சினிமா செய்திகள்

எல் ஐ கே தெலுங்கில் வெளியாகாது? – பிரதீப் ரங்கநாதன் அதிர்ச்சி

பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் படம் லவ் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி.இதில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, மிஷ்கின், கெளரி கிஷான் உட்பட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

நயன்தாராவின் ரெளடி பிக்சர்ஸ் நிறுவனமும் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன.இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில் இப்படத்தில் நடந்த ஒரு நிகழ்வால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.இப்படத்தில் ஒரு பாடல்காட்சியில் ஜானி மாஸ்டர் நடன இயக்குநராக பணிபுரிந்திருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படத்தை, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்த விக்னேஷ் சிவன் ஸ்வீட் மாஸ்டர் என குறிப்பிட்டு இருந்தார்.

இதுதான், விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா மீது ஏராளமான விமர்சனங்கள் குவியக் காரணம்.

ஏனெனில், தமிழ் மற்றும் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடன இயக்குநராக வலம்வந்தவர் ஜானி மாஸ்டர். தனுஷின் ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’, விஜய்யின் ‘பீஸ்ட்’ படத்தில் ‘ஹலமிதி ஹபி போ’, ‘ஜெயிலர்’ படத்தில் ‘காவாலா’ உட்பட பல பெருவெற்றிப் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். ‘மேகம் கருக்காதா’ பாடலுக்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இறுதியில், அவர் மீது, அவர் குழுவில் பணிபுரியும் 21 வயது உதவி பெண் நடனக் கலைஞர், ஐதராபாத் ராய்துர்கம் காவல்துறையில் பாலியல் புகார் அளித்தார்.அதில், 2017 ஆம் ஆண்டு முதன் முறையாக நிகழ்ச்சி ஒன்றில் ஜானி மாஸ்டரை சந்தித்ததாகவும், 2 ஆண்டுகள் கழித்து, தனக்கு உதவி நடன இயக்குநராக வேலை கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்த காலக்கட்டத்தில் படப்பிடிப்புக்காக சென்னை, மும்பை என சென்ற இடங்களிலும் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டில் வைத்தும் ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

18 வயது நிரம்பாத நிலையில் தான் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அவர் கூறியதை அடுத்து ஜானி மாஸ்டர் மீது, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தலைமறைவாக இருந்த ஜானி மாஸ்டரை தெலங்கானா காவல்துறையினர் பெங்களூருவில் வைத்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன்பின், ஜானி மாஸ்டர் தெலுங்கு திரைப்பட வர்த்தக சபையிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து அவர் பவன் கல்யாணின் ‘ஜன சேனா’ கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

அப்படிப்பட்ட ஜானிமாஸ்டர், பிணையில் வெளிவந்திருக்கிறார். அவரை தெலுங்குத் திரையுலகம் முற்றாகப் புறக்கணித்திருக்கிறது.

இந்நிலையில் அவரை அழைத்து தன் படத்தில் வேலை கொடுத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.அதை ஆதரித்திருக்கிறார் நயன்தாரா.

இதுதான் சர்ச்சைகளுக்குக் காரணம்.

விக்னேஷ் சிவன் மீதான மரியாதை குறைந்து வருவதற்கு ஒரு காரணம் இருக்கிறது. முதலில் அது திலீப், இப்போது ஜானி மாஸ்டர். குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிப்பதை நிறுத்துங்கள் என்று ஒருவர் பதிவிட்டு இருந்தார்.

ஒரு மைனர் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஜானி நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்துள்ளார். நாம் ‘திறமையான’ குற்றவாளிகளை நேசிப்பதாகத் தெரிகிறது, மேலும் அவர்களை ஊக்குவித்து, அதிகாரப் பதவிகளில் வைத்திருப்போம், குற்றவாளிகள் பெண்களை அதிகமாகக் குறை கூற இதைப் பயன்படுத்துவார்கள் – “எனக்கு எதுவும் நடக்காது பாருங்கள்.
நாங்கள் இப்படித்தான் இருக்கிறோம். அருமை!

என்று காட்டமாகப் பதிவிட்டுள்ளார் பாடகி சின்மயி.

பிரதீப்ரங்கநாதன் வளரும்போதே தமிழ் தெலுங்கு ஆகிய இருமொழிகளிலும் தனக்கென ஒரு சந்தையை உருவாக்கிவிட வேண்டுமெனத் திட்டமிட்டு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கிறார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை காரணமாக இப்படம் தெலுங்கில் வெளியாகாது என்று சொல்லப்படுகிறது.

இதனால் பிரதீப் ரங்கநாதனும் இன்னொரு தயாரிப்பாளர் லலித்குமாரும் கடும் அதிர்ச்சியில் இருக்கிறார்களாம்.

Related Posts