சினிமா செய்திகள்

அமேசான் தலைமையகம் முன் இலண்டனில் ஆர்ப்பாட்டம் – பல நாடுகளில் நடக்கும் என சேரன் அறிவிப்பு

ஜூன் 3 முதல் அமேசான் இணையத்தில் ஒளிபரப்பட்டுள்ள தி ஃபேமிலிமேன் 2 தொடரில் தமிழீழ விடுதலைப்புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் இழிவாகச் சித்தரித்திருக்கிறார்கள்.

இதனால் இத்தொடரைத் தடை செய்யவேண்டுமெனவும் தொடரை எடுத்தவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

ஆனால், தமிழ் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர் அமேசானில் இருக்கிறது.

இத்தொடர் ஒளிபரப்பானதுமே இயக்குநர் சேரன், இத்தொடருக்கு எதிராக ஆவேசமாகப் பேசினார்.

அவர் அப்போது வெளியிட்ட பதிவில், தமிழ் இனத்தின் விடுதலைக்கு போராடிய இயக்கத்தின் வரலாறை கொச்சைப்படுத்தி தவறாக சித்தரிக்கும் இந்த வெப்தொடரை புறக்கணிக்கிறேன். இந்த தொடரை உடனே நிறுத்தவும். நிறுத்தும்வரை அமேசான் ஃபிரைம் சந்தாதாரராக இருக்கவோ இணையவோ போவதில்லை.

என்று சொல்லியிருந்தார்.

சேரன் அப்படி அறிவித்தற்காக அவருக்கு ஏராளமானோர் பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.

அதன்பின் இயக்குநர் பாரதிராஜா உட்பட ஓரிருவர் மட்டும் அத்தொடரை எதிர்த்தனர்.

அப்புறம் அப்படியே விட்டுவிட்டார்கள்.

ஆனால், பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்கள் விடுவதாக இல்லை. இலண்டனிலுள்ள அமேசான் நிறுவனத்தின் தலைமையகம் முன் அத்தொடரை உடனே நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ததோடு அந்நிறுவனத்தில் கோரிக்கைக் கடிதமும் கொடுத்திருக்கிறார்கள்.

நாங்கள் இனப்படுகொலைக்கு ஆளானவர்கள் எங்களைத் தீவிரவாதிகள் என்று சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது, தொடரை நிறுத்தாவிட்டால் எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அறிவித்திருக்கிறார்கள்.

அங்கு நடந்த ஆர்ப்பாட்ட காணொலியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் இயக்குநர் சேரன்,இலண்டனில் அமேசான் நிறுவனம் முன் நடந்த இலங்கைத்தமிழர்களின் ஆர்ப்பாட்டம். இதுபோல் உலகின் முக்கிய நாடுகளில் எல்லாம் அங்கே வசிக்கும் தமிழர்கள் தொடர் போராட்டமாக நடத்த இருக்கிறார்கள் அந்த நாட்டின் விதிகளுக்கு உடபட்டு…

என்று கூறியிருக்கிறார்.

இதற்காக அவரைப் பலர் பாராட்டி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், நீங்கள் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்துகிறீர்கள் ஆனால் உண்மையில் உங்களை தவிர எஞ்சிய திரை உலகம் தூங்கி வழிகிறது. தங்களை ஈழ தமிழர்களின் பாதுகாவலர்களாக பல இடங்களில் சித்தரித்து கொண்டவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை.
குறைந்த பட்சம் ஒரு கூட்டறிக்கை இல்லை.

என்று வருத்தப்பட்டிருக்கிறார்.

Related Posts