Uncategorized செய்திக் குறிப்புகள்

மது இல்லாத இளைஞர்கள் படம் – ஜிகிரிதோஸ்த் கெத்து

பிக்பாஸ் புகழ் ஷாரிக் ஹசன், அம்மு அபிராமி, வீ.ஜே.ஆஷிக், பவித்ரா லஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தர்ராஜன், சிவம், மதுமிதா, ஆர்.என்.ஆர்.மனோகர், சரத், துரை சுதாகர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜிகிரிதோஸ்த்.

இயக்குநர் ஷங்கரிடம் ‘எந்திரன் 2.0’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றிய வி.அரன் இயக்கியுள்ளார்.அவரே தயாரித்துள்ள இந்தப்படத்தில் நடித்துமிருக்கிறார்.

இந்தப்படத்துக்கு இசை – அஷ்வின் விநாயகமூர்த்தி. சுதன் பாலா பாடல்களை எழுதுகிறார்.
ஆர்.வி.சரண் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். அருண் மொழி வர்மன் படத் தொகுப்பு செய்ய, மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி இயக்குநராகப் பணியாற்றுகிறார். தினா நடன இயக்கம் செய்கிறார்.

இயக்குநரும், நடிகருமான வி.அரன் படம் குறித்துக் கூறியதாவது….

நான் ஷங்கர் சாரிடம் 2.0 படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றியிருக்கிறேன். சில குறும்படங்களையும் இயக்கி இருக்கிறேன். அந்தப் படங்கள் சைமா உள்ளிட்ட பல விருதுகளையும் வென்றுள்ளன.

என்னுடைய குறும்படத்தைப் பார்த்துவிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரதீப் சார் படம் பண்ணலாம் என்று அழைத்தார். அதன்படி, பிரதீப் சார், என்னுடைய நண்பர் அர்ஜுன் ஆகியோருடன் இணைந்து இந்தப் படத்தை நான் தயாரித்துள்ளேன்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் அஷ்வினும் என்னுடைய நண்பர்தான். அதனால், ஜிகிரி தோஸ்த்துகளான நாங்கள் சேர்ந்துதான் இந்த ‘ஜிகிரி தோஸ்த்’ படத்தை உருவாக்கியிருக்கிறோம்.

பொறியியல் கல்லூரி மாணவரான நான் ஒரு டிவைஸை கண்டுபிடிக்கிறேன். அதன் மூலம் 500 மீட்டர் சுற்றளவில் நடக்கும் செல்போன் உரையாடல்களை ஒட்டுக் கேட்க முடியும். அப்படி நான் கண்டுபிடித்த அந்த தொழில் நுட்பத்தைச் சுற்றித்தான் கதை நகர்கிறது.

இடையில் கல்லூரி நண்பர்களின் ஜாலியான வாழ்க்கை, அந்த டிவைஸினால் ஏற்படும் பிரச்சினைகள். அதைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை விறுவிறுப்பாகவும், பரப்பாகவும் சொல்லியிருக்கிறேன்.

இப்படம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும் என்றார்.

நாயகி அம்மு அபிராமி கூறியதாவது….

நான் முன்னணி வேடங்களில் நடிக்கத் தொடங்கிய போது, நல்ல நல்ல கதைகள் வராதா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.அப்போது இந்தப் படத்தின் வாய்ப்பு கிடைத்தது. ஹீரோயின் என்பதையும் தாண்டி, ஹீரோ மற்றும் அவரது நண்பர்களுடன் நானும் ஒரு நண்பியாக நடித்ததுதான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.

நான் ஷாரிக்கின் காதலியாக நடித்திருந்தாலும், என்னுடைய வேடத்திற்கு என்று தனித்துவமான விசயம் இருக்கும். அதில் ஒரு சிறிய திருப்புமுனையும் இருக்கும். அதை இப்போது சொல்ல முடியாது. படத்தைப் பார்த்தால் நிச்சயமாக அது உங்களுக்குப் பிடிக்கும்.

தீவிரவாதம், தொழில் நுட்பம், கடத்தல் என்று பல விசயங்கள் இந்தப் படத்தில் இருக்கின்றன. அவை அனைத்தும் திரைக்கதையில் அழகாக ஒன்று சேர்ந்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்கிறது என்றார்.

நாயகன் ஷாரிக் ஹாசன் படம் பற்றிப் பேசும்போது…..

பிக்பாஸை முடித்துவிட்டு வந்தவுடன் இந்தக் கதையை அரன் என்னிடம் கூறினார். கதை சொன்னபோதே, ஜாலியாக இருந்தது. “மூன்று நண்பர்கள் அவர்களுடைய ஜாலியான வாழ்க்கை மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சில பிரச்னைகள்தான் கதை” என்றார். எனக்கும் அது பிடித்திருந்ததால் நடித்தேன்.

முதலில் என்னிடம், இந்தப் படத்தின் தலைப்பு ஜே.டி என்றார் அரன். ஜே.டி என்றதும் நான் நிறைய யோசித்தேன். சரக்கு பெயராக இருக்குமோ என்றுகூட யோசித்தேன். ஆனால், அதுவெல்லாம் இல்லை‘ஜிகிரி தோஸ்த்’ என்ற பெயரின் சுருக்கம்தான் ஜே.டி என்றார். மேலும்,சரக்கடிப்பது போன்ற காட்சிகள் படத்தில் எதுவும் இல்லை என்றார்.அப்ப ரொம்ப நல்லதாப் போச்சு வாங்க உடனே ஆரம்பிக்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

இந்தப் படத்தின் பலமே திரைக்கதைதான், அரன் என்னிடம் சொன்னதைவிட படத்தைச் சிறப்பாக இயக்கியிருக்கிறார். நிச்சயம் இந்தப் படம் எனக்கு நல்ல அடையாளத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்

இவ்வாறு அவர் கூறினார்.

Related Posts