைப்படுகிறார். ஆனால் உண்மை வேறாக இருக்கிறது.

அந்த காந்தி மகான் வாழ்க்கைக்கதைதான் மகான்.
 
பள்ளி ஆசிரியராக பதவிசாக அறிமுகமாகும் விக்ரம், அடுத்தடுத்து பல அவதாரங்கள் எடுக்கிறார். அதுவும் சாராய வியாபாரியான பிறகு ஏகப்பட்ட தோற்ற மாற்றங்கள். எல்லாமே அவருக்குப் பொருத்தமாக அமைந்திருப்பது சிறப்பு.
 
தோற்றங்களில் மட்டுமல்ல நடிப்பிலும் அடித்து ஆடியிருக்கிறார் விக்ரம். சட் சட்டென மாறும் அவருடைய முகபாவங்களும் உடல்மொழியும் அவ்வளவு சரியாக அமைந்திருக்கிறது. நீ கெத்துதாம்ப்பா என்று கடைசியில் வரும் வசனத்துக்கு முழுமையான உரிமையாளராகி வரவேற்புப் பெறுகிறார் விக்ரம்.

விக்ரமின் நண்பராக வரும் பாபிசிம்ஹாவுக்கும் நல்ல வேடம். அவரும் பல தோற்றங்களில் வருகிறார். தேர்ந்த நடிப்பில் கவர்கிறார். விக்ரமும் அவரும் சேர்ந்து வரும் காட்சிகளில் நடிப்புப் போட்டியே நடக்கிறது. இருவரும் வென்று காட்சிகளுக்குப் பலம் சேர்க்கிறார்கள்.

துருவ் விக்ரம் அறிமுகமே அட்டகாசம். அப்பாவுக்கு இணையாக ஆட்டம் போடுகிறார் சண்டை செய்கிறார் கனகச்சிதமாக வசனங்களை உச்சரிக்கிறார்.என்ன வேடம் என்றாலும் சரி, எந்த மாதிரியான காட்சியாக இருந்தாலும் சரி, எதிரில் எவ்வளவு அனுபவம் வாய்ந்த நடிகர்கள் இருந்தாலும் சரி நான் எதிர்கொள்வேன் என்கிற அபார தன்னம்பிக்கையுடன் நடித்து,இருபது வருடங்களில் விக்ரம் பெற்ற இடத்தை இரண்டே படங்களில் அடைந்திருக்கிறார் துருவ் விக்ரம்.

விக்ரமின் மனைவியாக வரும் சிம்ரன், அமைச்சராக வரும் வேட்டை முத்துக்குமார்,பாபி சிம்ஹாவின் மகனாக வரும்  சனத் உள்ளிட்ட நடிகர்கள் எல்லோருமே நன்றாக நடித்திருக்கிறார்கள்.

ஸ்ரேயாஸ்கிருஷ்ணா ஒளிப்பதிவு காட்சிகளுக்கேற்ற வண்ணக்கலவைகளுடன் அமைந்து படத்துக்குப் பலம் சேர்க்கிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் கேட்கும் இரகம். அவருடைய குரல் எல்லா இடங்களுக்கும் பொருத்தமாக இல்லை.எவண்டா எனக்கு கஸ்டடி பாடலின் அழுத்தத்துக்கு அவர் குரல் சுத்தமாக ஒட்டவில்லை.

படத்தொகுப்பாளர் விவேக்ஹர்ஷன் இன்னும் கொஞ்சம் உழைத்து படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.

காந்தியவாதியின் மகன் சாராய வியாபாரியாகிறார் என்கிற சுவாரசியமான கதையை எடுத்துக் கொண்டிருக்கிறார் அதே சமயம், எந்தக் கதையாக இருந்தாலும் அதை இப்படித்தான் சொல்வேன் என்று பிடிவாதமாக இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். அதனால் பல காட்சிகள் மற்றும் பாடல்கள் அவருடைய முந்தைய படங்களைப் போலவே இருக்கின்றன. 

காந்தியவழி என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என ஒவ்வொரு காட்சியிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

அதேபோல் எந்தக் கொள்கையாக இருந்தாலும் கொள்கை என்று ஒருவருக்கு இருப்பதே தப்பு என வாதிடுகிறார்.

இவை மட்டுமின்றி உண்மையான மதுவிலக்கு வந்துவிட்டால் இவரால் படமே எடுக்கமுடியாது என்று சொல்லுமளவுக்கு கதை மற்றும் காட்சிகளில் மதுவுக்கு அடிமையாகியிருக்கிறார்.

காந்தியை மறுபடி கார்த்திக்சுப்புராஜ் கொன்றுவிட மகானை விக்ரம் காப்பாற்றுகிறார்.

Related Posts