தொடரும் துயரம் – சப்தம் படத்தை டிஜிட்டலில் வெளியிடத் தடை

இயக்குநர் அறிவழகன் இயக்கத்தில் படம் ஆதி கதாநாயகனாக நடித்த படம் சப்தம்.‘ஈரம்’வெற்றிக்குப் பிறகு 15 வருடங்கள் கழித்து இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ள படம் இது என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இந்தப் படத்தில் கதாநாயகியாக லட்சுமி மேனன் நடிக்க முக்கிய வேடங்களில் சிம்ரன், லைலா,எம்.எஸ்.பாஸ்கர், ராஜீவ் மேனன், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.அமானுஷ்ய திரில்லர் ஜேனரில் உருவான இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார்.
7ஜி ஃபிலிம்ஸ் சிவா தயாரிப்பில் உருவான இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி,தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தப்படம் பிப்ரவரி 28 அன்று வெளியாகிவிட்டது.ஆனால் தமிழ்நாட்டில் படம் வெளியாகவில்லை.
ஏனெனில்,இந்தப்படம் தயாரிப்பதற்காக வாங்கிய கடனை தயாரிப்பாளர் 7ஜி சிவா உரிய நேரத்தில் திருப்பிக் கொடுக்கவில்லையாம். இதனால் படம் தயாரிக்கப் பணம் கொடுத்த நிதியாளர் தடையில்லாச் சான்று கொடுக்கவில்லை என்று சொல்லப்படுகிறது.அதனால் திட்டமிட்டபடி பிப்ரவரி 28 காலை படம் வெளியாகவில்லை.
அதன்பின் படத்தின் நாயகன் ஆதி,இயக்குநர் அறிவழகன் ஆகியோர் பெரும்தொகையைக் கொடுத்து உதவியதால் படம் வெளியானது.
மார்ச் 1 ஆம் தேதி மதியக் காட்சியில் இருந்துதான் படம் திரையிடப்பட்டது. இதனால் இப்படத்துக்கு எதிர்பார்த்த திரையரங்குகள், வசூல் என கிடைக்கவில்லை. மேலும், இந்த தாமதம் படக்குழுவினரை பெரும் சிக்கலுக்கும் ஆளாக்கியது.
அதன்பின் சில் நாட்கள் கழித்து மார்ச் 9 அன்று ‘சப்தம்’ படம் குறித்து பதிவிட்ட இயக்குநர் அறிவழகன், “‘சப்தம்’ படத்தினை தாமதமாக வெளியிட்டு, விளம்பரமின்றி கொன்றார்கள். ஆனால் இரசிகர்கள் அப்படத்தினை கொல்லவில்லை. திரையரங்குகளுக்கு வந்து படம் பார்த்து, தொலைபேசி மூலமாக அனைவரும் பேசி ‘சப்தம்’ படத்துக்கு அன்பை பொழிந்த அனைவருக்கும் நன்றி. அந்த அன்புக்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறிக் கொள்கிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
அவர் நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும் தயாரிப்பாளர் 7ஜி சிவா மீதுதான் குற்றம் சொல்லியிருக்கிறார் என்று சொல்லப்பட்டது.
அந்தப்படத்தின் தயாரிப்பாளரின் தவறான அணுகுமுறைகளால் ஏற்பட்ட சிக்கல்கள் இன்னும் தீர்ந்தபாடில்லை.
அவருக்குக் கடன் கொடுத்திருந்த ஃபைனான்சிரியர் ஒருவர் கொடுத்த கடனைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.இவர் 7ஜி சிவாவுக்கு சுமார் மூன்றே கால் கோடி கடன் கொடுத்திருக்கிறார்.
அந்தப்பணத்தை பட வெளியீட்டுக்கு முன்பு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று சொன்ன 7ஜி சிவா சொன்னபடி நடந்து கொள்ளாததால் நீதிமன்றம் சென்றிருந்தார்கள்.
அந்த வழக்கு விசாரணையின் போது ஒரு நிறுவனத்திலிருந்து, தயாரிப்பு நிறுவனத்துக்கு சுமார் ஆறரை கோடி வரவேண்டியிருந்ததாம்.அதை அறிந்த நீதிமன்றம், ஒன்றேகால் கோடி வீதம் சில தவணைகளில் வழங்க வேண்டிய அந்தப்பணத்தை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டதாம்.
அதன்பின் நடந்த விசாரணைகளின் முடிவில் ஜூலை 2 ஆம் தேதி இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இப்படத்தின் டிஜிட்டல் ரிலீஸ் எனப்படும் இணைய ஒளிபரப்புக்குத் தடை விதித்து உத்தரவிட்டிருக்கிறார்.
ஏற்கெனவே இப்படத்தை இயக்கிய இயக்குநர்,இப்படத்தில் நடித்த கதாநாயகன் ஆகியோர் பணத்தை இழந்ததோடு உழைப்பும் வீணானதே என்று வருத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் வாங்கிய பணத்தை நியாயமாகத் திருப்பித் தராமல் நீதிமன்றம் வரை சென்று அவமானப்பட்டிருப்பதோடு படத்தின் டிஜிட்டல் ரிலீசிலும் சிக்கலை ஏற்படுத்தியிருப்பதால் எல்லோரும் தயாரிப்பாளர் 7ஜி சிவா மீது கொலைவெறியில் இருக்கிறார்களாம்.